மடையான்(Indian Pond-Heron)
நீர் நிலைகளின் அருகே மடையான்களை பார்க்க முடியும். தலையிலும் மார்பிலும் பழுப்பு நிறக் கோடுகள். உடலின் மேற்புறம் பழுப்பு . மஞ்சள் நிற கருவிழி . இனப்பெருக்க காலத்தில் தலையும் உடலும் ஆரஞ்சு நிறத்திலும், முதுகு செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். தலையில் இருந்து நீண்ட மெல்லிய இறகுகளும் முளைக்கும்.மஞ்சள் நிற கூர்மையான அலகின் நுனி கருப்பு. மடையான் நீர்நிலைகளின் ஓரம் தன் கழுத்தை குறுக்கிக்கொண்டு காத்திருக்கும். மீனைப் பார்த்தவுடன் சட்டென்று கழுத்தை நீட்டி மீன் பிடிக்கும்.

© Indranil Bhattacharjee
ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை.அமர்ந்திருக்கும் போது பழுப்பு நிறமாக தோன்றினாலும், பறக்கும்போது வெள்ளை நிறமாக தெரியும். கழுத்திலும் மார்பிலும் பழுப்பு நிறம் தெரிவதை வைத்து மடையான் என்று அடையாளம் காணலாம். பெரும்பாலான நேரம் மிகவும் அமைதியாக இருக்கும். அவற்றின் உருமறைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதால், அது பறந்து செல்லும் வரை கண்ணில் படாமலிருக்க வாய்ப்புள்ளது. இக்காரணத்தால் இதற்கு குருட்டு கொக்கு என்றோரு பெயரும் உண்டு.
படித்தறிந்தது
- பெர்ஷிய வளைகுடாவில் தொடங்கி இந்திய துணை கண்டத்திலும், லச்சத்தீவுகளிலும், அந்தமான் தீவுகளிலும் காணப்படுகிறது.

- பல நீர்ப்பறவைகள் சேர்ந்து கூடு கட்டும் இடத்தின் ஓரமாக, ஆண் பறவை குச்சிகளை சேகரித்து கொண்டு வர, பெண் பறவை கூடு கட்டுகிறது. பாதுகாப்பான இடமாக அவை நினைத்தால் , அடுத்த இனப்பெருக்க காலத்திலும் அந்தக் கூட்டை பயன்படுத்தும். நான்கு முட்டைகள் இட்டு , 24 நாட்கள் ஆண் பெண் பறவைகள் சேர்ந்து அடைகாக்கும்.

- பேரின பெயரான Ardeola – Ardea என்று நாரையை (Heron) குறிக்கும் லத்தின் சொல்லிருந்து வைக்கப்பட்டுள்ளது . இதன் சிற்றின பெயரான grayii – ஜான் எட்வர்ட் கிரே( John Edward Gray) என்ற பிரித்தானிய விலங்கியலாளரை குறிக்கிறது. 1840 ஆம் ஆண்டு தொடங்கி, 34 ஆண்டுகள் லண்டனில் உள்ள பிரித்தானியா அருங்காட்சியகத்தில், விலங்கியல் துறை தலைவராக பணியாற்றினார். 300க்கும் அதிகமான ஊர்வன இனங்களை அடையாளப்படுத்தியுள்ளார். Ardeola grayii – சிறு நாரை, கிரே நினைவாக பெயரிடப்பட்டுள்ள பறவை.
