தூவித்தோழர்கள்-48

சாம்பல் இருவாச்சி (Indian Gray Hornbill)

ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு அழகு. அதற்கென்று தனித்துவமான குணங்களும் உண்டு. ஆனால் ஏதோ சில காரணங்களால், சில பறவைகள் பித்து பிடிக்க வைக்கிறது. இந்த சாம்பல் இருவாச்சி எனக்கு அப்படிப்பட்ட பறவைகளுள் ஒன்று. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத, மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் பறவை. 2024 மே பறவை பார்த்தல் வகுப்பில், ஈஸ்வர் Sir ருடன் பறவை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு ஜோடி இருவாச்சியை பார்த்தது முதல் முறை. கரும்பருந்தை நினைவுபடுத்தும் அதன் குரலும், விரிந்த சிறகுகளின் பிரம்மாண்டமும், சிறகை அசைக்காமல் மிதக்கும் தோரணையும் என்னை கவர்ந்தது.

©Fareed Mohmed

உணவிடம் எதிரில் தூரத்தில் ஒரு ஆலமரம் தெரியும். நண்பர்களுடன் அந்த ஆலடி பாறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, தலைக்கு மேலே ஜோடியாக பறந்து சென்று, அருகில் உள்ள ஆலமரத்தில் அமர்ந்தன. நீண்ட அலகு. அதில் தொப்பி போல ஒரு அமைப்பு (ஆங்கிலத்தில் அதன் பெயர் casque). இரண்டு வாய் போன்ற அமைப்பு இருப்பதால் தான், இது இருவாட்சி என்று அழைக்கப்படுகிறது. (க. ரத்னம் தென்னிந்திய பறவைகள் புத்தகத்தில், இரு வாயன் என்று அழைக்கிறார் ) உடலின் மேல் பகுதி, கழுத்து, மார்பு, நீண்ட வால் ஆகியவை கருஞ்சாம்பல் நிறம். உடலின் அடிப்புறம்,வாலின் நுனி வெண்மை. விழிப்படலம் சிவந்த பழுப்பு. பெண் பறவை அளவில் சற்று சிறிதாகவும், அலகு மேலுள்ள தொப்பி போன்ற அமைப்பு சிறிதாகவும், விழிப்படலம் பழுப்பு நிறமாகவும் இருக்கிறது.

©Denis Tétreault

விடியற்காலையில் வெள்ளிமலை வகுப்பிற்கு நண்பர்களுடன் காரில் வந்தோம். வழக்கம்போல வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். கெட்டி சமுத்திரம் ஏரி தாண்டி வரும் வழியில், காருக்கு இணையாகவே பறந்து வந்த இருவாச்சியை பார்த்தவுடன் ஆனந்தத்தில் Hornbill என்று கத்தி, அனைவரையும் பயமுறுத்தியது தனிக்கதை. இப்போது வரை, ஒவ்வொரு முறை அந்த இடத்தை கடக்கும் போதும், அந்த இருவாச்சியை தேடாமல் வந்ததில்லை.

அதன் பழக்கவழக்கம், வசிப்பிடம் தேர்ந்தெடுக்கும் முறை, குஞ்சுகளை வளர்ப்பது என்று அதன் வாழ்க்கையை முழுவதுமாக காட்டும் காணொளி. இருவாச்சி போன்ற சில பறவைகளுக்கு கண் இமை முடிகள் உண்டு என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமான தகவல்.

படித்தறிந்தது

  • இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், தெற்கு நேபால், வடகிழக்கு பங்களாதேஷ், வடமேற்கு பாகிஸ்தான் (பஞ்சாப்) ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படும். வேறு துணை இனங்கள் கிடையாது. வலசை செல்லாத பறவை.
©BOW
  • பெரிய மரங்களில் உள்ள பொந்தில், மரப்பட்டையை வைத்து உட்புறம் மெத்தை அமைக்கிறது. பெண் பறவை தன் எச்சம் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து பொந்தின் திறப்பை பெரும்பாலும் அடைத்து விடுகிறது. அலகு மட்டும் வெளியே வரும் அளவு ஓட்டை விடுகிறது. இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இடுகிறது. 21 நாட்கள் பெண் பறவை அடைகாக்கிறது. அடைகாக்கும் சமயத்தில் சிறகுகளை உதிர்த்து விடுகிறது. குஞ்சுகளுக்கும், பெண் பறவைக்கும் சேர்த்து ஆண் பறவை இரைத் தேடி, ஒரு நாளில் பலமுறை உணவு கொண்டு வருகிறது. அந்த சமயத்தில், ஆண் பறவைக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், பெண் பறவையும் குஞ்சுகளும் சேர்ந்து இறக்க வேண்டியது தான். 45 நாட்கள் குஞ்சுகள் பெற்றோரின் கவனிப்பில் இருக்கின்றன.
©Ragoo Rao
  •  வரிசை(Order) : Bucerotiformes குடும்பம் (Family) : Bucerotidae Ocyceros – பேரினப்பெயர் கூர்மையான(oxys) மற்றும் கொம்பு(keras) என்ற இரு கிரேக்க சொற்களால் ஆனது. birostris-சிற்றின பெயர் இரு லத்தீன் சொற்களால் ஆனது. bi-என்றால் இரண்டு. rostris என்றால் அலகு. Ocyceros birostris- கூர்மையான கொம்பு போன்ற சிறு அலகும் , இரண்டு அலகுகளும் உடைய பறவை.