பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – கொரட்டூர் ஏரி – சென்னை – 23.05.2026

அந்தக் குகை, இதுவரை மானுடர் கண்ட துயரங்களிலிருந்து விடுபட வேண்டி ஒரு சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்குள் வளர்ந்த மனிதற்களுக்கு அனுமதியில்லை. அவர்களின் மேல் பாவத்தின் கறை ஏற்கனவே படிந்துவிட்டிருந்தது. எனவே, வெவ்வேறு ஊர்களில் அன்று பிறந்த குழந்தைகள், தாயின் கருவறையை விட்டு வெளியேறி வெளிச்சத்தைக் காணும் முன்னே ஒளி புகாமல், காற்று மட்டும் செல்லும்படி முடையப்பட்டிருந்த கூடைகளுக்குள் பொதியப்பட்டு, சேவகர்களால் ஏந்தப்பட்டு, குகையை நோக்கி விரைந்தன.
குகைக்குள் நுழைந்து இறுதிவரை கொண்டு செல்லப்பட்டன. முடிவில் குகை, செங்குத்தான சுவர் போல செதுக்கப் பட்டிருந்தது. சுவருக்கும், வாயிலுக்கும் நடுவே மற்றுமொறு குட்டைச் சுவர். அதில் குழந்தைகள் லாவகமாக பிணைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் நிற்க, நடக்க, அமர, படுக்க முடியும். உண்ணவோ, அருந்தவோ முடியும். விளையாட, பூசலிட, செயலற்றிருக்கவும் முடியும். ஒன்று மட்டும் – குறிப்பிடும்படி அவ்வளவு முக்கியமானதும் அல்ல – அவர்கள் உள்ளே நுழைந்த வழியை, அதாவது பின்னாலிருக்கும் வாயிலைப் பார்க்க முடியாது.
அதனால் என்ன? குகைக்கு வெளியே நடமாடுபவர்களின் குரல்கள் தெளிவாய்க் கேட்டது. அவர்களின் உருவம், குகைக்கு வெளியே ஏற்றப்பட்டிருந்த தீயால், நிழலாய் மாறி குகைக் குழந்தைகளுக்கு முன்பிருந்த சுவரில் வீழத்தப்பட்டிருந்தது. ஒளி வஞ்சகமானது. அது ஏற்படுத்தும் வண்ண பேதங்கள் எத்தனை? ஏற்றத்தாழ்வுகள் எத்தனை, எத்தனை?? இதோ பேதங்களற்ற நிழல். இதில் மேல், கீழில்லை. அழகும், அற்றதும் இல்லை. வண்ண உடைகளும், அவற்றின் தேவையும் இல்லை. ஆதிமனிதனின் பாவம், இதோ அகன்றது. இதோ, இதோ, இதோ நாம் தேடிய பொன்னுலகம். வென்றுவிட்டோம்!
குழந்தைகள் வளர்ந்தன. அவர்களிடம் மகிழ்வன்றி வேறில்லை. அங்கு உறைக்கப்பட்டதனைத்தும் உண்மையே. செய்யப்பட்டதனைத்தும் அறமே. ஒருவருக்கொருவர் பறிமாறிக் கொண்டதனைத்தும் அன்பே. ஒருவேளை தவறுதலாக புவியில் நாம் சொர்கத்தைப் படைத்துவிட்டோமோ எனும் சந்தேகம் அங்கே எழாமலில்லை.
விதைகள் பூமியை இறுகப்பற்ற வேர்களை விரிக்கும்போதே, மறுமுனையில் காற்றில் அலைபாயும் கிளைகளையும் விரிக்க வேண்டும் என வகுத்த நியதி, குழந்தைகளில் ஒன்றுக்கு மட்டும், அதைப் பிணைத்திருந்த விலங்கை சிறு உறுத்தலாக உணர்த்தியது. குழந்தை சிறிது சிறிதாக முயன்று அந்த விலங்கை உடைத்த பொழுது அது இளைஞனாகியிருந்தது. அக்கணம், அவன் தன்னுள் ஒரு ஒலியேழுவதை உணர்ந்தான். ஒலி பெருகிப் பெருகி ஒரு சொல்லென்றானது. அவன் இது வரை கேட்டிறாத ஒரு சொல். ஆனால் அதன் பொருள் அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. அவன் மயிர்கால்கள் சிலிர்த்தன. நெஞ்சம் படபடக்கத் தொடங்கியது. இதுவரை அத்தகைய இயக்கத்திற்கு பழக்கப்பட்டிராத கழுத்தின் நரம்புகள் புடைத்தன. கழுத்தெலும்புகள் முறிவதுபோல் ஒலித்தன. பெருகிப் பெருகிச் சென்ற அச்சொல், வானை முட்டி இடியேன எதிரொலித்தது.
திரும்பு !

இன்று மாலை கொரட்டூர் ஏரியை அடைகையில், நீர் சற்றே வற்றி ஏரியின் உள்ளே செல்ல அனுமதி கிடைத்திருந்தது. சென்ற முறை அமைதியாய் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நாணல் கதிர்குருவி (Clamorous reed warbler) அதன் பெயருக்கு நீதி செய்வது போல் பெருங்குரலெடுத்து அழைத்துக் கொண்டிருந்தது. ஆனால் ‘merlin’ செயலி எங்கோ பரிதாபமாய் கூவிக் கொண்டிருந்த குயிலை அடையாளம் காட்டியதே தவிற, கதிர் குருவியைக் கண்டு கொள்ளவில்லை. செயலிக்கு உதவுவோம் என குருவியின் அழைப்பின் ஒலிப்பதிவையும், கானொளியையும் பட்டியலில் சேர்த்தேன்.
கானொளி கீழே
ஏரியின் கரையில் வாலாட்டியபடியிருந்த வெண்புருவ வாலாட்டியைக் (White browed wagtail) கடந்து ஏரியின் உள்ளே நடந்தபடி பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த ஓராண்டிற்குள் செந்நீலநாரை (Purple heron) மிகவும் தெரிந்த முகமாகிவிட்டது. உள்ளே நுழைந்ததும் ‘க்றாக்’ என நலம் விசாரித்தபடி ஒரு கருவேல புதரின் மேல் அமர, அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த மற்றொரு செந்நீலநாரை ‘க்றாக்’ என ஒலியேழுப்பி நீரை நோக்கிப் பறந்தது. கூடேதும் அங்கே இருக்கிறதா எனப் பார்த்தேன். கண்களில் படவில்லை.

வழக்கம் போல நீர்ப்பறவைகளால் ஏரி நிரம்பியிருந்தது. நாமக் கோழிகள் (Eurasian coot), சின்ன, நடுவாந்தர, பெரிய கொக்குகள் (Small, Medium, Great Egrets), நத்தைக் கொத்தி நாரைகள் (Open bills), அரிவாள் மூக்கன்கள் (Black headed and Glossy ibis), சங்குவளை நாரைகள் (Painted storks), புள்ளி மூக்கு வாத்துகள் (Spot billed ducks). மூன்றில் இரண்டு குருகுகள் (Yellow and Cinnamon bittern) நெடுநேரம் மறைந்திருந்ததால் சலிப்புற்று எழுந்து பறந்தபோது பார்வைக்குச் சிக்கின. பொறி மீன் கொத்தி (Pied kingfisher) ஜோடி வழக்கம் போல அதே மின் கம்பியில் அமர்ந்திருந்தது.

சில நூறு மீட்டர்கள் நடந்து சென்றதும் கால்கள் சேற்றில் புதையத்துவங்க, அதுதான் எல்லையென உணர்ந்தபடி சற்று அருகில், நீர்தாவரங்களற்ற ஒரு வெற்றுப்பரப்பில் சென்று அமர்ந்து கொண்டேன். நெடுங்கால் உள்ளான்கள் (Black winged stilt) மிக அருகே நின்றிருந்தன

ஒரு ஆள்காட்டிப்பறவை (Red wattled lapwing) அலற, அத்திசையிலிருந்து ஒரு நாய் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நெருங்கி வந்து என்னை சோதித்திவிட்டு, சற்று தள்ளி சென்று படுத்தபடி அங்கிருந்த ஒரு நெகிழிக் குவளையை எடுத்துக் கொண்டு விளையாடத் துவங்கியது.

சற்று நேர அமைதிக்குப்பின் ஒருவர் பின் ஒருவராக, ஒன்றென தோற்றம் கொண்ட நால்வர் வருகைத்தரத் துவங்கினர்.
1. ஜெர்டான் புதர் வானம்பாடி (Jerdons bush lark)
2. வானம்பாடி (Oriental skylark)
3. நெட்டைக்காலி (Paddy field pipit)
4. விசிறிவால் கதிர்குருவி (Zitting cisticola)

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் மாலையை கடந்து இரவை நெருங்கிவிட்டிருந்ததை கவனிக்கவில்லை. குறைந்த வெளிச்சம் புகைப்படங்களின் துல்லியத்தைக் குறைக்க, புகைப்படக் கருவியை மடியில் வைத்தேன். பின் தொலைநோக்கியையும் அருகே வைத்தேன். அருகிலிருந்த நாய் உறங்கிக் கொண்டிருந்தது. அந்த மங்கிய வெளிச்சமும், ஈரத் தரையும், ஏரியின் குளிர் நிறைந்தக் காற்றும், மேலெழுந்திருந்த நிலவும், ஏகாந்தமாய் உறங்கிக் கொண்டிருந்த நாயும் நெஞ்சில் ஏக்கத்தை நிறைக்க அப்படியே ஏரியின் விரிநிலத்தில் படுத்துக் கொண்டேன்.

மேகங்களற்று வானம் விரிந்திருந்தது. ஒரு நாளில் எத்தனை முறை வானத்தைப் பார்க்கிறோம் என எண்ணிக் கொண்டேன். பறவைகள் ஒவ்வொன்றாக கூடு திரும்பிக் கொண்டிருந்தன. கொக்கு ஒன்று வாயில் சிப்பியைக் கவ்விக் கொண்டு பறக்க, படமெடுத்து அதை உருப்பெருக்கிப் பார்க்கையில்தான் தெரிந்தது அது கரண்டிவாயன் என (Eurasian spoon bill). இப்பறவையை கொரட்டூரில் முதல் முறைப் பார்க்கிறேன்.

ஒளி குறைந்து கொண்டேயிருந்தது. பறவைகளின் ஒலி அதிகரித்தபடி இருந்தது. மூன்று பஞ்சுருட்டான்கள் (Asian green bee eater) கருவேலத்தின் முனையில் அமர்ந்து அதிர்வதுபோல் மிகவேகமாக வாலையாட்டியபடி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.
அப்பொழுது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு கருநிற பறக்கும் கம்பளம் வந்து கொண்டிருந்தது. அருகே நெருங்க, நெருங்க அவை அரிவாள் மூக்கன்கள் (Glossy ibis) எனத் தெரிந்தது. கம்பளம் ஏரியை நெருங்கித் தாழ்த் தாழ வந்து, ஒரு கணத்தில் ஒடிந்து நொருங்கியது போல் ஒவ்வொறு பறவையும் தன் கூட்டத்தைவிட்டு சருகென உதிர்ந்து புதர் கூட்டங்களுக்குள் மறைந்தன. ஒன்றன் பின் ஒன்றேன பறக்கும் கம்பளங்கள் வந்து கொண்டேயிருந்தன. அவை புதர்களை நெருக்கியதும் சட்டென உட்புகுந்து மறைந்தன.
கூடு திரும்புதல் என என் உள்ளே ஒரு சொல் ஓடிக்கொண்டிருந்தது. திரும்புதல்… எதிலிருந்து? எங்கிருந்து? எப்பொழுது? எதை நோக்கி? எதை அடைய அல்ல துறக்க?
திரும்புகையில் ஏனிந்த வேகம்? இயற்கை எப்பொழுதும் நம்மை அதை நோக்கித் திரும்பச் சொல்கிறதா? அந்த அழைப்பைத்தான் நாம் ஈர்ப்புவிசையென புரிந்து கொண்டு அதற்கு விதிகளும், சூத்திரங்களும் எழுதி, எளிமைப்படுத்தி விலகிச் சென்று விட்டோமா?
இந்த வெட்ட வெளியில் படுத்துக் கொண்டிருக்கும் என் ஆடைகள் இயற்கையில் உள்உறையும் ரசத்தால் ஈரப்படுத்தப்படுகின்றன. அந்த ஈரம் என் நெஞ்சில் நிறைகிறது. கண்களில் ததும்புகிறது. காற்றில் கலந்து குளிராய் விரிகிறது. இந்த மண்ணும், வானும், தாவரங்களும், பறவைகளும், எனக்குத் துணையாய் படுத்திருக்கும் இந்த நாயும், நானும் அந்த ஈரத்தால் இணைகிறேம். தோழர்களாகிறோம். அமுது சொர்கத்திலல்ல, மண்ணில் இருக்கிறது. அதன் நித்திய மதுரத்தை உணர நாம் சற்றேனும் முயல வேண்டியிருக்கிறது. நம் கழுத்தைக் கட்டியிருக்கும் தளைகளை அறுக்க வேண்டியிருக்கிறது. நிழலை நோக்கிச் செல்லும் கூட்டத்திலிருந்து விடுபட வேண்டியிருக்கிறது. நரம்புகள் புடைக்க, எலும்புகள் முறிபடும் வலியெழ திரும்ப வேண்டியிருக்கிறது.
அதற்குள் அலைபேசி அழைக்க, இப்போதைக்கு வீடு திரும்புவோம் என நானும், நாயும் கரை நோக்கி நடக்கத் துவங்கினோம்.
eBird checklist: https://ebird.org/checklist/S347088986
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
சென்னை
23.05.2026