தூவித்தோழர்கள்-42

ஊதாத் தேன்சிட்டு(Purple Sunbird)

வீட்டருகில் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளுள் ஒன்று. காலையும் மாலையும் ஜோடியாக தூங்குவாகை மரத்திற்கு வரும். அதன் குரலை தொடர்ச்சியாக கேட்க முடியும். ஓரிடத்தில் நில்லாமல், பறந்து கொண்டே இருக்கும். ஆண் பறவை மின்னும் கரு ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். உண்மையில் இதன் நிறம் ஊதா அல்ல. இதை விளக்கும் அருமையான காணொளி. இறகுதிர் காலத்தில் மஞ்சளும் கலந்து இருக்கும். பெண் பறவையின் மேல் புறம் அடர் நிறத்திலும், அடிப்புறம் மங்கலான நிறத்திலும் இருக்கும். இதன் அலகு, நீண்ட குழாய் போல உள்ள பூக்களில் இருந்து மலரமுது உண்பதற்காக ஒல்லியாக நீளமாக உள்ளது. மகரந்த சேர்க்கையிலும் தேன் சிட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. பொள்ளாச்சி தோட்டத்தில் கற்றாழை மலரின் மலரமுதை பறந்து கொண்டே உண்பதை காண முடியும்.

இறகுதிர் காலத் தோற்றம் ©Ramesh Desai

என் கணவரின் ஊருக்கு(தென்காசி மாவட்டம்) சென்றபோது, முதல் மாடியில் நின்று கொண்டிருந்தேன். வெளியிலிருந்து இதன் குரல் கேட்டது. பெண் ஊதாத் தேன்சிட்டு கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் பூச்சி பிடித்து உண்டது. அலகைத் திறந்து வைத்திருந்தது. நடுநடுவே சத்தமிடுவதும், சிறு பூச்சிகளைப் பிடித்து உண்பதுமாக இருந்தது. மிக அருகில் பார்த்தது மறக்க முடியாத தருணம். பறந்து செல்லும் போது, கண்ணாடியை இருமுறை கொத்திவிட்டு சென்றது, ஜெ வின் ‘தற்சிறை‘ கட்டுரையை நினைவுபடுத்தியது. ஒரு நாள் முழுவதும், இப்பறவை கண்ணாடியை கொத்திக் கொண்டிருந்ததை கவித்துவமாக விவரித்திருப்பார்.

பெண் ஊதாத் தேன்சிட்டு

படித்தறிந்தது

  • இந்தியதுணைக்கண்டத்தில் காணப்படும், வலசை செல்லாத பறவை. மூன்று துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
©BOW
  • 5 முதல் 15 நாட்களில் புல், நார் இவற்றை வைத்து சிறிய கூட்டை கட்டும். ஒன்று முதல் மூன்று பழுப்பு நிற வரிகள் கொண்ட முட்டைகளை இடும். 13 முதல் 17 நாட்கள் வரை அடைகாக்கும். சக்களத்திக் குயில் இதன் கூட்டில் முட்டையிடும்.
©Johanne Berger
  • Cinnyris – Hesychius எழுதிய கிரேக்க வரலாற்று நூல்கள், kinnuris என்ற பெயர் தெரியாத சிறிய பறவையை குறிப்பிடுகின்றன. கிரேக்க தொன்மத்தின் சைப்ரஸ் நாட்டை ஆண்ட மன்னன் Cinyras ஆவான். Aproditeன் சாபத்தால், அவருடைய பெண் Myrrha, அவர் மேல் காதல் கொள்கிறாள். இருவருக்கும் பிறக்கும் குழந்தை Adonis என்று கூறப்படுகிறது. இந்த இரண்டில் ஏதோ ஒன்றின் காரணமாக இதன் பேரின‌ பெயர் Cinnyris என்று வைக்கப்பட்டிருக்கிறது. சிற்றின பெயர் ஆசியாவில் இப்பறவை காணப்பட்டதால் வைக்கப்பட்டுள்ளது. Cinnyris asiaticus- சிறிய பறவை; ஆசியாவில் காணப்படுகிறது. (Source : BOW)