அடைதலென்பது

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – உன்கல் ஏரி – ஹூப்ளி – கர்நாடகம் – 24&25.06.2026

24.06.2026 அன்று விடுதியறையில் காலை 5 மணிக்கு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இன்னும் வெளியே வெளிச்சம் பரவவில்லை. விடுதியின் எதிரிலேயே உன்கல் ஏரி (Unkal kere) இருந்தது. சுற்றிலும் கம்பி வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த அம்மாபெரும் ஏரியுள் நுழையும்  வழி எங்கென்று தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். முந்தய நாள் இரவிலிருந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. சென்னையின் தட்பவெப்பநிலைதான் ஹூப்ளியிலிருக்கும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு மழைக்கான உடை எதுவும் கொண்டுவரவில்லை. இது போதாதெனக் கடும் குளிர் வேறு. அப்படியேச் சென்றாலும் 7  மணிக்கெல்லாம் விடுதிக்கு திரும்பியாக வேண்டிய சூழல். இப்படியாக அனைத்தும் ‘இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குவதே உசிதம்’ என அறிவுரைத்ததால், 5.50 மணிக்கு சற்றே வெளியே வெளிச்சம் தெரியத் துவங்கியதும், மேற்கொண்டு தாமதிக்கக் கூடாதென உடனடியாக அறையை விட்டுக் கிளம்பினேன்.

இக்கட்டுரையின் நாயகனாகும் வாய்ப்பு பாம்புதாராவிற்கு (Oriental darter) இருந்தும், இரண்டுநாள் நிகழ்விலும் அவர் பங்கு பெறாததால் அவ்வாய்ப்பு பறிபோனது. ஆனால் அந்த இடத்திற்கு தானாக வந்த ஒருவரை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. பறவைப்பார்த்தலின் இரண்டு நாட்களிலும் அவர் உடனிருந்தார். மிக அருகில், சற்றும் அலட்டிக் கொள்ளாமல், அவர் எல்லையென்று நான் விளங்கிக் கொண்ட ஏரிப்பரப்பில் துவக்கம் முதல் இறுதிவரை என்னுடன் இருந்தார்.

பெரிய நீர்காகங்கள், ஏரியின் நடுவில் இருக்கும் விவேகாநந்தர் சிலையில்

விடுதியிலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் ஏரியின் நுழைவாயில் இருந்தது. உள்ளே நுழையும் முன் குழந்தைகளுக்கு – ரூ 10
பெரியவர்களுக்கு – ரூ 20
கேமிரா- ரூ 500,
என்றிருந்த அறிவுப்புப் பலகையைப் பார்த்ததும், படக்கருவியை எடுக்கலாமா, வேண்டாமா எனும் குழப்பம் எழுந்தது. நல்லவேளையாக கட்டணச்சீட்டு வழங்கும் சிறு அறை இழுத்து மூடப்பட்டிருந்ததாலும், ஏரியின் நடைபாதையில் மக்கள் நடமாட்டம் தெரிந்ததாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

மழை வலுக்கத் துவங்கியது. உள்ளே நுழைந்ததிலிருந்தே பெருங்குரலில் அழைத்துக் கொண்டிருந்த மைனாக்கள் மரக்கிளைகளில் நிழலுருக்களாகத் தெரிந்தன. அவ்வப்போது பலமான காற்று வந்து, என்னை அறைந்து, உடல் நடுக்கம் குறையாதபடி பார்த்துக் கொண்டது. நடைபாதையை ஒட்டி ஏரியை பார்த்திருந்த, கூரையிடப்பட்ட ஒரு மேடையில் ஏறிக் கொண்டேன். ஹைதராபாத்தில் பார்த்த ஹுசைன் ஏரியும், கர்நாடகத்தின், இத்தனைக்கும் சிறுநகரான ஹூப்ளியில் இருக்கும் இந்த ஏரியும் பராமரிக்கப்பட்டிருக்கும் விதம் என்னை வியப்பிலாழ்த்தியது. புழலையும், கொரட்டூரையும், மணிமங்கலம் ஏரியையும் பரிதாபத்துடன் நினைத்துக் கொண்டேன். நல்லவேளையாக ஏரிகளால் இங்கே வந்து பார்க்கமுடியாது என்பதால் என்னைப்போல் அவை விரக்தியடையாமல் இருக்கலாம்.

சின்னான் (Red vented bulbul)

சுமார் 6.10 மணிக்கு நன்றாக விடிந்துவிட்டது. மழையும் சற்றே குறைந்து தூரலாக மாறியிருந்தது. eBird செயலி பரிந்துரைத்த இடத்திற்கு செல்லும் வழியில், நடைபாதையில் கதவிடப்பட்டு, அதில் பெரிய பூட்டு தொங்கியது. பறவை ஆர்வலர்களின் தொல்லைதாங்காமல் பறவைகள், ஏரி நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கலாம். நான் எதிர் திசையில் நடக்கத்துவங்கினேன். ஏரியின் நடைபாதையை ஒட்டிய பூங்காவழி சில நூறு மீட்டர்கள் கடந்ததும் ஏரியை ஒட்டி நடைபாதை சுற்றிச் செல்லத் துவங்கியது.

பூங்காவில் முதலில் அழைத்து தன் இருப்பை பதிவு செய்து கொண்டவர் சின்னான் (Red vented bulbul). பின் ஏரிமுழுதும் வியாபித்திருக்கும் சாம்பல் கதிர்குருவிகளின் (Ashy priniya) பிரதிநிதி ஒருவரை சந்தித்தேன். இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டோம். தலைக்குமேலே 30 வினாடிகளுக்கு ஒருமுறை பச்சைக் கிளிகளின் வரிசை சென்று கொண்டிருந்தது. மனிதர்கள்தான் வரிசையில் ஒன்றன்பின் ஒருவராக செல்ல வேண்டியுள்ளது. பறவைகளுக்கு அந்தப் பிரச்சனையில்லை. அவை எவ்வளவு தூரம் வேண்டுமென்றாலும், பக்கவாட்டில் விரிந்து சமமாகச் செல்ல முடியும். மனிதர்கள் சமத்துவமாய் வாழ விரிந்து பரந்த வானம் போல நிலமும், மேடு, பள்ளங்களற்று, உயர்வு தாழ்வற்று,  விரிய வேண்டுமோ என்னவோ? நாம் வானைப் பார்க்காமல், வசதியாக நிலத்தின் அடிப்படையில் பறவைகளை பிரித்துக் கொண்டிருக்கிறோம்.

முக்குளிப்பான் (Little grebe)

ஏரியில் அந்நாளின் முதல் நீர்ப்பறவையான முக்குளிப்பான் (Little grebe) கண்ணில்பட்டது. ஏரியின் நடைபாதைக்கு மிக அருகில் நீந்திக் கொண்டிருந்தது. பின் ஒரு நாமக் கோழி (Eurasian coot), சில பெரிய நீர்காகங்கள் (Great cormorant). இவைதான் இரண்டு நாட்களும் மொத்தமாய் ஏரியின் உள்ளே பார்த்தப் பறவைகள். பிற அனைத்தும் ஏரிக்கு வெளியே, நடைபாதையை சுற்றியுள்ள இடங்களில் பார்த்தேன்.

பட்டாணிக் குருவிகளை (Cinereous tit) முதல் முறை பார்க்கிறேன்.  சுறுசுறுப்பானவை. எந்த அளவிற்கென்றால், பறவைகளைப் பார்த்துவிட்டு புகைப்டக் கருவியை எடுக்க இடைப்பட்ட சில வினாடிகளில் அச்செடியிலிருந்த அனைத்து இலைகளையும் பரிசோதித்துவிட்டு அடுத்த செடிக்கு சென்றுவிட்டன. சென்ற செடியில் இப்பறவைகளைப் பார்த்து உறுதிசெய்வதற்குள், அடுத்த செடிக்குப் பறந்துவிட்டன.


பட்டாணிக் குருவி (Cinereous tit)

இந்த ஊரின் மனிதர்கள் இனிமையானவர்கள். பலர் என்னைக் கடந்த பின் வானத்தையும், மரங்களையும் அன்னாந்து பார்த்தபடியே சென்றதை புன்னகையுடன் கவனித்தேன். மெல்லோட்டம் சென்று கொண்டிருந்த ஒருவர் சற்று நின்று என்னிடம் ‘இங்கிருப்பதை விட அங்கே நிறைய பறவைகள் உள்ளன, அங்கே செல்க’ என சொல்லிச் சென்றார். இன்னொரு மெல்லோட்டக்காரர் என்னிடம் வந்து ‘தொழில்முறை புகைப்படக்காரரா?” என்றார். இல்லையென்ற பின்னும் ஆர்வத்துடன் அதுவரை எடுத்த படங்களை காண்பிக்கச் சொல்லி, பூரிப்புடன் பார்த்து வாழ்த்திச் சென்றார். வாய் நிறைய பாக்கும், புன்னகையுமாய் வந்த ஒருவர் கன்னடத்தில் பேசி, பின் இந்தியில் பேசி, இரண்டு மொழிகளுமே தெரியாது என நான் ஆங்கிலத்தில் சொல்ல, ஆச்சரியத்தில் உறைந்த முகத்துடன் என்னை பார்த்தபடியே சென்றது இன்னும் நினைவில் உள்ளது.

வானத்தில் காகங்கள் கரைய மேலே பார்த்தேன். காகங்கள் ஒரு கரும்பருந்தை அவர்கள் எல்லையிலிருந்து விரட்டிக் கொண்டிருந்தன. தொலைநோக்கியில் பார்ப்பதற்குமுன் பருந்து பெரும்பாலும் ஒரு கட்டிடத்தின் பின் மறைந்துவிட்டிருந்தது. ஆனால் அதன் கழுத்து வெண்ணிறமாய்த் தெரிய, தெளிவாகப் பார்ப்பதற்குள் மறைந்துவிட்டது. மீண்டும் அந்தப் பறவையை ஏரியின் மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்ததை அடுத்தநாள் பார்த்தேன். வட்டம் நீரை நோக்கி இறங்கும் சுழலாகியது. ஒருவேளை மீன்பருந்தோ (Osprey)? விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தின் ஜனவரி மாத சாவல் முடியப்போவதை எண்ணி அடைந்த மகிழ்ச்சி, மீனை காலால் கவ்வியபடி பறந்த போது சிறகுகள் காட்டிய செந்நிறத்தால் காணமல் போனது. அங்கு மீன் வேட்டையிலிருந்தவர் செம்பருந்து (Brahminy Kite).

செம்பருந்து (Brahminy Kite)

அடுத்த செந்நிறப்பறவை நடைபாதையின் மறுபுறம் நீர்த்தாவரங்கள் நிறைந்திருந்த குட்டையில் காணக்கிடைத்தது. பிற இடங்களில் குருகை (Cinnmon bittern) பார்ப்பதே சாவலான நிலையில் இங்கே அவர்  பச்சைப் பகைப்புலத்தில் சாகவாசமாக நின்றபடி பாடிக் கொண்டிருந்தார். அதை பதிவு செய்ய மேலும் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

குருகு (Cinnmon bittern)

வழிநெடுக பல பறவைகள். செம்மீசைச் சின்னான் (Red-whiskered Bulbul), தூக்கனாங் குருவி (Baya weaver), ஆள்காட்டி (Red wattled lapwing), குக்குறுவான் (Copper smith barbet) இன்னும் பல இருந்தும், அன்றைய தினத்தை மறக்க முடியாததாய் மாற்றியவர் விச்சுளி அல்லது வெண்மார்பு மீன்கொத்தி (White throated kingfisher).

விச்சுளி அல்லது வெண்மார்பு மீன்கொத்தி (White throated kingfisher).

நடைபாதையிலிருந்த கம்பத்தின் உச்சியிலிருந்த விளக்குக்கு மேலே அமர்ந்திருந்தவரை பார்த்து மனதில் குறித்துக் கொண்டு அடுத்த பறவைக்காக முன்னேறிச் சென்ற என்னை முந்திச் சென்று நடைபாதைக் கைப்பிடியில் அமர்ந்தார். அவர் அலகில் ஏதோ மின்னியது. கைகள் பரபரப்படைய தொலைநோக்கியை எடுத்துப் பார்த்தால் அவர் அலகில் ஒரு மீன். என்ன மீனா? என்னால் நம்ப முடியாமல் மீண்டும் பார்த்தேன். ஆமாம் மீனேதான். அதற்குள் அவர் மீனை இரண்டுமுறை கைப்படி கம்பியில் அறைந்து பின் விழுங்கிவிட்டார்.
பறவைப் பார்த்தல் துவங்கிய ஒன்றரை ஆண்டுகளாக கிட்டத்தட்ட தினமும் விச்சுளியை பார்த்துவருகிறேன். ஆனால் ஒருமுறைக் கூட இவர் மீன் பிடித்து உண்பதைப் பார்த்தில்லை. சின்ன மீன்கொத்தியோ (Common kingfisher) வைத்தகண் வாங்காமல் நீர்பரப்பையே பார்த்திருக்க, பொறி மீன்கொத்தி (Pied kingfisher) மீனுக்காக பத்துமுறை முக்குளிக்க, சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அங்குமிங்கும் பறந்தபடியும், அமர்ந்தபடியும் இருக்கும் இவருக்கு மீன் பிடிக்க மறந்துவிட்டதோ எனும் சந்தேகம் கூட எழுந்ததுண்டு.

அதனினும் ஆச்சரியம், அவர் மீன் பிடித்த விதம். மற்ற மீன்கொத்திகளைப் போலன்றி மிக எளிமையாக, மிக மிக துல்லியமாக, நீரின் மேற்பரப்பை தீண்டியும் தீண்டாமலும் அவர் மீனைக் கொய்துவந்தார். கைப்பிடியில் அமர்ந்த படி நீரைப் பார்த்திருக்கும் அவரின் கழுத்து மட்டும் ஒருமுறை மேலேறி இறங்கியபின் ஒரு பாய்ச்சல், அடுத்த நொடி வாயில் மீனுடன் மீண்டும் கைப்பிடி மேல் அமர்வார். நீரில் சிறிது சலனம் கூட தெரியவில்லை. ஒருவேளை அரசன் வருகையில் மீன்கள் தாங்களாகவே துள்ளி அவருக்கு உணவாகின்றனவா? என எண்ணத் தோன்றாமலில்லைக்ஷ

‘அடை’ எனும் சொல் சற்றே விசேஷமானது. இலக்கை எய்துவது என்பதற்கும், ஒன்றை கொண்டு நிரப்புவது என்பதற்கும், ஒன்றால் மூடுவது என்பதற்கும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. முட்டைகளின் நிறையும் ‘அடை’ தான். பறவைகள் அடைகாக்கின்றன அல்லவா? தொகுப்பும் ‘அடை’தான். அதனால்தான் ‘தேனடை’ என்கிறோம். இதற்கெல்லாம் முந்தி ‘அடையும், அவியலும்’ உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நாம் ஓரினத்தவராகிறோம்.

அடைதல் எனும் சொல்லால் நான் அந்நிகழ்வை புரிந்து கொள்ள முயல்கிறேன். யாருடைய அடைதல் இது? விச்சுளி தன் உணவை அடைந்ததா? இல்லை மீன் தன் இறுதியை அடைந்ததா? பெரும்பாலான மீன்கள் ஏன் வெள்ளியாய் மின்னுகின்றன என எண்ணிக் கொண்டேன். நீரில் திரியும் மீன்களை பறவைகள் உணவாக்கிக் கொள்ள, வெயில்பட்டுப் பிரதிபலித்து சமிக்ஞை தர வெள்ளியை விட சிறந்த நிறம் ஏது? எனில் இந்நிகழ்வின் வழி இயற்கை தன் இலக்கை அடைந்ததா? ஒரு நிகழ்வில் இத்தனை ‘அடைதல்கள்’ இருந்தால் உண்மையில் அடைதலென்பதுதான் என்ன?

சக்காளத்திக் குயில் (Grey-bellied Cuckoo)

கிளம்ப வேண்டிய நேரம் கடந்துவிட்டதால், நுழைவாயிலை நோக்கி விரைந்தேன். ஒரு கிலோமீட்டருக்கு மேல் ஏரியைச் சுற்றி வந்திருந்தேன். எனவே ஓட்டமும் நடையுமாக திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு பறவையின் குரல் கேட்டு நின்றேன். தலைக்கு மேலே சக்களத்திக் குயில் (Grey-bellied Cuckoo) பாடிக் கொண்டிருந்தது. அதன் குரல் அத்தனை அவசரத்தையும் அழிக்க, சற்றே நிதானித்து பறவையை தொலைநோக்கி வழியே அடையாளம் கண்டுகொண்டேன். சில புகைப்படங்கள் எடுத்தபின் மீண்டும் ஓடத் துவங்கினேன். செல்லும் வழி நெடுக மனம் குயிலின் பாடலால் நிறைந்திருந்தது.

அடைதலின் பொருள் எதுவாகினும், எனக்கு இந்த ‘நிறைவடைதல்’ போதும் என நினைத்துக் கொண்டேன்.

eBird Trip report: https://ebird.org/tripreport/544075?welcome=true



லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
ஹூப்ளி, கர்நாடகம்
24 & 25.06.2026