தூவித்தோழர்கள்-43

நீலக்கண்ணி (Blue-faced Malkoha)

வெள்ளிமலைக்கு வந்தபின் தெரிந்து கொண்ட பறவைகளில் ஒன்று நீலக்கண்ணி. இதன் ஆங்கில பேரான Malkoha, எனக்கு பால்கோவாவை நினைவுபடுத்தியது. சிங்களத்தில் Mal என்றால் பூ; Koha என்றால் குயில். பூங்குயில் என்ற அழகான அர்த்தத்தை பின்பு தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுடன் பறவைகளுக்காக காத்திருக்கும் போது, இதை முதன் முதலில் பார்த்தேன். செம்போத்தை நினைவு படுத்தியது. செம்பழுப்பு வண்ண சிறகுகளுக்கு பதில், மின்னும் கரும் பச்சையும், கரு நீலமும் கலந்த சிறகுகள். சாம்பல் நிறத் தலை. அடிவயிறு மங்களான நிறம். ஆப்பிள் பச்சை அலகு. நீலக்கண்ணி என்று இதை அழைத்தாலும், இதன் கண்களின் நிறம் கருப்பு தான். கண்ணை சுற்றிலும் நீல நிற தோல் இருக்கிறது. நீண்ட வாலின் நுனியில் வெள்ளை நிறம் உள்ளது. ஆண் பெண் பறவைகளிடையே வேறுபாடு இல்லை.

©Arun Prabhu

பெரும்பாலான குயில்கள் ‘கூ’ என்று கூவும் போது, இப்பறவை ‘கு’ என்று மிகச் சுருக்கமாக கூவுகிறது.(பாடலை கேட்க) நித்யவனத்தில் இந்த வருட புத்தாண்டு தினத்தன்று, விஜய பாரதி சார் குடும்பத்துடன் பறவை பார்த்துக் கொண்டிருந்தோம். புதுக்குடில் செல்லும் வழியில், ஓரிடத்தில் மிக அருகில் மரத்தின் மேல் நீலக்கண்ணி அமர்ந்திருந்தது. கிளைகளுக்கு கிளை குதித்து குதித்து தாவியது. யானைகுடில் செல்லும் போது மறுபடியும் அருகே வந்து அமர்ந்தது. நீலக்கண்ணியும் எங்களுடனே சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்த உணர்வு ஏற்பட்டது.

படித்தறிந்தது

  • தென் இந்தியாவின் சில பகுதிகளிலும், இலங்கையிலும் மட்டுமே காணப்படும் வலசை செல்லாத பறவை. வேறு துணையினங்கள் இல்லை.
©BOW
  • குயிலாக இருந்தாலும், குச்சிகளை அடுக்கி பெரிய கூட்டை கட்டுகிறது இப்பறவை. இலையை வைத்து மெத்தை அமைத்து, இரண்டு முட்டைகளை இடுகிறது. அடைகாக்கும் காலம் பற்றி மேலதிக தகவல்கள் இல்லை.
  •  வரிசை(Order): Cuculiformes குடும்பம் (Family): Cuculidae – Cuckoos குயில் குடும்பம் . Phaenicophaeus – கிரேக்க சொல்லான phoinikophaēs க்கு சிவப்பு நிறமான என்று அர்த்தம். viridis (பச்சை) மற்றும் –rostris (அலகு) என்ற இரு லத்தீன் சொற்களால் ஆனது. Phaenicophaeus viridirostris – சிவப்பு நிறமும், பச்சை நிற அலகும் கொண்ட பறவை. குறிப்பு: இந்த குயிலின் முகத்தில் சிவப்பு இல்லாவிட்டாலும், இதன் பேரினப்பெயர் செம்முகப் பூங்குயிலுக்காக வைக்கப்பட்டுள்ளது.