தூவித்தோழர்கள்-49

தூக்கணாங்குருவி(Baya Weaver)

என் சிறு வயதில், முட்டாள் குரங்கும், கேட்காமல் அறிவுரை கூறிய தூக்கணாங்குருவியும் உள்ள பஞ்சதந்திர கதையில், அறிமுகமாகியது இந்த பறவை. பலமுறை இதன் கூட்டை பார்த்திருக்கிறேன். பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்து, தொலைநோக்கி வாங்கிய பின் தான், குருவியை பார்த்தேன். இனப்பெருக்க ஆண்பறவையின் தலையும், பிடரியும், மார்பும் மஞ்சள். அலகு, கன்னம், கழுத்து பகுதி கருப்பு. வயிறு, தொடை, வாலடி வெள்ளை. பழுப்பும், மஞ்சளும் கலந்த இறகுகள். இனப்பெருக்கமில்லா காலத்தில் ஆண்பறவைக்கும், பெண் பறவைக்கும் வேறுபாடு இல்லை. மஞ்சள் மற்றும் கருப்புக்கு பதில் பழுப்பு நிறமாக உள்ளது. பார்க்க பெண் சிட்டு குருவி போல இருக்கும்.

பனை மரத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ள கூடு

மே மாத இறுதியில் பொள்ளாச்சி தில்லைவன தோட்டத்திற்கு சென்ற போது, பனை மரம் அருகே ‘கீ கீ கிர்ர்’ என்ற சத்தம் கேட்டது. மேலே இரு ஆண் தூக்கணாங்குருவிகள் கூடு கட்டி கொண்டிருந்தன. கைவிடப்பட்ட நிலையில் 3 கூடுகள் இருந்தன. அருகில் இருந்த மண் மேட்டில் அமர்ந்து, அவற்றை பார்க்க ஆரம்பித்தேன். சில்லை சிட்டுக்களுடன் பறந்து சென்று, மின்சார கம்பியில் அமர்ந்தது. பின் தென்னை மர ஓலையின் அடியிலிருந்து நாரை உரித்தெடுத்து, கொண்டு வந்து கூட்டில் இணைத்து கட்டுகிறது. ஒரு நார் நேர்த்தியாக பின்னப்பட்டு, ஒரு கூடாக மாறும் அதிசயத்தை பார்க்க முடிந்தது நான் செய்த மிகப்பெரிய பேறு. 18 நாட்கள் கூடு கட்டும் ஆண்குருவியிடம், விடாமுயற்சியை கற்று கொள்ள வேண்டும். அங்கு வரிசையாக 5 பனை மரங்கள் இருந்தன. அதில் சரியாக ஆண்பனை மரத்தை தேர்தெடுத்த, இச்சிறு குருவியின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. பெண் குருவிக்கு ஒரு வேண்டுகோள். இங்கு கூடு கட்டும் ஆண் குருவியை தேர்ந்தெடுங்கள். இந்த மரத்தில் பல கூடுகள் கட்டி, நீங்கள் பல்கி பெருக ஆசை. (18 days- Source)

படித்தறிந்தது

  • இந்திய துணை கண்டம், இந்தோனேசிய தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஹவாய் தீவுகளிலும் மனிதர்களால் பரவியது.ஆனால் அங்கு நிலைக்கவில்லை. மொத்தம் ஐந்து துணையினங்கள் உள்ளன.
©BOW
  • ஆண் பறவை 3-5 பெண் பறவைகளுடன் இருக்கும். பொதுவாக கூட்டமாக வாழும். ஒரே மரத்தில் 60 லிருந்து 200 கூடுகள் வரை இருக்கலாம். கூடு உருண்டையாக, கீழே நீண்ட குழல் போன்ற அமைப்புடன் உள்ளது. நார் மற்றும் புல்லை வைத்து ஆண் பறவை கூடு கட்ட ஆரம்பிக்கிறது. நாடிப்பட்டையுடன் இருக்கும் தலைக்காசம் போல் இருப்பதால், இது Helmet stage என்று அழைக்கப்படுகிறது. பெண் பறவை கூட்டை ஏற்றுக்கொண்ட பின்னரே, ஆண் பறவை அதை முழுமையாக முடிக்கிறது. கூட்டுக்கு வலுவூட்ட மண், சாணம் போன்றவற்றை பூசி கட்டுகிறது. சில சமயங்களில் பெண் பறவை, உள்ளடுக்கை அமைக்க உதவுகிறது. இறுதியாக நீண்ட குழல் போன்ற அமைப்பை கட்டுகிறது. பெரும்பாலும் மூன்று முட்டைகள் இடுகிறது. 14-15 நாட்கள் பெண் பறவை அடை காக்கிறது. குஞ்சு பொரித்தபின், இரு பறவைகளும் சேர்ந்து உணவூட்டி வளர்க்கின்றன. இப்பருவத்திற்கான வேட்டையாடிகள் பாம்பு, குரங்கு மற்றும் காகம். கைவிடப்பட்ட கூடுகளை சில பூச்சிகள் தங்குமிடமாகப் பயன்படுத்துகின்றன. (Source: BOW)
©Drashokk 
  • வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family): Ploceidae – Weavers and Allies;  Ploceus – பேரினப்பெயர் plokeus (நெசவு செய்கின்ற) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. philippinus என்ற இனப்பெயர், இப்பறவையின் மாதிரி பிலிப்பைன்ஸ் பகுதியில் இருந்து வந்ததாக நினைக்கப்பட்டதால் வைக்கப்பட்டுள்ளது. 1760 ஆம் ஆண்டு, பிரெஞ்சு விலங்கியல் அறிஞர் Mathurin Jacques Brisson , அவர் ஆய்வு செய்த மாதிரி Philippines நாட்டில் சேகரிக்கப்பட்டது என்று தவறாக நம்பி, அதற்கு Coccothraustes Philippensis என்ற பெயரை கொடுத்தார். பின்னர் அவர் பயன்படுத்திய மாதிரி உண்மையில் இலங்கையிலிருந்து வந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பெயர் மாற்றப்படவில்லை. Ploceus philippinus – நெசவு செய்கின்ற, பிலிப்பைன்ஸ்  பகுதியை சேர்ந்தது என்று தவறுதலாக பெயர் வைக்கப்பட்ட பறவை.

Leave a Reply