தூவித்தோழர்கள்-41

குயில் (Asian Koel)

வீட்டின் அருகில் மிக எளிதாக காணக்கூடிய பறவை குயில். ஜோடியாக தூங்குவாகை மரத்தில் அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். பறந்து செல்லும் பெண் குயிலின் பின்னாலேயே, ஆண் குயில் செல்லும். வேகமாக இறக்கையை அடித்துக் கொண்டு நேர்கோட்டில் பறக்கும். காகத்தைப் போன்ற கரிய உடம்பு. சிவப்பு நிறக் கண். அகலமான கூர்மையான அலகு. பழுப்பு நிறத்தில் வெண் வரிகளும், வெண் புள்ளிகளும் கொண்டிருப்பது பெண் பறவை. காலையும் மாலையும் இவற்றின் கூவுதலை தொடர்ச்சியாக கேட்க முடியும்.

ஆண் குயில் ©Abhijeet Rasal
பெண் குயில் ©Prashobh Ailyam Nair

சொர்க்கம், வேம்பு ஆகிய மரத்தின் பழங்களை உண்பதை பார்த்திருக்கிறேன். அப்பழத்தின் கொட்டை தொண்டையில் இறங்குவதை பார்க்க முடியும். காட்டுக்குள் சந்தன மரங்கள் பரப்புவதில் குயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன . ஜெ ‘பறக்கும் புல்லாங்குழல்‘ என்ற கட்டுரையில் பாடும் குயிலை மிக அருமையாக விவரித்திருப்பார்.

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டம், கிழக்கு சீனா, தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய தீவுகளில் காணப்படுகின்றன. பருவநிலை மாற்றத்தால் இவற்றின் வாழிடம் சீனாவில் இருந்து வடக்கு நோக்கி விரிவடைந்து கொண்டே வருகிறது. ஆறு துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பறவைகள் வலசை செல்வதில்லை . சில துணையினங்கள் இரவு நேரங்களில் வலசை செல்கின்றன.
©BOW
  • தமிழில் குயில், ஆங்கிலத்தில் Koel, சமஸ்கிருதத்தில் கோகிலா என்று பல மொழிகளில் இதன் பெயர், கூவும் குரலில் இருந்து வைக்கப்பட்டிருக்கின்றன. மனு ஸ்மிரிதியில் இது பாதுகாக்கப்பட வேண்டிய பறவையாக கூறப்பட்டுள்ளது. வேதத்தில் இது  Anya-Vapa (மற்றவர்களால் வளர்க்கப்பட வேண்டிய) என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அடையுருவிக்கான(Brood Parasitism) மிகத் தொன்மையான குறிப்பு இதுதான். புதுச்சேரியின் மாநில பறவை இது. பழங்காலத்தில் கூண்டு பறவையாக வளர்க்கப்பட்டது. குயிலின் கூவுதல் இலங்கை புத்தாண்டுக்கு மிக முக்கியமான ஒரு அம்சமாகும்.
  •  Eudynamys என்ற பேரினப் பெயர் Eu (சிறந்த ) மற்றும் Dynamis (வலிமை ) என்ற இரு சொற்களால் ஆனது. scolopaceus என்ற இனப்பெயருக்கு வரிப்புள்ளிகள் உடைய Snipe (உள்ளான் குருவி) போன்ற என்று அர்த்தம். Eudynamys scolopaceus – மிகச்சிறந்த வலிமையும், வரி புள்ளிகளையும் உடைய பறவை.