காலை நடை செல்லும் போது, டான் போஸ்கோ பள்ளியின் பின்புறம், பல பறவைகளை பார்த்திருக்கிறேன். Dawn Chorus நிகழ்ச்சிக்கு, அங்கு சென்று பறவைகளின் குரல்களை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தேன். காலையில் நானும் தேவும் அங்கு சென்றோம். தெருவில் நுழைந்தவுடன் ஒரு கம்பத்தில் அமர்ந்திருந்த வல்லூறு எங்களை வரவேற்றது. அங்கிருந்து பறந்து ஒரு வேப்ப மரத்தில் சென்று அமர்ந்தது . சாலையின் ஓரத்தில் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். மைனா மற்றும் சின்னான்கள் இருந்தன.

நீல வால் பஞ்சுருட்டான்
தினமும் காலையில் மின்சார கம்பியில் நீல வால் பஞ்சுருட்டான்களை பார்ப்பேன். அந்த இடத்தில் காத்திருந்தோம். ஆறு பறவைகள் வந்தன. பொதுவாக பறவைகளின் மேல் காதல் இருந்தாலும், சில பறவைகள் மேல் கூடுதல் காதல் வந்து விடுகிறது. எனக்கு அப்படிப்பட்ட பறவைகளில் ஒன்று பஞ்சுருட்டான் . சிறகை விரித்து காற்றில் மிதந்து பறப்பது, கம்பிலிருந்து நீருள் பாய்வது போல் குதிப்பது, பூச்சியை பிடித்து சென்று கம்பியில் அமர்வது, அலகை கம்பியில் தேய்ப்பது என்று ஒவ்வொன்றும் ஒரு அழகு. பூச்சியை துவம்சம் செய்து உண்பதை மட்டும், அதனுடைய இயற்கை என்று கடந்து விடலாம். என்னை விட்டால் நான் அங்கேயே நின்று விடுவேன் என்பதால் தேவ் , ‘வாம்மா. வேறு இடத்துக்கு போகலாம் ‘ என்று இழுத்துச் சென்றான்.

பயமில்லாத சிறு பறவைகள்
கௌதாரியின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. மிக அருகில் ஒரு மணல்மேட்டில் இரண்டு கௌதாரிகள் நின்றிருந்ததை பார்த்தோம். கல்லுக்குருவி ஜோடியை பார்த்தோம். தார் சாலையில் ஆண் கல்லுக்குருவி அமர்ந்திருந்தது. உரு மறைப்பினால் அருகில் மண்சாலையில் அமர்ந்திருந்த பெண் கல்லுக்குருவி தெரியவில்லை. நாங்கள் அருகில் சென்றதும், சட்டென்று பறந்து மின்சார கம்பியில் சென்று அமர்ந்தது. அவ்வளவு அருகில் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. முன்னரே இதை கவனித்திருக்கிறேன். இங்கிருக்கும் சிறு பறவைகள், மற்ற இடங்களை விட இங்கு, நமக்கு மிக அருகிலேயே வந்து பயமில்லாமல் அமர்கின்றன. மிக அருகில் செம்பருத்தி செடியில் தையல் சிட்டை பார்த்ததும் இங்குதான். வேப்ப மரத்தில் படர்ந்திருந்த கொடியின் பழங்களை செவ்வலகு பூஞ்சிட்டு கொத்தி உண்டது.
கருஞ்சிட்டும் கல்லுக்குருவியும்
கருஞ்சிட்டையும் கல்லுக்குருவியையும் ஒரே இடத்தில் பார்த்தோம். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாகத் தெரிந்தது. கல்லுக்குருவியை விட கருஞ்சிட்டு சற்றே பெரிதாக இருக்கிறது. கருஞ்சிட்டின் வாலடி செம்பழுப்பு. கல்லுக்குருவியின் வாலடி வெள்ளை. பாடலிலும் வேறுபாடு இருக்கிறது. Merlin சரியாக அடையாளம் காட்டுகிறது.
வெண்தொண்டைச் சில்லை (Indian Silverbill)
மூன்று வெண்தொண்டைச் சில்லைகள் மின்சார கம்பியில் வந்த அமர்ந்தன. பளபளப்பான அகலமான தானியம் உண்ண உதவும் அலகு. தொண்டையும் உடலின் அடிப்புறமும் மங்கலான நிறம். தலையும் உடலின் மேற்புறமும் பழுப்பு நிறம். உடலில் இருந்து வால் சற்று தனியாக இருப்பது போல் ஒரு தோற்றம். அவை பறந்து சென்று கட்டிடத்தில் வாயிலில் அமர்ந்தன. மறுபடியும் பறந்து புதருக்குள் சென்று மறைந்தன.

வேலிக்கதிர் குருவி
மயில், வெண்மார்பு மீன் கொத்தி ஆகியவற்றின் குரல்களை கேட்டோம். வேலிக்கதிர் குருவி பார்த்தீனியம் செடியில் இருந்து மஞ்சணத்தி செடியில் சென்று அமர்ந்தது. ‘கர் கர்’ என்று ஒலி எழுப்பியது. ஒரு கிளையிலிருந்து மற்றோரு கிளைக்கு குதித்து குதித்து சென்றது. காலை வெயிலில் அதன் ஒல்லியான அலகு , வெளிர் அடிப்புறம் மற்றும் சிறிய வால் தெளிவாக தெரிந்தது. பாக்குப்பனை (Royal Palm Tree) மரத்தின் குருத்தில் தொற்றி நின்ற பச்சைக்கிளி, எங்களுக்கு விடை கொடுத்தது.

பறவை பட்டியல்கள்
One thought on “அதிகாலை சங்கீதம்”
Comments are closed.