தூவித்தோழர்கள்-45

மணிப்புறா(Spotted Dove)

வெள்ளி மலையில் மிகவும் பரவலாக காணப்படும் பறவைகளின் ஒன்று. மின்சார கம்பி, மரம் அல்லது தரையில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். ‘கூ , கூ , குக்ரூ’ என்று குறுகுறுக்கும். அளவில் சிறிதான புறா. நீண்ட, சதுர வடிவ நுனி கொண்ட வால். கழுத்தில் காணப்படும் கருப்பு வெள்ளை புள்ளிகள், இதன் தனித்துவமான அடையாளம். கருப்பு அலகு. கண்கள் இளஞ்சிவப்பு. மேல் பகுதி சாம்பலும் பழுப்பும் கலந்த நிறம். அடிவயிறு இளஞ்சிவப்பு கலந்த சாம்பல் நிறம். கால்கள் சிவப்பு நிறம்.

©Hemant Kumar

பறந்து சென்று மரத்தில் அமரும்போது, விரிந்திருக்கும் இதன் வால் சிறகு மிகவும் அழகு. இருபுறமும் இருக்கும் வால் சிறகின் நுனி, வெள்ளை நிறமாக இருக்கும். உணவுக்கூடம் எதிரில் உள்ள புளிய மரத்தடியில் அமர்ந்திருந்த போது, மரத்தில் வந்து அமர்ந்தது. மிக அருகில், அதன் கழுத்தில் உள்ள புள்ளிகளை பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டம், சீனா, இந்தோனேசிய தீவுகள் ஆகிய இடங்களில் இயற்கையாக காணப்படுகிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் மனிதர்களால் பரவியுள்ளது. மொத்தம் நான்கு துணையினங்கள் உள்ளன.
© BOW
  • ஆண் பெண் பறவைகள் சேர்ந்து, குச்சி வைத்து கூடு கட்டி, இறகுகள் மற்றும் சல்லி வேர் களை வைத்து மெத்தை அமைத்து கூடு கட்டும்.இரண்டு முட்டைகள் இடும், 14 முதல் 16 நாட்கள் வரை ஆண், பெண் பறவைகள் சேர்ந்து அடைகாக்கும். குஞ்சுகளை பத்து முதல் பதினைந்து நாள் வரை வளர்க்கும். குஞ்சுகளுக்கு உணவாக இதன் உணவுக்குழாயில் உள்ள சுரப்பி(Crop Gland) ஒன்றிலிருந்து பால் போன்ற திரவத்தை ஊட்டும். ஆண், பெண் இரு பறவைகளும் கொழுப்பும், புரதமும் நிறைந்த இப்பாலை குஞ்சுகளுக்கு ஊட்டும்.
மணிப்புறாக்குஞ்சு
© 士訓 陳_Y
  •  வரிசை(Order): Columbiformes குடும்பம் (Family): Columbidae – Pigeons and Doves Spilopelia – பேரினப்பெயர் spilos (புள்ளி ) மற்றும் peleia(புறா ) என்ற இரு சொற்களால் ஆனது. chinensis – சிற்றின பெயர் சீனாவில் முதன் முதலில் காணப்பட்டதால் வைக்கப்பட்டுள்ளது. Spilopelia chinensis- புள்ளிப் புறா; சீனாவில் காணப்பட்டது. ஒரு சுவாரஸ்யமான தகவல். 17ஆம் நூற்றாண்டு, மொரிஷியஸ் தீவில் மனிதர்களின் குடியேற்றத்தால் அழிந்து போன டோடோ(Dodo) பறவை, இந்தக் குடும்பத்தை சேர்ந்தது தான்.

Refernces:

  1. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க . ரத்னம் –மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:221
  2. BOW

Leave a Reply