சாம்பல் கதிர்ச்சிட்டு (Ashy Prinia)
நான் தினமும் கேட்கும், சில சமயம் பார்க்க முடியும் பறவை சாம்பல் கதிர்ச்சிட்டு. சிறு பூச்சிகள், புழுக்கள், சிலந்தி மற்றும் பூக்களின் மலரமுது ஆகியவற்றை உண்ணும். பெரும்பாலான நேரம் புதருக்குள்ளே இருக்கும். மிக அரிதாக அது மின்சார கம்பியில் அமர்ந்து பாடியதை பார்த்திருக்கிறேன். அங்கிருந்து அது குதிப்பது போல் பாய்ந்து, புதருக்குள் போனது. கரு நிற கூரிய சிறிய அலகு. தலை மற்றும் முதுகு பகுதிகள் சாம்பல் நிறம். சிவப்பு நிற கருவிழிகள். மிக மெல்லிய கரு நிற புருவக்கோடு. இறகுகள் செம்பழுப்பு நிறம். நீண்ட வால். தொண்டை வெள்ளை. மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகள் ஆரஞ்சு கலந்த நிறம்.

பறவை பார்க்க ஆரம்பிக்கும் போது தையற்சிட்டு மற்றும் சாம்பல் கதிர்சிட்டின் பாடலை குழப்பிக் கொள்வேன். தினமும் கேட்ட பிறகு இப்போது வித்தியாசம் தெரிகிறது. முக்கியமான வேறுபாடு தையற்சிட்டு தொடர்ந்து ‘சுபிட் சுபிட்’ என்று குரல் எழுப்பும். ஒரு நிமிடம் வரை அது இடைவெளியில்லாமல் தொடர்ந்து கூவுவதை பதிவு செய்து இருக்கிறேன். ஆனால் சாம்பல் கதிர்சிட்டு நான்கு ஐந்து முறை ‘ஜிம்மி ஜிம்மி’ என்று கூவி விட்டு ஓர் இடைவெளி விடும். பின் மறுபடி பாடும். இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை.
படித்தறிந்தது
- வடகிழக்கு பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும் வலசை செல்லாத பறவை. நான்கு துணை இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆண்டிற்கு இரு முறை இறகுகளை உதிர்க்கிறது. ஒட்டுண்ணிகளின் தாக்கத்தால் இப்பறவை இவ்வாறு செய்யலாம் என்று கருதப்படுகிறது. உறுதியான சான்றுகள் இல்லை.

- இனப்பெருக்க காலம் மார்ச் முதல் நவம்பர் வரை. மழைக்காலத்தைப் பொறுத்து சிறிது மாறுபடலாம். ஒரு பருவத்திலேயே இரண்டு அல்லது மூன்று முறை முட்டை இடலாம். ஆண் பெண் இரு பறவைகளும் சேர்ந்து கூடு கட்டுகிறது. கூடு மூன்று விதமாக கட்டப்படலாம். 1.தையற்சிட்டை போல் இலையை சேர்த்து தைத்து கூடமைப்பது. 2.தொங்கும் பை போல புல் வைத்து கட்டப்படுவது.3. அரிதாக பந்து போல புல்வைத்து கூடமைப்பது. ஒரே ஜோடியே வெவ்வேறு வகையான கூடு கட்டவும் வாய்ப்பு உள்ளது. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரையிடும். ஆண் பெண் பறவைகள் சேர்ந்து 11 முதல் 12 நாட்கள் வரை அடைகாக்கும் . மிகவும் சிறிய குயிலான இன்னிசைக் குயில்(Plaintive Cuckoo) , இதன் கூட்டில் முட்டையிடும். (Source)

- வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family): Cisticolidae Prinia – பேரினப் பெயர் Bar-headed Priniya வை குறிக்கும் ஜவானிசிய சொல்லான Prinya என்பதிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. socialis இனப்பெயரான socialis என்ற லத்தீன் சொல்லுக்கு சமூகமாக வாழும் என்று பொருள். Prinia socialis– ப்ரினியா; நம் அருகில் வாழும்.