தூவித்தோழர்கள்-53

புள்ளிச்சில்லை(Scaly-breasted Munia)

தில்லைவனத் தோட்டத்தில் மே மாத விடுமுறைக்கு சென்ற போது, சுமார் 25 குருவிகள் கூட்டமாக மின்சார கம்பியில் அமர்ந்திருந்தன. தொலைநோக்கி வைத்து பார்த்தபோது அதன் மார்பு வரிகள், அது புள்ளிச்சில்லை என்று காட்டியது. அந்த பெரிய கூட்டதிற்குள் பல சிறு குழுக்கள். நெருங்கி அமர்ந்து மற்ற பறவைக்கு இறகுகளை கோதி விட்டது ஒன்று. அலகோடு அலகு சேர்த்து கொஞ்சியது மற்றொரு ஜோடி. வாயில் வைத்த ஏதோ விதையை தின்றது ஒன்று. ஓரத்தில் இருந்த பறவை பறக்க ஆரம்பித்ததும், எல்லா பறவைகளும் சேர்ந்து கீழிறங்கி பின் மேலே பறந்து சென்றது, ஒரு நடன காட்சியை கண்டது போல் இருந்தது. நடுவே சில வெண்தொண்டைச் சில்லைகளும்(Indian Silverbill) இருந்தன. பக்கத்தில் இருந்த என் தம்பிக்கும் காட்டினேன். லக்ஷ்மி தம்பி கூறுவது போல், தொலைநோக்கியில் முதன் முதலில் பார்த்து, அவன் அதிசயித்த கணத்தை கண்டுகொண்டேன். நம் உலகிற்குள் வரும் முதல் காலடியை எடுத்து வைத்து விட்டான்.

©Neo Morpheus

‘முனியாவின் தங்கப்பழம்’ என்று தும்பி இதழில் வந்த கதை வழியாகவே முதன் முதலில் இந்த பறவையை பற்றி தெரிந்து கொண்டோம். மழைக்குப்பின், தேடி கண்டுபிடித்த செர்ரி பழத்தை சகதிக்குள் முனியா தவறவிடுகிறது. அந்த பழம் செடியாக முளைத்தபின், அதை தன் நண்பர்களுடன் சேர்ந்து பாதுகாக்கிறது. அந்தச் செடிக்கு வரும் ஆபத்துக்கள் மற்றும் இறுதியாக என்ன நடந்தது என்பது மீதிக் கதை. ஆர்வமுள்ளவர்கள் ஆங்கிலத்தில் இங்கு வாசித்து பார்க்கலாம். கதைக்கு பிறகு, புள்ளிச்சில்லையை பற்றிய தகவல்களும் இருந்தது. அதன் புகைப்படத்தில் காணப்பட்ட அழகிய மார்பு வரிகளை ஆச்சர்யத்துடன் பார்த்தது இன்றும் நினைவில் உள்ளது.

தோற்றம்

ஆண் பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் வேறுபாடு இல்லை. அகலமான , கருப்பு நிற தானியம் உண்ணும் அலகு. விழிப்படலம் ஆரஞ்சு நிறம். தலை மற்றும் தொண்டை செம்பழுப்பு நிறம். மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் உள்ள வெள்ளை நிற இறகுகளில், கருப்பு நிற ஓரம் இருப்பது, மீன் செதில்களைப் போன்ற தோற்றத்தை தருவது, இதன் தனித்துவமான அடையாளம். வாலடி வெள்ளை. கால்கள் கருப்பு நிறம்.

படித்தறிந்தது

  • புள்ளிச்சில்லை(கட்டமிட்டது) இந்தியாவில் (வடகிழக்கு மாகாணங்கள் தவிர), வடக்கு பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது. புள்ளிச்சில்லை(புள்ளியிட்டது) – இதில் 11 துணையினங்கள் உள்ளன. வாழிடத்தில், நிறத்தில், புள்ளிகளில் சிறு சிறு வேறுபாடுகள் உள்ளன. (Link)
©BOW
  • புல்லின் பூக்கள், இலைகள் மற்றும் குச்சிகளை வைத்து நுழைவாயிலோடு பந்து போல கூடு கட்டுகிறது. மெல்லிய புல்லை வைத்து உள்ளமைக்கிறது. கூடு சட்டென்று வெளியே தெரியாதபடி, மறைவாக கட்டுகிறது. வேறு பறவைகளின் பழைய கூட்டையும் சில சமயம் பயன்படுத்துகிறது. மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடுகிறது. 14 நாட்கள் அடைகாக்கிறது. 19 நாட்கள் குஞ்சுகளை வளர்க்கிறது. முதிர்ச்சியடையாத பறவைகள் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

© Lukman Nurdini
  • வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family): Estrildidae– Waxbills and Allies தானியம் உண்ணும் குருவிகள்(Finches)  இந்த குடும்பத்தில் 138 இனங்கள் உள்ளன. இதில் சிவப்புச் சில்லை(Red Avadavat) மற்றும் கருந்தலைச் சில்லை(Tricolured Munia) ஆகிய பறவைகளும் அடங்கும். Lonchura – பேரினப்பெயர் lonkhē(ஈட்டி வடிவம்) மற்றும் oura(வால்) என்ற இரு கிரேக்க சொற்கள் இணைத்து வைக்கப்பட்டுள்ளது. punctulata  என்ற இனப்பெயர் punctulatus என்ற லத்தின் சொல்லிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. (Punctuation marks ஞாபகம் வருகிறதா?) அதற்கு புள்ளிகள் என்று அர்த்தம்.  Lonchura punctulata– கூர்மையான ஈட்டி வடிவ வாலும், புள்ளிகளும் உள்ள பறவை. 

Leave a Reply