பறவைப் பார்த்தல் அனுபவக்குறிப்பு – கொரட்டூர் ஏரி – சென்னை – 22.04.2026
அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது
அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை
– ஆனந்த்
நமக்கு விசேஷமான நாட்கள் பல உண்டு. பிறந்த நாட்கள், பண்டிகை நாட்கள், திருவிழா நாட்கள், வார இறுதியில் வராத அரசு விடுமுறை நாட்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்களும், அலுவலர்களுக்கு உயரதிகாரிகளும் வராத நாட்கள் என வருடத்திற்கு சில சமயம் 366 நாட்கள் வருவதுண்டு. அவற்றில் ஒன்றென, எதிர்பாராவிதமாக நான் எதிர்கொண்ட இந்நாளுக்கு ‘உலகப்புவி நாள்’ என பெயர் சூட்டியிருந்தனர்.
இன்று, சொந்த காரியமாக அரை நாள் விடுப்பெடுத்துக் கொண்டு, அதில் ஒரு அரைமணி நேரத்தை பறவைப் பார்த்தலுக்காக ஒதுக்கி, கொரட்டூர் ஏரிக்குச் சென்றிருந்தேன். தொலை நோக்கியையும், புகைப்படக் கருவியையும் தோளில் மாட்டியபடி ஏரியின் கரையில் ஏறியதுதான் தாமதம், “தம்பி…” என வலப்புறம் குரல் அழைக்கத் திரும்பினேன். நீலநிற டி-ஷர்ட்டில் கட்டுடலுடன், நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் முகத்தில் தோழமையும், குரலில் ஆணையுமாய் கரையில் புதிதாய் அமைக்கப்பட்டிருந்த வேலிக்கு உள்ளே நின்றிருந்தார். என்னைப் பார்த்து “வாங்க, வாங்க” என்றார்.
இவரேன் அழைக்கிறார் என விழித்தபடி இருந்த என் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டவர் போல், “பறவைகள் பாக்குறவர் தான? அந்த பக்கம், அடுத்த தெருவுல நுழஞ்சீங்கன்னா, உள்ள வர வழியிருக்கு” என்றார். அடுத்த தெருவில் நுழைந்து, வேலியிலிருந்த திறப்பின் வழியே உள்நுழைந்தேன். அங்கே சென்ற பின்தான் தெரிந்தது நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்று. ஆறடி அகலமுள்ள கரையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த வேலி, கரை முடிந்து ஏரி துவங்கும் இடத்தில் ‘ப’ வடிவில் சந்தித்துக் கொண்டது. அங்கே ஒரு ‘Spotting scope’ வைக்கப்ட்டிருந்தது. அதனருகே ஒரு சிறுவனும், பெரியவரும் இதற்கு மேல் அதை என்ன செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். நான் scope-ஐ பறவைகளை பார்க்கும்படி அமைக்கப் பணிக்கப்பட்டேன்.
மணிமங்கலம் ஏரியிலேயே scope-ஐ எப்படி இயக்க வேண்டுமென விஜய் சாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்ற தோரணையில் scope-ஐ நெருங்கிய நான், எவ்வளவு முயன்றும் பறவையின் பிம்பத்தை துல்லியமாக்க முடியவில்லை. என்ன செய்வதென தெரியாமலிருந்த என்னை காக்கவென வந்தார் திரு. ரவிசங்கர் அவர்கள். பள்ளி ஆசிரியர். 2016 ஆம் ஆண்டிலிருந்து பறவைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறார். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்ட பின், பிரச்சனையை சொன்னேன். அவர் “Focus-ற்கான திருகி பின்னாலிருக்கிறது” என்றார். அதை பத்திரமாக உறையிட்டு மூடி வைத்திருந்தனர்.

இருவரும் கொரட்டூரில் அதுவரைப் பார்த்த பறவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஒரு செந்நீல நாரை (Purple heron) எங்களை தலைக்கு மேலாக கடந்து சென்றது. அங்கு பார்க்கப்பட்ட Terns, Warbllers பற்றியும், சமீபத்தில் அங்கு வந்த வெள்ளையர் ஒருவர் ஏரியில் Lesser Whistling Duck-ஐ பார்த்து பதிவு செய்ததையும் சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்ற, இறக்கமற்ற நிதானமான அவரது குரல், அங்கே ஒரு Warbler தெரிந்ததை நான் சொல்ல, உற்சாகமடைந்து ‘படம், படமெடுங்க’ என்றது. சட்டென ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன்.
Scope சரிசெய்யப்பட்டது தெரிந்ததும், அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக பறவைகள் பார்க்க அனுப்பப்பட்டனர். திரும்பினால் ஒரு முப்பது, முப்பத்தைந்து பேர் கொண்ட கூட்டம் வேலியை இருபுறமும் நிறைத்து நின்றிருந்தது. பள்ளி மாணவர்களும், ஏனைய பெரியவர்களும் என இருவரும் சரிவிகிதத்திலிருந்தனர். ஒரு பெண் குழந்தை scope-ல் பார்ப்பதற்காக நின்றிருந்தது. வேலிக்கு அந்தப்பக்கம் ஒரு பெண் கல்லுகுருவி (Pied bushchat – female) வந்தமர, அவ்வளவு அருகில் அந்தப் பறவையை பார்த்திராத நான் பரவசமடைந்து, அந்த குழந்தைக்கு ஆவலுடன் பறவையைக் காட்டி அதை விளக்கினேன். குழந்தையின் முகம் மிரட்சியிலிருந்தது. பறவை அழகாகத்தானே இருக்கிறது? வேறெதையாவது பார்த்து பயந்துவிட்டதா குழந்தையென எண்ணி, மீண்டுமொரு முறை சூழலை சுற்றிப் பார்த்தேன். ஒன்றும் பிடிகிடைக்கவில்லை. அதற்குள் குழந்தையின் அம்மா, அவசரமாக வந்து ‘வந்துட்டாங்க, வந்துட்டாங்க’ என்றபடி குழந்தையை அழைத்துச் சென்றார்.

சற்று நேரத்தில் அந்தக் குழந்தை, மரமாக உருக்கொண்டு நின்றிருந்தது. விழா விருந்தினர் வந்ததும், அச்சிறு மரம் பேசத்துவங்கியது. தான் எந்தெந்த வகையில் உங்களுக்கு பயன்படுகிறேன் என சுற்றியிருந்த மானுடர்களிடம் சொன்னது. என்னைக் காப்பது உங்கள் கடமையென்றபின், அப்படியே கொரட்டூர் ஏரியையும் காப்பாற்றச் சொல்லிவிட்டு, ஒரு பெரும் பாரம் இறங்கியது போல் மரம் குழந்தையாய் மாறித் தன் நிலைக்கு சிரிப்புடன் மீண்டது. மக்கள் வழக்கம் போல குழந்தையின் மனனத்திறனைப் பாராட்டிக் கொண்டிருந்தனர். சொல்லப்பட்ட செய்தி காற்றில் கரைந்து, அங்கு சூழ்ந்திருந்த மரங்களை, அதன் கிளைகளை, இலைகளை சற்றே குலைத்துவிட்டுச் சென்றது.
நான் scope-ஐ சூழ்ந்திருந்தவர்கள் பக்கம் திரும்பினேன். ஒரு தன்னார்வலர், சற்றே முக்கியமானவர்கள் எனத் தோன்றியவர்களை scope-ன் அருகே நிற்கச் செய்து புகைப்படம் எடுத்தபின், அவர்கள் அதன் வழி பார்க்கமுயல, இதென்ன வீண் வேலை என்பது போல், பார்த்துக் கொண்டிருந்தவரை பணிவுடன் விலக்கி, அடுத்தவரை அழைத்து அதே போல் நிற்கச் செய்து புகைப்படம் எடுத்தார்.

சற்று முன்னே மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சூழலைக் காப்பதின் முக்கியத்துவத்தை தீவிரமாக எடுத்துரைத்துக் கொண்டிருந்த பெண்மணியொருவர் Scope அருகே வந்தார். ரவி சார் scope-ஐ நாமக்கோழியை (Eurasian coot) நோக்கி அமைத்து அவரைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும், “ம்….” என்றபடி நிமிர்ந்த அவர், ‘இந்த பறவையால நமக்கேதும் use இருக்கா?’ என்றார். ரவி சார், தன் முகத்தில் எந்த உணர்ச்சியைக் காட்டுவதென தெரியாமல் போராடிக் கொண்டிருந்தார். என்னிடம் கேட்டிருந்தால், ‘ரிஷி ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் எனும் புராணத்தில் இப்புனிதப் பறவையைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ராமன் அணிலுக்கு முதுகில் தடவியதைப் போல, பெருமாள் இப்பறவையின் நெற்றியில் தடவியதால் இந்த நாமம் அமைந்ததெனவும், இப்பறவையை தினமும் காலை சூரியயோதயத்தில் பார்ப்பவர்களுக்கு வைகுண்டத்தில் ஒரு இருக்கை உறுதி செய்யப்பட்டு, இப்பறவையாலேயே வைகுண்டம் அழைத்துச் செல்லப்படுவார்’ எனவும் சொல்லியிருப்பேன். அதற்குள், முன்பு குறிப்பிட்ட தன்னார்வலர் புகைப்படத்திற்கு அடுத்தவரை அழைத்துவிட்டதால் ஒருவரை வைகுண்டத்திற்கு அனுப்பும் வாய்ப்பு நழுவியது.
இதற்கு நடுவே மாணவர்கள் வரிசையாக வந்து தொலைநோக்கி (Binocular) வழியே பறவைகளைப் பார்க்க முற்பட்டு, சில நிமிடங்கள் தொலைநோக்கியுடன் போராடி, ஒருவழியாக focus-ஐ கற்றுக் கொண்டு பார்க்கத் துவங்குகையில் சரியாக தொலைநோக்கி அவரிடமிருந்து பறிக்கப்பட்டு இன்னொரு மாணவருக்கு அளிக்கப்பட்டது. நான் என்னுடைய தொலைநோக்கியை சிலருக்கு அளித்து அவர்களை ஏதெனும் ஒரு பறவையைப் பார்க்கச் சொல்லி, அவற்றின் உருவ அமைப்பை, அலகின் நிறத்தை கேட்டுக் கொண்டிருந்தேன். பெரும்பாலானோர் ‘வெள்ளையா தெரியுது’ இல்லை ‘கறுப்பா தெரியுது’ எனச் சொல்லி தொலைநோக்கியை தந்துவிட்டு நழுவிக் கொண்டிருந்தனர். சல்லடையில் நழுவுவதல்ல, நிற்பதே தகுதியானது என்பதால் முற்சியை கைவிடவில்லை. அப்பொழுது ஒரு தம்பி ‘இதுக்கும், அதுக்கும் மூக்கு ஆரஞ்சு நிறம், உடம்பு வெள்ள நிறம். ஆனா ஒன்ன பெரிய கொக்குனுன்ம் இன்னொன்ன உண்ணிக் கொக்குன்னும் சொல்றீங்க. எப்புடி? என்றான்.
இதோ வந்துவிட்டான் நான் தேடியவன். என் காத்திருப்பு வீண்போகவில்லை. மடியில் ஊறியதைக் கொள்ள கன்றோ, கலமோ இல்லையெனில் வலி, பசுவிற்கே.
“அதாவது தம்பி, இப்ப இரண்டோட அளவையும் பாத்தீன்னா…” என்று துவங்க, அதே தன்னார்வளர்
“அண்ணன் பேசப் போறாரு, எல்லாரும் அமைதி, அமைதியா இருங்க” என்றார் என்னைப் பார்த்தபடி.
கால்கள் வழியே கொதிக்கும் திரவமொன்று சுர்ர் என தலைக்கு ஏறியது. அது வாய்மொழியாய் வெளிப்படாமலிருக்க மிகுந்த பிரயத்தனத்துடன் என்னைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அண்ணன் பேசத் துவங்கினார்.

என் காதுகள் பறவைகளுக்காக திறந்திருந்ததால் அவர் பேசியது உதிரிச் சொற்களாக கேட்டுக் கொண்டிருந்தது. பொறி நாகனவாயின் (Pied starling) அழைப்பு ஓய்ந்து மற்றொன்றின் அழைப்பு துவங்குவதற்கு இடைப்பட்ட கணம் ‘ஆற்றல் அழிவின்மை விதி’ என்ற அண்ணனின் சொற்றொடர் காதில் விழுந்தது. எனக்கு திக்கென்றிருந்தது. இதென்ன குருவியின் தலையில் பனங்காய்! ஏரியை நோக்கியபடி இருந்த நான், பின்னால் திரும்பிப் பாரத்தேன். நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் உதயத்திலிருந்தே தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்திவிடுவது எனும் முடிவுடன் எழுந்து கொண்டிருந்தான். மாணவர்களும், குழந்தைகளும் பதாகைகளை ஏந்தியபடி சோர்வுடன் நின்றிருந்தனர். ஏரிக்கும், அவர்களுக்கும் நடுவே அண்ணன் முழங்கியபடி நின்றிருந்தாரர். ஆம், இயற்கைக்கும், குழந்தைகளுக்கும் நடுவே மாபெரும் சுவர் போல!
இந்நிகழ்வுகளை முன்னெடுப்பவர்களின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் எந்த தகுதியும் எனக்கில்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். வெறும் ஓராண்டாக கொரட்டூர் ஏரிக்குச் சென்று கொண்டிருக்கும் எனக்கே, இவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்கள் கண்கூடாக தெரிகிறது. என் வருத்தமெல்லாம் இன்னும் இறுகாமலிருக்கும் நெகிழ்ந்த மண்ணிற்கு ஏன் வெட்டும் உளிகள் என்பதுதான். இங்கு வேண்டியது பரிவுடன், உற்சாகத்துடன், பகடியுடன், தோளோடு தோள் சேர்த்து அவர்களை வனையும் கைகள்.
அப்பெண்மணி, இந்த பறவையால் நமக்கென்ன பயன்? எனக் கேட்டதுதான் பெரும்பான்மையின் மனநிலை.
ஏன் மரம் வளர்க்க வேண்டும்? ஏனெனில் அவைதான் மனிதனுக்கு சுவாசிக்க ஆக்ஸிஜனைத் தருகின்றன. அவன் அருந்த, உண்ணும் பயிர்களை விளைவிக்க மழை தருகின்றன.
ஏன் பறவைகளைக் காக்க வேண்டும்? அவைதான் மனிதனுக்கு இத்தனை நலங்களை அருளும் மரங்களை பரப்புகின்றன.
ஏன் நீர்நிலைகளை காக்க வேண்டும்? அவை மனிதனுக்கு நீர் தருகின்றன, மனிதனுக்கு, மனிதனுக்கு, மனிதனுக்கு…..
இக்கறுத்த நீர்ப்பறவையை காப்பாற்றி மனிதனுக்கு ஆகப்போவது என்ன? என்பதே அக்கேள்வின் போர்வையுள் பொதிந்திருக்கும் உண்மையான கேள்வி. எத்தனைத் தரவுகளைக் கொட்டி, இப்புவியின் காரணகாரிய தொடர்புகளை, இவ்வுலகில் விரிந்திருக்கும் மானுடப் பரப்பிற்கு கடத்துவது?
இந்தக் குறள் நாம் அனைவரும் படித்ததுதான்.
‘அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை’
இவர் கூறும் ‘அறிவைத்’ தருவதற்குத் தானே இலக்கியங்கள் எனத் தோன்றுகிறது.
நான் நினைத்துக் கொண்டேன். இங்கே, இந்தக் குழந்தைகளின் முன் எழுந்திருக்க வேண்டியது முழக்கமல்ல, பரிவின், கருணையின் குரல்! கடத்தப்பட்டிருக்க வேண்டியது தகவல்களல்ல, வாழ்க்கை!! சொல்லப்பட்டிருக்க வேண்டியது நிரூபணவாத அறிவியல் தரவுகளல்ல, புனைவு!!!
அண்ணன் நின்று கொண்டிருந்த இடத்தில் விஜயபாரதி சார், ஒரு நாற்கலியில் இயல்பாக அமர்ந்தபடி, குழந்தைகளுக்கான மொழியில், ஜெ-வின் ‘விசும்பு’ சிறுகதையை சொல்வது போல நான் எண்ணிக் கொண்டேன். அவர் பின்னே விரிந்திருக்கும் ஏரியின் பசுமையில், நீரின் குளிர்ச்சியில் ஆடிக் கொண்டிருக்கும் பறவைகள் தங்கள் தலையில் கதையில் வரும் அந்த குல்லா அணிவிக்கப்பட்டு, அவை அப்படியே எழுந்து பறந்து, தகிக்கும் பாலையில் இறங்குவதை ஒருமுறை தன் கற்பனையில் பார்த்துவிட்ட குழந்தைக்கு பின் ஒருபோதும் இயற்கையின் இயல்பை நாம் கெடுக்காமல் இருக்க வேண்டியது ஏன்? எனும் போதனை தேவைப்படாது என்றே தோன்றுகிறது.

ஒருவழியாக ஒன்றரை மணிநேரம் நீண்ட நிகழ்வு முடிவுக்கு வந்தது. மாணவர்களின் வரிசை அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை உணவுக்கு மடைமாற்றப்பட்டது. ஏற்கனவே ஒருமணி நேரம் தாமதமாகிவிட்டதால், நானும் வெளியேரும் வழி நோக்கி அவர்கள் பின்னே விரைந்தேன். அப்போது ஒரு நத்தைக்கொத்தி நாரை (Asian openbill) வேலிக்கு அருகே இருந்த மரத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். நான் தொலைநோக்கியை எடுத்து அதைப் பார்க்கத் துவங்க, வரிசையில் நின்றிருந்த சில மாணவர்கள் என்னைச் சூழ்ந்தனர். நான் தொலைநோக்கியை அளித்து அபபறவையின் அலகிற்கு நடுவே தெரியும் இடைவெளியைப் பார்க்கச் சொன்னேன். அதற்குள் அவர்களின் ஆசிரியர்களிலொருவர் வந்து மாணவர்களை சோற்றை நோக்கி விரட்டத் துவங்கினார்.
மீண்டும் சோர்வு.
‘அந்த நாள்’ கவிதை, வார்த்தைகளை கொண்டு விளையாடுவது போல் தோன்றினாலும், அது வினவுவது, நாள் என நாம் உத்தேசிக்கும் ஒன்று உண்மையில் என்ன? என்பதுதான். ஒரு நாளின் நிகழ்வுகள் நினைவில் இல்லை என்றால் அந்த நாளும் நம்முள் இல்லை என்றுதானே பொருள்? ஒரு குறிப்பிட்ட செயலை அந்நாளை முன்னிருத்தி நிகழ்த்தும் போது, செயலின் சுவடே இல்லாமல் அன்றாடம் அதை மூழ்கடிப்பது தான் வருத்தமானது.
வெளியேறும் முன், “சார்” என மீண்டும் ஒரு குரல் கேட்டுத் திரும்பினேன். மாணவர்களை அழைத்து வந்திருந்த மற்றொரு இளம்ஆசிரியர் அருகே நின்றிருந்தார். “அந்த பறவைக்கு அலகுல இடைவெளி இருக்கும்னு சொன்னீங்களே, ஏனப்படி இருக்குது?” என்றார். எப்போதும் நன்நம்பிக்கையின் ஒரு துளியை இயற்கை எஞ்சவிடும் அதிசயத்தை வியந்தபடி, முகம் புன்னகையில் ஒளிகொள்ள தொலைநோக்கியை அவரிடம் நீட்டியபடி சொல்லத் துவங்கினேன்.
eBird checklist: https://ebird.org/checklist/S326456416
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
22.04.2026