நீலப் பைங்கிளி (Malabar Parakeet)
வெள்ளிமலையில் எப்போது பறவை பார்க்க சென்றாலும், தவறாமல் பார்க்கும் பறவைகளுள் ஒன்று நீலப் பைங்கிளி. பச்சை நிற மரங்களின் பின்னணியில், இதன் நீல நிறம் தனித்து தெரியும். ஆலடி அமர்ந்திருந்த போது மிக அருகே ஒரு ஜோடி பறந்து சென்றது. கிளிகள் பறந்து செல்லும் போது, கூட்டத்தினருடன் தொடர்பில் இருக்கவும், வழி தவறி விடாமல் இருக்கவும், கூவிக்கொண்டே செல்கின்றன. தாவரவியல் வகுப்பு இடைவேளையில் குழந்தைகள் பறவை பார்த்தனர். ஒரே நேரத்தில் கூட்டமாக 7 நீலப் பைங்கிளிகள் பறந்து சென்றதாக கூறினர்.

பெண் பறவையின் கழுத்து வளையத்தில் நீலம் கிடையாது. நிறம் சற்று பச்சை கலந்து இருக்கும். அலகு கருப்பு நிறம். ஆண் பறவையின் மேல் அலகு சிவந்த நிறம். நுனி மஞ்சள். கீழ் அலகு பழுப்பு நிறம். தலையும், உடலில் மேல்புறமும் நீலம் கலந்த சாம்பல் நிறம். கழுத்தில் கருப்பு நிற பட்டையின் கீழ் விளிம்பில் நீல நிறம் காணப்படும். இறகுகள் கரு நீலம். உடலின் அடிப்புறம் இளம் பச்சை. நீண்ட வாலின் அடிப்புறம் மஞ்சள்.பெரும்பாலும் ஜோடியாக பறந்து செல்வதை பார்க்க முடியும். பச்சைக்கிளியின் அளவைவிட சற்று சிறிதாக இருப்பதும், பறக்கும் போது தெரியும் அழகிய நீல வண்ணமும் இதை அடையாளம் காண உதவும்.
படித்தறிந்தது
- தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. இது வலசை செல்லாத பறவை. உணவு தேவையைப் பொறுத்து அருகில் உள்ள இடங்களுக்கு செல்லும். இதன் முக்கிய உணவுகள் தானியங்கள், விதைகள், அத்திப்பழங்கள், மொட்டுக்கள், மலரமுது ஆகியவை ஆகும்.

- இனப்பெருக்க காலம் டிசம்பர் முதல் மார்ச் வரை. நாகமரம் (Mesua ferrea) மற்றும் தடச்சி (Grewia tiliifolia) போன்ற பெரிய மரங்களின் பொந்தில் நான்கு முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். 23 நாட்கள் பெரும்பாலும் பெண் பறவை அடைகாக்கும்.
- வரிசை(Order): Psittaciformes குடும்பம் (Family): Psittaculidae – Old World Parrots கிளி Psittacula- பேரினப்பெயர் psittacus(கிளி) என்ற லத்தீன் சொல்லிருந்து வைக்கப்பட்டுள்ளது. columboides – சிற்றினப்பெயர் லத்தின் சொல்லான columba(புறா) மற்றும் கிரேக்க சொல்லான -oides(போன்ற) இரண்டும் சேர்ந்த வார்த்தையாகும். இந்த கிளியின் புறா போன்ற சாம்பலும் நீலமும் கலந்த நிறத்தை குறிக்க பயன்படுகிறது. Psittacula columboides– கிளி; புறா போன்ற வண்ணத்தில் இருக்கும்.