தூவித்தோழர்கள்-39

வெண்மார்பு மீன் கொத்தி(White-throated Kingfisher)

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சென்றிருந்தபோது, தொடர்ச்சியாக காலையிலும் மாலையிலும் வெண்மார்பு மீன்கொத்தியின் குரலை கேட்க முடிந்தது. எங்கு வெளியில் சென்றாலும், மற்ற பறவைகளின் குரலை தாண்டி, இதன் குரல் கேட்டது. மின்சாரக் கம்பியில் அமர்ந்திருந்ததை பார்க்கவும் முடிந்தது. தலை மற்றும் அடிவயிறு பழுப்பு நிறம் . முதுகுப்பகுதி அழகிய நீலம். தொண்டை வெள்ளை. நீண்ட, அகலமான சிவப்பு அலகு மற்றும் கால்கள். பெண் பறவையின் பழுப்பு நிறம் சற்று மங்கி இருப்பதை தவிர வேறு வேறுபாடு இல்லை. ஏரிகள், குளங்கள், விவசாய நிலங்கள் போன்ற இடங்களின் அருகில் வாழ்கிறது. மீன் கொத்தி என்று கூறினாலும், இவை மீனைத் தவிர, தவளை, தேரை, நண்டு, நத்தை, புழு, பூச்சிகள் என்று பலவற்றை உண்ணுகின்றன.

©Prem Raut

மார்ச் மாதம் வெள்ளி மலையில் பள்ளத்தில் உள்ள கல்மேடையில் காலை வேளையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பாறை அருகில் உள்ள மரத்தில் ஒரு வெண்மார்பு மீன்கொத்தி வந்து அமர்ந்தது. பார்த்து கொண்டிருக்கும் போதே, அதன் கச்சேரியை ஆரம்பித்தது. முதல் முறையாக அவ்வளவு அருகில் பார்க்க முடிந்தது. மெர்லினில் பதிவு செய்தேன் . பாடி முடித்தபின் மலையை நோக்கி பறந்து சென்றது. ஒரு நொடி மனம் வெறுமையை உணர்ந்தது. (ஒலிப்பதிவு)

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டம், தென் கிழக்கு சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் கடற்கரையோரம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஐந்து துணை இனங்கள் பட்டியலிடபட்டிருக்கின்றன .
©BOW
  • இப்பறவையின் இறகுகள் சீன உடைகளிலும், தொப்பியிலும் அலங்கார பொருளாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வேடர்கள் பாடம் செய்யப்பட்ட பறவையை வலையில் வைத்து காத்திருக்கிறார்கள். மீன் கொத்தி அந்த பொம்மையை எதிரி என்று நினைத்து, அதீத கோபத்தில் சண்டையிட வந்து மாட்டிக்கொள்கிறது. (Source)
  • Halcyon- இதன் பேரினப்பெயர் கிரேக்க தொன்மத்தில் காணப்படும் பறவையை குறிக்கிறது. அது கடல் அருகில் கூடு கட்டி வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இப்ப பறவையை நேசிக்கும் கடவுளர்கள், குஞ்சுகள் வளரும் வரை கடலை அமைதியாக வைக்கிறார்கள். அந்த நாட்களை ‘halcyon days’ என்று அழைக்கிறார்கள். smyrnensis – இதன் சிற்றின பெயர் துருக்கியில் காணப்படும் Smyrna / Izmir என்ற நகரத்தை குறிக்கிறது . Halcyon smyrnensis – தொன்மத்தில் சொல்லப்பட்ட மர மீன்கொத்தி துருக்கியின் Smyrna நகரில் முதலில் ஆவணப்படுத்தப்பட்டது.

தகவல்கள் வரைபடமாக ஆங்கிலத்தில் . நன்றி : roundglass sustain