மங்களம்

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – மணிமங்கலம் ஏரி – காஞ்சிபுரம் – 28.03.2026

Robert Zemeckis இயக்கி Tom hanks நடித்த ‘Cast away’ எனும் படத்தில் ஒரு காட்சியுண்டு. சரக்குவிமான விபத்தில் உயிர் பிழைத்து, ஒரு ஆளில்லாத தீவில் கரையொதுங்கும் நாயகன், தன்னுடன் சேர்ந்து கரையொதுங்கும் பொருட்களை, அதன் உறையைப் பிரித்து ஒவ்வோன்றாக நோக்கி அந்த தீவில் உயிர்வாழ அப்பொருட்கள் எந்த வகையில் உதவும் என்று பார்த்துக் கொண்டிருப்பார். அப்பொழுது ஒரு பொதியை பிரித்துப் பார்ப்பதற்காக எடுப்பார். பிரிக்க முயல்கையில், அந்த உறையின் மேல் ஏதோ வரையப்பட்டிருக்க, அதைப் பார்த்தபடி சற்று நேரம் இருந்துவிட்டு பின் அதன் உறையைப் பிரிக்காமல் பத்திரப்படுத்திக் கொள்வார். இறுதியாக அதில் வரையப்பட்டிருந்ததுதான் அவர் தீவிலிருந்து வெளியேறக் காரணமாய் அமையும்!

விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம் குழுவினர்

கடந்த வாரம் பெங்களூருவிலிருந்து  ராமகிருஷ்ணன் சார், தான் சென்னை வரவிருப்பதாகவும், முடிந்தால் நாம் இணைந்து பறவைகள் பார்க்கச் செல்லலாம் எனக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் AWC அறிக்கைக்காக நண்பர்களின் பட்டியல்களை பார்த்துக் கொண்டிருந்தபோது இவரின் பட்டியல்களைப் பார்த்து வியந்திருந்தேன். நம் குழுமதிலேயே அதிகமான AWC பட்டியல்களை இவர் பதிவுசெய்திருந்தார். இதே போல் கோவிந்த் சாரும் அழைத்து நாம் பறவைகள் பார்க்கச் சென்று மாதங்களாகிறது எனச் சொல்ல, இந்தப்பயணத்திற்கான விதை விழுந்தது.


இதுவரைப் பார்க்காத, சமீபத்தில் நிறைய பறவைகள் அவதானிக்கப்பட்டிருந்த மணிமங்கலம் ஏரியை பயண இடமாகத் தேர்ந்து கொண்டு, நாளையும், இடத்தையும் விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம் குழுவில் அறிவித்திருந்தோம். விஷ்ணு, தான் இணைவதாகவும், உடன் ஒரு ஆச்சரியமும் உண்டு எனவும் தெரிவித்திருந்தார். 28-ஆம் தேதி காலை ஏரியை அடைகையில் அந்த ஆச்சரியம் காத்திருந்தது. அன்று வேலையிருப்பதால் பறவைப் பார்த்தலில் இணைய வாய்பில்லை என சொல்லியிருந்த விஜயபாரதி சார், மகள் அகல்யாவுடன் வந்திருந்து இன்ப அதிர்ச்சியளித்தார். உடன் பிரீத்தி அவர்கள், தன் குடுப்பதினருடன் வந்திருந்தார். இவ்வாறாக மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பறவைப் பார்த்தல் துவங்கியது.

சாம்பல் கதிர்சிட்டு (Ashy priniya) PC – Ramakrishnan.

ஏரியின் கரையிலிருந்த சிறு படிகளினூடாக ஏறி மேலே செல்தவற்கு முன்பே ஏராளமான பறவைகள் கரையைச் சுற்றிச் செறிந்திருந்த மரங்களிலும், புதர்களிலுமிருந்து குரல் கொடுத்து அழைத்து எங்களை நகரவிடாமல் செய்து கொண்டிருந்தன. கரையில் விதவிதமான பறவைகளைப் பார்த்தோம் ஊதா, ஊர் & லோட்டன் தேன்சிட்டுகள் (Purple, Purple rumped, Loten’s sun bird). சின்னான் & வெண்புருவச் சின்னான் (Red wented & White browed bulbul). ஒரு செண்பகம் கூவியபடி ஒன்றிலிருந்து மற்றொரு புதருக்குத் தாவிக் கொண்டிருந்தது. தையல் சிட்டு (Common Tailorbird), கதிர்கருவி (Plain priniya) எனப்பார்த்தபடி இருந்த எங்களுக்கு, வாகனத்திலிருந்து இறங்கியதும் முதலில் பார்த்தப் பறவையான சாம்பல் கதிர்குருவி (Ashy priniya) தான் இந்நாளை ஆளப்போகிறது என்பது அப்போது தெரியாது.

வெண்புருவச் சின்னான் (White browed bulbul) PC – Ramakrishnan

கரையின் மேலே ஏறிய எங்களுக்கு ஏரியில் நீர்ப்பறவைகள் இல்லாதது வருத்தமளித்து. கரையின் இருபுறமும் முன்னேறிச் செல்ல முடியாதபடி புதர்களும், அதை சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட மனிதற்களின் எச்சங்களும் தடுத்தன. வேறு வழியற்று கீழே இறங்கினோம். குடி நம் சமூகத்தில் வேரோடியிருப்பது தெரிந்ததுதான் என்றாலும், காலை ஏழு மணிக்கெல்லாம் குடிப்பார்கள் என்பது அதிர்ச்சியான அனுபவத் தகவல். விடிந்தாலும் தங்கள் வாழ்வில் ஒளியே எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள். கரையைச் சுற்றி அவ்வளவு நெகிழிக் குவளைக் குப்பைகள்! கண்ணாடி குப்பிகள்!! குடி தனக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும், சமூகத்தையும், இயற்கையையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது.

இளம் சாம்பல் கதிர்குருவிகள் (Juvenile Ashy priniya)

தொடங்கிய இடத்திற்கே திரும்பியபோது, விஜய் சார் அங்கிருந்த ஒரு புதருக்குள் சாம்பல் கதிர்குருவி தன் வாயில் கவ்விய பூச்சியுடன் சென்று, சென்று திரும்பிக் கொண்டிருப்பதைக் காட்டினார். சற்றே தேடியபோது புதரினுள் மேலுமிரு கதிர்குருவிகள் இருப்பதைக் கண்டோம். மூன்றும் ஒரே அளவிலிருந்தன. இல்லை, உண்மையில் புதரினுல் இருந்தவை சற்றே உப்பி பெரியவை போலிருந்தன. ஆனால் அவற்றின் அசைவிலிருந்தும், குரலிலிருந்தும் அவை மழலைகள் எனப் புரிந்து கொண்டோம். இக்காட்சி எனக்குள் ஆகிருதி பற்றிய ஆதாரமான கேள்வியை எழுப்பியது. தாய், சேய் என நான் இதற்குமுன், பெரிய உயிர்,  தான் பெற்ற சிறிய உயிரை, அதுவாக பிழைத்துக் கொள்ள முடியும் எனும் நிலை வரை பேணிக்காப்பது எனப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த பெரிய, சிறிய எனும் அளவுகோல் உடலுக்கல்ல எனில் தாய், சேய் எனும் உறவை உருவாக்கி, நீட்டிக்கும் அந்த ஒன்று எது? உள்ளமா? திறனா? உயிர்கள் அதை எவ்வாறு அறிகின்றன??

தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்

அருகிலிருந்த தேனீர் கடையின் முன்னே, விஜய் சார் Spotting scope-ஐ குஞ்சுகளை நோக்கி இருக்கும்படி பார்வைவட்டத்தை சரிசெய்து அமைத்தார். நாங்கள் ஒவ்வொருவராக இளம் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பின் அருகிலிருந்தவர்களிடம் விசாரித்து ஏரியை வேறு திசையிலிருந்து அணுகலாம் எனத் தெரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். 

பட்டானி உப்புக்கொத்தி (Little ringed plover) PC – Jaishree

நான்கு வாகனங்களில் அங்கிருந்து கிளம்பிய நாங்கள் தற்செயலாக இரண்டு குழுக்களாகப பிரிந்தோம். ஒரு குழு அருகிலிருந்த சிவன் கோயில் குளத்திற்கு சென்று அங்கு கூடு வேய்ந்து கொண்டிருந்த தூக்கனாங்குருவிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் ஏரியைச் சுற்றிச் சென்று அதன் வடக்கு மூலையை அடைந்தோம். அங்கே நீர்பறவைகளிருந்ததால் முதல் குழுவினரும் கோவில் குளத்திலிருந்து கிளம்ப மனமின்றி கிளம்பி நாங்களிருந்த இடத்திற்கு வந்தனர். நாங்கள் வாகனத்தைவிட்டு இறங்கக்கூட இல்லை, எங்கிருந்ததென தெரியாமல் பறந்து வந்த பட்டானி உப்புக்கொத்தி (Little ringed plover) ஒன்று எங்களுக்கு மிக அருகே சிறுநடையிட்டு முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தது. வெண்புருவ வாலாட்டியும், மஞ்சள் வாலாட்டியும் (White browed wagtail,  Wester yellow wagtail) பெயருக்கேற்றார்போல வாலையாட்டியபடி திரிந்து கொண்டிருந்தன.

ஏரியிலிருந்த மின்கோபுரத்தில் ஏராளமான சிறிய நீர்காகங்கள் (Litttle cormorant) இருந்தன. அவற்றின் இடையிடையே பாம்புத் தாராக்கள் (Oriental Darter) மற்றும் சாம்பல் நாரைகள் மறைந்திருந்தன (Grey heron). ஒரு வல்லூறு (Shikra) சிறு சிறு வட்டங்களை வானில் வரைந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது.

பொறி மீன்கொத்தி (Pied kingfisher)

நேரம் ஒன்பதரையைக் கடந்திருந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் களத்திலிருக்கிறோம். எனவே முடித்துக் கொள்வோம் என முடிவு செய்தோம். ஆனால் அம்முடிவை எடுத்த இடம்தான் தவறாகிப் போனது. அது மணிமங்கலம் ஏரியில் பறவைகள் அணிவகுப்பு நடத்தும் இடம் போல. சிறு நீல மீன்கொத்தியை (Common kingfisher) நோக்கியிருந்த spotting scope-ஐ எடுத்துக் கொண்டு கிளம்ப முயல்கையில், திடீரென ஓர் வெண்மார்பு மீன் கொத்தி (White throated king fisher) அங்கே வந்தமர்ந்தது. ஐந்து நிமிடங்கள் நொடியெனப் பறந்தது. மீண்டும் கிளம்ப முயல, இப்போது சாதா உள்ளான் (Common sandpiper) அந்த இடத்தைப் பிடித்து. அடுத்த ஐந்து நிமிடங்கள். மீண்டும் தலையை வழியை நோக்கித் திரும்பவிடாமல் பொறி மீன்கொத்தி (Pied kingfisher) அதே இடத்தில், வானில் தோன்றியது.

வல்லூறு (Shikra)

அனைவரும் சிரித்துக் கொண்டோம். இப்படியே போனால் முடியாதென scope-ஐ கழற்றி எடுத்துக் கொண்டு, ஒரு குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டு கிளம்புகையில், வானிலிருந்து தரையிலிருந்த இரையைக் கவ்வப்போவது போல ஒரு வல்லூறு (Shikra) மிகத் தாழ்வாக கடந்து சென்று, சற்று தொலைவிலிருந்த நாணல் கூட்டத்திற்குள் புகுந்தது. அனைவரும் திகைத்து நின்று, என்ன செய்வதென சற்றே யோசித்து, பின் உணவகத்திற்கே கிளம்புவோம் என வாகனத்தை எடுத்ததில் அகல்யாவிற்கு கொஞ்சம்… இல்லை, இல்லை, பெருத்த ஏமாற்றம்தான்.

குமரித்துறைவி நாவலின் நிறைவில் மணப்பெண் மீனாட்சி, தன் வைரவளையலை அங்கேயே விட்டு மதுரைக்குச் செல்ல, அதை அறியும் அனைவரும் மகிழ்ந்து, சிரித்து, வெறிக் கூச்சலிடுவர். கதையின் மங்கள நிறைவது. உடைமையொன்றை விட்டுச் செல்வது எப்படி மங்களமாகும்? விட்டுச் செல்வதென்பது, இருப்பின், தொடர்ச்சியின், நம்பிக்கையின் குறியீடு. அது இங்கிருக்கும் வரை நானும் இங்கிருக்கிறேன் என்பதும், விட்டுச் செல்வதை நோக்கி நான் திரும்பி வந்து கொண்டேயிருக்கிறேன் என்பதுமாக அதைப் புரிந்து கொள்ளலாம். மணிமங்கலம் ஏரியில், இறுதியில் வந்த வல்லூறு ஒரு விட்டுச் செல்லல்தான். அதை நோக்கிய எங்கள் பயணங்கள் தொடர்வதாகுக.

Cast Away படத்தில் நாயகன் பிரிக்காமல் விட்ட அந்த பொதியில்  வரையப்பட்டிருந்ததும் தன் இருப்பின், அதன் தொடர்ச்சியின், நம்பிக்கையின் குறியீடுதான்.

அது, ‘சிறகுகள்!’

பறவைகளை நோக்கிய நம் அத்தனை பயணங்களும் அவற்றைப் போலவே நாமும் சிறகு கொள்ளத்தானே?

eBird பட்டியல்:
1. https://ebird.org/checklist/S313932541
2. https://ebird.org/checklist/S313934375

லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
29.03.2026