வெண்புருவ சின்னான்(White-browed Bulbul)
வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்த போது தான், இப்பறவையை முதன் முதலில் பார்த்தேன். பெண்ணாடம் வீட்டருகில் தினமும் வருகிறது. வெள்ளி மலையில் தொலைவில் பார்த்த பறவையை, அருகில் கருவேப்பிலை மரத்தில் ஜோடியாக பார்த்தேன். கூச்சலிட்டுக்கொண்டு இங்கிருந்து தூங்கு வாகை மரத்திற்கு பறந்தது. அங்கிருந்து மறுபடியும் இங்கு வந்து அமர்ந்தது. இதை தொடர்ந்து சிறிது நேரம் செய்த பின் பறந்து விட்டது.

வெண்ணிற புருவம். குட்டையான அகலமான அலகு . இடலை பழுப்பு நிற மேல்புறம். அழுக்கு நிற அடிப்புறம். அலகின் அடிப்புறமும், வாலடியும் மஞ்சள். ஆண் பெண் பறவைகளுக்கிடையே வேறுபாடு இல்லை. அனுவாவி முருகன் கோவில் சென்ற போது, மலை அடிவாரத்தில் மிக அருகில் பாறையில் அமர்ந்திருந்தது. எத்தனையோ முறை பார்த்த பறவையாக இருந்தாலும், கைக்கெட்டும் தூரத்தில் பார்ப்பது மறக்க முடியாத கணமாக மனதில் பதிந்து விடுகிறது.

படித்தறிந்தது
- தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும், வலசை செல்லாத பறவை. இரண்டு துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றொரு துணையினம் இலங்கையில் காணப்படுகிறது.

- வேர், காய்ந்த இலை, குச்சி, புல் வைத்து கிண்ண வடிவ கூட்டை கட்டுகிறது. பெரும்பாலும் இரண்டு, சில சமயம் மூன்று முட்டைகளை இட்டு , 11 நாட்கள் வரை அடைகாத்து, குஞ்சு பொரிக்கிறது.

- Pycnonotus – Pyknos என்ற கிரேக்க சொல்லுக்கு அடர்த்தியான என்றும், nōton என்றால் பின்புறம் என்றும் அர்த்தம். luteolus– இதன் லத்தீன் சிற்றின பெயருக்கு luteus –மஞ்சள் நிறம் என்று அர்த்தம் . Pycnonotus luteolus – அடர்த்தியான பின்புறத்தையும் , மஞ்சள் நிற வாலடியும் கொண்ட பறவை.