நீலமேனி ஈப்பிடிப்பான் (Verditer Flycatcher)
டிசம்பர் மாதம் நடந்த தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகள் சேர்ந்து, காலையில் பறவை பார்க்க சென்றனர். அப்போது முதல் முறையாக ஒரு பறவையை பார்த்தனர். Merlin செயலியில் துலாவி, இதுவாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். யானை குடிலுக்கு செல்லும் வழியில், மின்சார கம்பியில் மிக அருகில் நீலமேனி ஈப்பிடிப்பான் அமர்ந்திருந்தது. எனக்கு பார்த்தவுடன் தெரிந்து விட்டது, காலையில் குழந்தைகள் பார்த்த பறவை இது தான் என்று. பஞ்சுருட்டான் அளவுள்ள பறவை. நீலவாலுடன் நிமிர்ந்து கம்பியில் உட்கார்ந்திருந்தது. உடல் முழுவதும் அழகிய மயில் துத்த நீல நிறம். கருப்பு நிற சிறிய அலகு. அலகையும் கண்ணையும் இணைக்கும் கருப்பு நிற பட்டி. பெண் பறவை, சற்று மங்கலான நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.

ஆலமரத்தடியில் அமர்ந்த போது, அருகில் இருந்த பெரிய அம்பருத்தி மரத்தில், ஆண் பறவை வந்து அமர்ந்தது (Indian Charcoal Tree/Trema orientalis – நித்ய வனமெங்கும் பார்க்கக்கூடிய மரம் இதுவே.) மதிய வெயிலில், அந்த நீல நிறம் மிக அழகாக காட்சியளித்தது. ஒரு நிமிடம் அமர்ந்து, பின் பறந்து விட்டது. மரத்திற்கு வந்த ஒரு நொடியில், அந்த இடத்தையே உயிர் கொள்ள செய்து, மறு நிமிடம் பறந்த பின் இருக்கும் வெறுமையை எப்படி விளக்குவது? பறவை நோக்குபவர்களான நாம் அனைவரும், அதை உணர மட்டும் தான் முடியும்.
படித்தறிந்தது
- இரண்டு துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தோனேசியா, தென் கிழக்கு ஆசியா ஆகியவற்றில் காணப்படும் thalassoides என்ற துணையினம் வலசை செல்லாது. இந்தியா, சீனா ஆகிய இடங்களில் உள்ள thalassinus என்ற துணையினம், இனப்பெருக்க காலத்தில் இமய மலைக்கு வலசை செல்லும்.

- ஒரு பொந்துக்குள் ஆண், பெண் பறவைகள் சேர்ந்து புல், இலை ஆகியவற்றை வைத்து கூடு கட்டும். மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை இடும். இரு பறவைகளும் அடைகாக்கும். எத்தனை நாட்கள் என்பது தெரியவில்லை. ஒரு சுவாரஸ்யமான தகவல். குயில்களை இதன் கூட்டில் முட்டையிட அனுமதிக்கும். ஆனால் குஞ்சுகளுக்கு வண்டுகளையும், வெட்டுக்கிளிகளையும் ஊட்டும். இந்த உணவை செரிக்கக் கூடிய திறன், இதன் குஞ்சுகளுக்கு மட்டுமே உண்டு. குயில் குஞ்சுகளுக்கு செரிக்காமல் அவை இறந்துவிடும். இவ்வாறு உணவை கேடயமாக பயன்படுத்தி, அடையுண்ணியிடமிருந்து(brood parasite) இருந்து புத்திசாலித்தனமாக தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. (Source)
- வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family): Muscicapidae – Old World Flycatchers Eumyias – eu (சிறந்த,நல்ல ) மற்றும் myias (ஈப்பிடிப்பான்) என்ற இரு கிரேக்க சொற்களால் ஆனது. thalassinus- சிற்றின பெயருக்கு கடல் நீலம் என்று அர்த்தம். Eumyias thalassinus – மிகச் சிறந்த ஈப்பிடிப்பான். கடல் நீல வண்ணத்தில் இருக்கும். ஆங்கிலப் பெயரான Verditer என்பதற்கு மயில் துத்த நிறம் (Copper-Sulphate blue) என்று அர்த்தம்.