பறவைப் பார்த்தல் அனுபவக்குறிப்பு – கொரட்டூர் ஏரி – சென்னை – 01.05.2026
தழல்
ஆடலும்
அலைதலும்
சிலைத்தலும்
ஊர்தலும்
படர்தலும்
எழுதலும்
தீண்டலும்
பற்றலும்
சேர்தலும்
கொல்தலும்
கொள்தலும்
இவையனைத்துமாதலும்
ஆன பின்
இவையல்லாதாதலும்
தழலே!

இன்று கொரட்டூர் ஏரிக்கு செல்லும் போதே ஒரு முடிவுடன்தான் சென்றேன். செந்நீலநாரை (Purple heron) மீனை வேட்டையாடுவதை காணாமல் திரும்புவதில்லையென்று. ஆம், கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியிலிருக்கிறேன். மார்ச் மாதத்திற்கான விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினருக்கான சவால் இது. செந்நீலநாரை மீனைக் கொத்தி விழுங்குவதைப் பார்க்க வேண்டும். புழல், கொரட்டூர் ஏரிகளில் வழக்கமாக பார்க்கும் பறவைதான் என்பதால் பார்த்துவிடலாம் என அலட்சியமாக இருந்தேன். ஆனால் ‘பிறர் பார்க்க தான் உண்பதில்லை எனும் நோன்பை நோற்றிருக்கிறதோ’ என எண்ணும் அளவுக்கு இந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட பதினைந்து முறை வெவ்வேறு ஏரிகளில் இப்பறவையைப் பார்த்தும் இவை உணவுக்காக எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன் என்பது போலவே இருந்தன.
உதாரணத்திற்கு புழலில், ஏரியின் நடுவே உள்ள மின்கோபுரத்தில் வழக்கமாய் வந்தமரும் இப்பறவை நீரை தவிர்த்து வேறெங்கோ பார்த்தபடி இருக்கும், சிலை போல. காற்றில் மீனின் தடம் தெரியும் போல என்றெண்ணி நானும் காத்திருந்ததுதான் மிச்சம். கொட்டூரில் நத்தைக் கொத்திகளும் (Open bill heron), சங்குவளை நாரைகளும் (Painted storks) நீரை அலகால் அளைந்தபடி இருக்க, சாம்பல் நாரைகள் (Gray heron) நீரில் இறங்கி அடுத்த மீனுக்காக தயாராக இருக்க, இவை மட்டும் கரையில் நின்றபடி என்னைப் பார்த்தபடி இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால், “கொஞ்சம் உங்க வேலைய பார்த்தீங்கன்னா, அத பார்த்துட்டு நான் அடுத்த வேலைக்குப் போவேன்” எனச் சொல்லத் தோன்றாமலில்லை. நான் என் செய்வேன் பராபரமே?

இன்று விடுவதாய் இல்லை என சங்கல்பம் எடுத்துக் கொண்டு ஏரியின் கரையில் ஏறினேன். ஏறியதுமே ஒரு செந்நீலநாரை மிக அருகே எழுந்து, பறந்து சென்றது. என்னைப் பார்த்ததால் அங்கிருந்து நகர்ந்திருக்குமோ? இது நல்ல அறிகுறியா அல்லது…? என்று எண்ணியபடி பறந்து கொண்டிருந்த பறவையை கண்களால் தொடர்ந்து சென்று அது இறங்கிய இடத்தைக் குறித்துக் கொண்டு, மெதுவாக ஒரு சீமைக் கருவேலத்தின் அருகே என்னை சற்றே மறைந்தபடி அமர்ந்து கொண்டேன்.
[ ] Binocular – check.
[ ] Camera – check.
[ ] Extra batteries – check.
[ ] தொல்லைதரும் நாய்களை விரட்ட குச்சி – இல்லையே..! சரி குடையைக் கொண்டு சமாளிப்போம்.
[ ] காலை உணவு? – இன்று நாரை தின்றால்தான் நமக்கு சோறு.
Check, Check, Check.
நேரம் சரியாக 5.55 am. இதோ துவங்குகிறது முடிவின்மைக்கு நீளப்போகும் இந்த அமர்நிலைப் போர்!
பறவைகளை அவதானித்தலில் கவனச்சிதறல் ஒரு பிரச்சனை. சூழலின் ஒலிகள், மனிதர்கள், வாகனங்கள் என அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொண்டே இதில் மூழ்க முடியும். பறவைப் பார்த்தல் ஒரு தவம் என்றால், அதில் குறிப்பிட்ட ஒருபறவையை மட்டும் கவனிப்பதென்பது தவத்திற்குள் தவம் புரிவது போன்றது! முதல் தவத்தின் பலன்கள் அனைத்தும் இரண்டாம் தவத்திற்கு பகையாய் மாறுவதைக் காணலாம். இறங்கிய இடத்தில் கால்கள் சிக்கிக் கொண்டது போல் அசைவற்றிருந்த நாரையை பார்த்துக் கொண்டிருந்த போது, மிக அருகே ஒரு சின்னக் கொக்கு மிக சுறுசுறுப்பாக இரை தேடிக்கொண்டிருந்தது. கண்கள் அங்கே செல்வதை கட்டுப்படுத்தப் போராட வேண்டியிருந்தது. அதற்குள் ஆள்காட்டிப் பறவையின் எல்லைக்குள் ஏதோ நுழைந்துவிட்டது போல, பெருங்குரலெடுதது எச்சரித்துக் கொண்டிருந்தது. கண்களையாவது திருப்பிக் கொள்ளலாம், காதுகளை என்ன செய்வது?
தலையை உதறித் திரும்பினால் இரு நெடுங்கால் உள்ளான்கள். தொலைவில் அரிவாள் மூக்கன்கள், பின்புறம் சிறிய நீர்காகங்கள், இடையே பொரி மண்கொத்திகள். இறைவா… என அண்ணாந்தால் மின் கம்பியில் என்ன? பஞ்சுருட்டானா? பச்சையா இல்லை நீலவாலா? அட பக்கத்தில் பொறி மீன்கொத்தி! வழக்கமாக ஜோடியாகத் தானே பார்ப்போம். இன்று என்ன தனியாக? குறுக்கே ஒரு ஆலா. அருகே வந்தால் ஒரு நல்ல படமெடுக்கலாம். வீடு சென்று அடையாளம் காணலாம். ஆ! நாமக் கோழி! சூரியன் உதித்துவிட்டதா?
என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவசரமாக செ.நீ.நா பக்கம் திரும்பினேன். அவர் மாற்றமின்றி அதெ இடத்தில், அதே போல நின்று கொண்டிருந்தார். காத்திருத்தலுக்கு கொக்கை உதாரணம் சொன்னவர் கண்களில் இப்பறவையினம் படாமல் போயிருக்கவே வாய்ப்பதிகம் என நினைக்கிறேன். உன்னுடன் சேர்ந்து நானும் அக்காத்திருப்பை கற்றுக் கொள்கிறேன் என நினைத்துக் கொண்டேன். நேரம் நீண்டு கொண்டிருந்தது.

ஓர் அசைவு. உண்மையில் அசைவா அல்லது என் மனமயக்கா? இல்லை அசைவுதான். நாரை நகர்கிறார். ஆனால் கால்கள் அங்கே தானே இருக்கிறது, பின் நகர்தல் எப்படி சாத்தியம்? மீண்டும் உற்றுப் பார்த்தேன். ஆம் நகர்வுதான், ஆனால் கால்களால் அல்ல, கழுத்தால். நீண்டு உயர்ந்திருந்த கழுத்து, கிடைமட்டமாகி வளைவு கொண்டது. எங்கள் இருவருக்கும் கண்கள் கூர்கொண்டது. இதோ பின்னங்கால் உயர்கிறது. எவ்வளவு பெரிய கால் விரல்கள். தாமரைக் கோழியின் கால்களைப் போல. பின்னங்கால் முன்னங்காலாகிறது. உடல் தாழ, கழுத்து இன்னும் தாழ்கிறது. எங்கள் உடல்கள் இறுகுகின்றன. இதோ புறப்படப் போகிறது அம்பு. ஒரே கொத்தில் ஐந்து மீன்களைத் துளைக்கப் போகிறது. என் கைகள் தொலைநோக்கியை இறுக்குகின்றன. நேரம் அடுத்த வினாடியைக் கடக்க முடியாமல் திணறுகிறது. கருவேலத்தின் ஒவ்வொரு இலையையும் கடக்கும் காற்றின் ஒலி. நாரையின் உடல் இன்னும் தாழ்கிறது, தாழ்கிறது, தாழ்ந்து கொண்டே சென்று, “க்றாக்” எனும் ஒலி இறுக்கத்தைக் கிழிக்க, தன் அகண்ட சிறகுகளுடன் எழுந்து பறந்தது!
சில கணங்கள் என்ன நடந்ததென்று புரியவில்லை. எல்லாம் சரியாகத்தானே சென்று கொண்டிருந்தது? ஏதேனும் வேற்றுயிர் இடையீடு? இல்லை, சூழல் நிச்சலனமாக இருந்தது. ஏன் பறந்தார் நாரையார்? அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கே அவர்? என தேடி பறந்தவரை பின்தொடர்ந்தால், நான் அமர்ந்திருந்த இடத்திற்கு வலதுபுறம் என் பக்கத்திலிருந்தது போலவே ஒரு சிறிய சீமைகருவேலத்தின் பின்னே சென்றிறங்கினார். இறங்கிய இடத்தில் எனக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பாதம் புதையும் அளவிற்கே நீர் இருந்த முந்தைய இடத்திலாவது மீன் கிடைக்க வாய்ப்பிருந்தது. இப்போது நின்றிருக்கும் இடமோ கட்டாந்தரை! இங்கே எதற்கு? பல்லி, ஓணான் ஏதாவது? இருக்கலாம். காத்திருப்போம் என்றவாறு நான் அமர்ந்தபடி சிலையாக செ.நீ.நா நின்றபடி சிலையானார்.

என் கைகள் வலிக்கத் தொடங்கின. தொலைநோக்கியை எடுத்துவிட்டு வெறும் கண்களால் பார்கலாம் என்றால் செ.நீ.நாரையின் நிறம் கச்சிதமாக சூழலுடன் பிணைந்து அவரை மறைத்திருந்தது. நல்ல தொலைவிலும் இருந்தார். எனவே அவ்வப்போது புகைப்படக் கருவியில் படமெடுப்பது, பின் தொலைநோக்கியில் சிறிது நேரம் பார்த்திருப்பது என மாற்றி மாற்றி கைகளுக்கு சற்று ஓய்வளிப்பதுபோல் ஏமாற்றிக் கொண்டிருந்தேன். மீண்டும் என் பொறுமையைக் குலைக்கவென நீலதாழைக் கோழிகள் மூன்று வந்தது. பின்னே தாமரைக் கோழி (Bronze winged Jacana), ஒரு மடையான் பறந்து வந்து ஒரு சிறு குட்டையின் ஓரத்தில் அமர்ந்தது.
நிற்க! என்னது, குட்டையா?
நாரையாரின் திட்டம் விளங்கியது.

இந்த குட்டைதான் அவர் குறித்திருக்கும் வேட்டை நிகழப்போகும் இடம். என்னுள் மீண்டும் கேள்விகள் பெருகின.
* அப்போது முன்பு இருந்த இடம்? – அது ஒத்திகை பார்பதற்கான இடமாக இருந்திருக்கலாம்!
* சரி இப்போது ஏன் குட்டையை விட்டு இவ்வளவு தூரத்தில் காத்திருக்க வேண்டும்? – பதுங்கிப் பாய இடம் வேண்டுமல்லவா?
என யோசித்துக் கொண்டிருப்பதற்குள் நாரையவர்கள் நகரத் துவங்கினார். மிக, மிக, மிக மெதுவான நடை. இப்போது தலை தாழவில்லை. நீண்டு, ஆனால் சற்று முன்னோக்கியிருந்தது. அவர் நடந்த வழியில் ஆமை வந்திருந்தால், நாரையாரை சற்றே ஒதுங்க சொல்லிவொட்டு, முன்னால் சென்றிருக்கும். அவர் நகர்ந்து கொண்டுதானிருந்தார். நிலம்தான் அவரை விட்டு பின்செல்லாமல் பிடிவாதம் பிடிப்பது போலிருந்தது. சீமைகருவேலம் இருந்த சிறு மணல் மேட்டில் பின்னால் மறைந்தார். சிறிது நேர காத்திருப்புக்குப் பின் மெதுவாக அவர் தலை மட்டும் மேட்டிற்கு வெளியே தெரிந்தது. பின் கழுத்து, கால்கள். மீண்டும், எவ்வளவு நீண்ட கால் விரல்கள் என நினைத்துக் கொண்டேன். இறுதியாக உடல். என் மனம் ‘புலி’ என்றது.

புலியா? நாரையாரின் நிறத்தைப் பாருங்கள்! பிற கொக்குகளும், நாரைகளும் நீரில் அலைந்து நிறத்தை இழந்தது போலவோ, வெயில் காய்ந்து கறுத்தது போலவோ, வெள்ளையிலிருந்து, கறுப்பிற்கு செல்லும் வழியிலுள்ள ஏதோ சில நிறங்களை எடுத்து அணிந்து கொண்டது போலிருக்க, இவர் உடலில் தான் எத்தனை நிறங்கள்! அவர் கழுத்தில் துவங்கி உடல் வரை செல்லும் அடர் நிற கோடும், அதைச் சுற்றியுள்ள மண் நிறமும் எனக்கு புலியை நினைவூட்டியிருக்கலாம். மேலும் பதுங்குதலும் உடன் சேர்ந்து கொண்டது. ஆம், இவர் பறவைகளில் புலி!
அவர் தலை குட்டையை நோக்கி திரும்பிய போதுதான் உறைத்தது, இதற்கு முன் அவர் சென்ற திசையை பார்த்தால், அப்படியே சென்று, கரையேறி, பக்கத்திலுள்ள வீட்டிற்குள் நுழைந்துவிடுவாரோ எனத் தோன்றியிருக்கும். நல்ல வேலை. தலையைத் திருப்பி, வேட்டையை உறுதி செய்துவிட்டார். நகர்தல் நின்றது. குட்டையை நோக்கி ஒரு தீர்கமான பார்வையை வீசினார். உடலும், தலையும் அசைவிலாதிருக்க கழுத்தை மட்டும் அசைத்து ஒரு நடனம் புரிந்தார். மீனை விழுங்க தொண்டையை இலகுவாக்கிக் கொள்கிறாரோ? மீண்டும் சிலையானார். நான் தொலைநோக்கி, புகைப்படக் கருவி என மாற்றிக் கொண்டிருந்தேன். சிலை உயிர்த்து, சற்றே நகர்ந்து மீண்டும் சிலையானது. இப்படியான சில நகர்தளுக்குப் பின் அவர் குட்டையின் கரையில் நின்றிருந்தார். சரி, ஆனால் இப்போது ஏன் குட்டையை விட்டு விட்டு கரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். குட்டையிலுள்ள மீனை ஏமாற்றுகிறார் போல.

நாம் தழல் என்றதும் நெளிந்தாடும், ஓசையிடும் தீயைத்தான் நினைத்துக் கொள்கிறோம், அல்லவா? உண்மையில் தழலை ஆடவைப்பது காற்றுதானே. தழல் தன் இயல்பில் அசைவற்றது. தன்னுள் ஒன்றை ஏற்கும் பொருட்டுமட்டும் சற்றே அசைந்து, குறுகி, நீண்டு, பின் மீண்டும் சிலைத்தலே தழல் அல்லவா? என் முன் நின்றிருக்கிறது ஒரு தழல். எரிந்த விறகென சாம்பல் நிற உடலின் நுனியில் எழுந்து நீண்ட தழல். நீலமும், ஆரஞ்சும் கொண்டு நுனியில் மஞ்சள் நிறமுனை கூர்கொண்டு காத்திருக்கிறது.

மின்னல் வெட்டென ஒரு பாய்ச்சல். உடல் நீரில் மூழ்கியது. தழல் தணிந்து பின் அலகில் செருகிய மீனுடன் எழுந்தது. மஞ்சள் சுடரில் மின்னியது வெள்ளி. துல்லியமான வேட்டை. தழல் தரையேறியது. கீழலகிலிருந்து மீனை உருவி, கொஞ்சம் கொஞ்சமாக வாயருகே கொண்டு சென்றது. பின் இரை தழலில் கலந்தது. தழலானது!

நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். மீன் தொண்டையில் நகர்வதைப் பார்க்க முடிந்தது. கழுத்து வளைந்திருந்தது. அவ்வப்போது அலகால் நீரை அள்ளி வாயிலிட்டுக் கொண்டார் நாரை. மீனுக்கு நீர்கடனோ!? கழுத்து வளைந்த படி அப்படியே சிறிது நேரம் இருந்தார். பின் கழுத்து நீண்டபோது மீனைக் காணவில்லை. வளைந்த கழுத்து மீனை வயிற்றுக்குள் தள்ள உதவியிருக்கிறது! அவர் முகத்தின் வெற்றியின் பரவசம், என் முகத்தில் பிரதிபலித்தது.

அசையாத் தழலை ஏன் தியானத்தில் பரிந்துரைக்கிறார்கள் என எண்ணிக் கொண்டேன். தழலுக்குத்தான், தான் நினைத்தபடியெல்லாம் அசைந்தாட வாய்ப்பமைந்துள்ளது. அசைகையில் தான் எத்தனை நிறங்கள், ஓசை, அழகு… இவை அனைத்தையும் உள்ளொடுக்கியே தழல் நின்றிருக்கிறது. சிலைபோல. ஆனால் நிகழ்ந்து கொண்டுமிருக்கிறது. ஆம். தழல் தவத்திலிருக்கிறது. தேவையின்றி அது சலனம் கொள்வதில்லை. ஆர்பரிப்பதில்லை. ஓலமிடுவதில்லை. அதன் அசைவும் மீண்டும் அமைவதற்கே. இதோ, இச்சிறந்த வேட்டைக்குப் பின் ஏதும் நடக்காதது போல மீண்டும் சிலையாகி நிற்கிறார் நாரையார். இத்தவம் என்னுள் நிலைகொள்ளட்டும்.

சிறிது நேரத்தில் ஓர் மீனவர் வர, “க்றாக்” எனும் ஒலியுடன் எனக்கு விடைகொடுத்தபடி, இன்னொரு கட்டாந்தரைக்கு பறந்தார் நாரையார்.
eBird checklist: https://ebird.org/checklist/S331512840
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
01.05.2026