தூவித்தோழர்கள்-46

கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher)

சென்னை வீட்டின் அருகே, ஒரு தாமரைக் குளம் உண்டு. ஸ்ரீயின் பள்ளி வேன் நிறுத்தம், அங்கு உள்ளதால், தினமும் காலையில் நானும் அவளும் அங்கு காத்திருப்போம். ஒரு நாள் குளத்திற்கு மேலே, பறந்து கொண்டிருந்த கருப்பு வெள்ளை மீன் கொத்தியை பார்த்தோம். ஒரே இடத்தில் பறந்தபடியே, நீரை ஆராய்ச்சி செய்தது. சட்டென்று இறக்கைகளை மடித்து, நீரில் பாய்ந்து, மீனுடன் பறந்து சென்றது. அதற்குப் பின், சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, பெண்ணாடம் சென்றிருந்தபோது இதை மறுபடியும் பார்த்தோம். ஒரு குளத்தின் அருகில் உள்ள, மின்சார கம்பியில் இதுவும், வெண்மார்பு மீன்கொத்தியும் அமர்ந்திருந்தன. இரண்டையும் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் காட்ட முடிந்தததில் மகிழ்ச்சி.

ஆண், பெண் பறவைகளை அடையாளம் காண முடிகிறதா?
©Ranganthittu Bird Sanctuary

நீண்ட, அகலமான அலகு. சிறிய, கருப்பு கொண்டை. கண்ணை ஒட்டிய கருப்பு பட்டை பின் தலை வரை நீண்டிருக்கும். வெள்ளை தொண்டை. ஆண் பறவைக்கு மார்பில் அகலமான பட்டியும், அதன் கீழே குறுகலான பட்டியும் இருக்கும். பெண் பறவைக்கு அகலமான கருப்புப்பட்டி மட்டுமே இருக்கும். நடுவில் வெள்ளை இருக்கும். அடி வயிறு வெள்ளை. இறகுகள் கருப்பும் வெள்ளையும் கலந்தவை. குட்டையான வால். வண்ணமயமான பறவைகள் ஒரு வகையான அழகு என்றால், கருப்பும், வெள்ளையும் மட்டுமே கொண்டிருக்கும், இந்த மீன் கொத்தி மனம் மயக்கும் வேறு வகையான அழகு.

மீன்கொத்தி வேட்டையாடும் அடுக்கு புகைப்படம்
©Karthik Easvur

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டம், சீனா, மத்திய ஆப்பிரிக்கா,இஸ்ரேல், ஈரான், ஈராக் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.  நான்கு துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
©BOW
  • நீர் நிலைகளின் ஓரமாக, கூட்டமாக பொந்து அமைத்து, அதில் முட்டையிடுகின்றன. அலகை வைத்து மண்ணை கொத்தி, கால்களால் மண்ணை வெளியே தள்ளுகிறது. (காணொளி). நான்கு முதல் ஐந்து முட்டைகள் இட்டு, பதினெட்டு நாட்கள் வரை, பெண் பறவை அடை காக்கிறது. அவ்வப்போது மட்டும் ஆண் பறவை உதவுகிறது. குஞ்சுகள் 14 நாட்களுக்குப் பின், மீன்பிடிக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் பெற்றோருடன் பல மாதங்கள் இருக்கின்றன. அடுத்த தலைமுறைக்கு கூடு கட்ட, குஞ்சு பொரித்தவுடன் இரை தேட, பெற்றோருக்கு உதவுகின்றன.
  •  வரிசை(Order): Coraciiformes குடும்பம் (Family): Alcedinidae – Kingfishers  Ceryle– பேரினப்பெயர் Kērulos என்று அரிஸ்டாட்டில் முதலியோர் குறிப்பிட்டுள்ள தொன்ம பறவையின் பெயரிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. அது எந்த பறவையை குறிக்கிறது என்பது குறித்த குழப்பம் தற்போது வரை தொடர்கிறது. rudis– சிற்றின பெயர் முரட்டுத்தனமான என்பதை குறிக்கும் லத்தீன் சொல்லிலிருந்து வைக்கப்பட்டுள்ளது . (Rude ஞாபகம் வருகிறதா?) இதன் வேட்டையாடும் திறனை குறிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. Ceryle rudis – தொன்மமான பறவை. முரட்டுத்தனமாக வேட்டையாடும்.

Leave a Reply