நீளகண்டப் பறவையைத் தேடி

பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – கொரட்டூர் ஏரி – சென்னை – 30.07.2026

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனிப் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

* அப்பர் – தேவாரம்

விஷ்ணுபுரம் பறவைகள் வட்டத்தில் வரும் மாதாந்திர போட்டியின் அறிவுப்புகளுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அறிவுப்புகளின் ஒரு பிரதி பறவைகளின் பிரதிநிதிக்கு ஒரு விசேஷமான வழியில் அனுப்பப்படுகிறது. பின் அந்த அறிவுப்புக்குத் தொடர்புடைய பறவை எச்சரிக்கையடைந்து குழுவினருடன் விளையாடத் துவங்கும். நம்ப முடியவில்லை இல்லையா? துவக்கத்தில் நானும் நம்பவில்லை. மார்ச் மாத போட்டிக்காக செந்நீல நாரையை தேடியபோது,  நான் பார்த்தபோதெல்லாம், அவர் உண்ணாவிரதம் இருப்பது போல, கிட்டத்தட்ட ஒருமாதம் என்னை அலையவிட்டு, பின் என்மேல் பரிதாபப்பட்டு ஒரு மீனைக் கொத்தினார். அதைத் தற்செயலென்றே நம்பியிருந்த என்னை, ஜூன் மாத அறிவிப்பு ‘பாம்புதாரா, மீனைச் சுண்டிப் பிடிப்பதை பார்க்க வேண்டும்’ என வந்த பின், அவர் புழல் ஏரியிலிருந்தும், கொரட்டூர் ஏரியிலிருந்தும் மாயமானதால், தகவல் உண்மைதான் என நம்ப வேண்டியதாயிற்று.

சங்குவளை நாரை (Painted stork)

30-ஜூலை-2026 அன்று வேறொரு வேலைக்காக விடுப்பெடுத்திருந்தேன். வேலை மதியம்தான் என்பதால், காலை பறவைப்பார்த்தலுக்காக கொரட்டூர் சென்றேன். வழக்கமாக ஏரியில் பறவைகள் பார்க்கும் இடம், சமீபத்தில் பெய்த மழையால், நீர் நிரம்பி உள்ளே செல்லவிடாமல் செய்திருந்தது. எனவே கரையிலிருந்தபடி பார்க்கத் துவங்கினேன். உள்ளே பெரும் எண்ணிக்கையில் சிறிய நீர்காகங்கள் (Little cormorant) நீந்திக் கொண்டிருந்தன. சின்ன கொக்குகள் (Little Egret) கரையை ஒட்டி மேய்ந்து கொண்டிருந்தன. நீளவால் தாமரைக் கோழிகள் (pheasant tailed Jacana), சங்கு வளை நாரைகள் (Painted storks), ஆங்காங்கே எழுந்து நின்று கொண்டிருந்த சாம்பல் நாரைகள் (Grey heron) என பறவைகளால் பொலிந்திருந்தது ஏரி.

கரையில் சிறு பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. நீலவால் ஈ பிடிப்பான் (Blue tailed bee eater) நீண்ட நாட்கள் கழித்து திரும்பியிருந்தது. பொறி மைனாவும் (Indian pied starling), ஜோர்டன் புதர்பாடியும் (Jordan bush lark)  குண்டுக் கரிச்சான் (Oriental magpie Robin) பாடலுக்கு தாளமிட்டுக் கொண்டிருந்தன.
அங்கே பாம்புதாரா இல்லாதது அதிர்ச்சியளிக்கவில்லை. மேலும் அவர் அங்கிருந்திருந்தாலும், நீரின் மேல் நீட்டிய அவர் தலையை, அங்கிருந்த நீர்காகக்கணங்களின் இடையே பார்ப்பதென்பது அசாத்தியம்தான். 50 நிமிடங்கள் ஆகியிருக்கும். கடந்த சில நாட்களாக, உலகியல் காரணங்களால் சோர்ந்திருந்த மனம், போதும் என்றது. முடித்துக் கொள்வோம் என கரைமேட்டில் ஏறி மறுபுறம் இறங்குகையில் தலை தன்னிச்சையாக திரும்பி மேலே பார்த்தது. பாம்புதாரா!

குண்டுக் கரிச்சான் (Oriental Magpie Robin)

உடனே உற்சாகமடைய வேண்டாம். பறந்து கொண்டிருந்தவர், நான் இருந்த இடத்திற்கு மறுபுறம் சென்று மறைந்தார். வான்வழியாக சில நொடிகள் மட்டுமே தேவைப்படும் அப்பயணம், நிலவழியென்றால் சில கிலோமீட்டர்கள் ஆகும். மேலும் மறுபுறம் பரந்திருக்கும் ஏரியில் எங்கே பாம்புத்தாராவை பார்க்கப்போகிறேன் என நினைத்துக் கொண்டு வாகனத்தை வீட்டைப் நோக்கி இயக்கினேன். சாலை நான்கு முனை திருப்பத்தில் நின்றது. வலதுபுறம் வீடு. நேராகப் போனால் ஏரியின் மறுபுறம். முடிவெடுக்க முடியாமல் இருந்த என்னை, வாகனம் தானாக சாலையைக் கடந்து நேராக அழைத்துச் சென்றது. ஆடிய கால்களாயிற்றே,  சும்மாயிருக்குமா?

நத்தைக் கொத்தி நாரைகள் (Asian open bill)

ஏரியியைச் சுற்றியிருந்த நடைபாதையில் ஏறி நடக்கத் துவங்கினேன். ஏரியின் ஓரங்களில் ஆக்கிரமித்திருக்கும் சீமைக் கருவேலங்களை அழிக்கும் பணியில் கனரக வாகனங்கள் ஈடுபட்டிருந்ததன. அவை செல்வதற்காக கரையை ஒட்டி ஏரியின் உள்ளே மண் குவிக்கப்பட்டிருந்தது. கரைக்கு சற்று உள்ளே நீண்டிருந்த ஒரு மேட்டில் வரிசையாக நத்தைக் கொத்தி நாரைகள் (Open bill) நின்றிருந்தன. ஏரி முழுக்க நாமக் கோழிகள் (Eurasian coot) நூற்றுக் கணக்கில் நீந்திக் கொண்டிருந்தன. சிறு சிறு குழுக்களாக புள்ளி மூக்கு வாத்துகளும் (Spot billed duck) அங்கிருந்தன. உதிரியாக சுற்றிக் கொண்டிருந்த சில பறவைகளைப் பார்க்க தொலை நோக்கியைத் திருப்பியபோது அவை நீரில் மூழ்கின.

ஆம். முக்குளிப்பான்! (Little grebe).

புள்ளி மூக்கு வாத்துகள் (Spot billed duck)

சரி, நமக்கு ஜூலை மாத போட்டிதான் விதிக்கப்பட்டிருக்கிறது (முக்குளிப்பான அதன் இறகை விழுங்குவதைப் பார்க்க வேண்டும்) என நினைத்துக் கொண்டு, மூழ்கிய பறவை எங்கே எழுகிறது என பார்க்க தொலைநோக்கியில் துழாவிய போது, உள்ளே காய்ந்த ஒரு செடியின் கிளையில் அமர்ந்திருந்தது பாம்புதாராதான் என என்னை நான் நம்பவைக்க போராட வேண்டியிருந்தது. உண்மையில் அங்கே இருந்தது ‘தாரா’ இல்லை ‘தாராக்கள்’. மொத்தம் மூன்று பறவைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் கழுத்து, பால் வெள்ளை. ஏதோ புது இனத்தைப் பார்த்துவிட்டேன் என எழுந்த உவகையை, உள்ளிருந்தே அழித்த புத்தி, கைப் பேசியை எடுத்து இளம் பாம்புதாராவின் புகைப்படத்தை தேடச் சொன்னது. ஆம், இளம் பறவைதான் அது. எனில் என்னை குடும்பமாக வரவேற்க வந்திருக்கிறார்கள்.

பாம்புதாரா (Oriental darter)

ஜூனும், ஜூலையும் ஒரே இடத்தில்!

இனிமேல் இங்கிருந்து நகரப் போவதில்லை என முடிவு செய்து கொண்டு அமர்வதற்கான இடத்தைத் தேடினேன். கரையின் சரிவில் சாதூர்யமாக இறங்கினால், உள்ளே குவிக்கப்பட்டிருக்கும் மண்ணின் வழி நடந்து, ஏரியின் விளிம்புக்குச் சென்றுவிடலாம். கரையிறங்குகையில் சறுக்கினாலோ, மண் இலகுவாகவோ, சேறாகவோ இருந்தாலோ எப்படி என்னையும், கருவிகளையும் சேதமடையாமல் பார்த்துக் கொள்வது என புத்தி யோசித்துக் கொண்டிருக்க, நான் யோசிக்காமல் உள்ளே இறங்கி, இரு முறை கால் இடறி, தட்டுத் தடுமாறி உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன். அதிர்ச்சியடைந்த புத்தி, எப்படித் திரும்பப் போகிறேன் எனக் கேட்க மறந்துவிட்டது.

எதிரே சற்று தூரத்தில் தாராக் குடும்பமும், இடதும் வலதுமென முக்குளிப்பான்களும். பொறுமையுடன் காத்திருப்பதே இனி நான் செய்ய வேண்டியது. சலனமற்றிருக்கையில் நம்மை மனிதனென ஆக்கும் ஏதோ ஒன்று தேய்ந்து மறைவதை, இயற்கையின் ஒரு பகுதியாவதை நான் உணரந்திருக்கிறேன். இயற்கை தரும் சமிக்ஞையிலிருந்து அதை நாம் கண்டறியலாம். உதாரணமாக இங்கே அமர்ந்து அரைமணிநேரம் கழிந்திருக்கும், இரு காகங்கள் என் காலடியில், கைநீட்டி பிடித்துவிடக் கூடிய தூரத்தில் வந்தமர்ந்தன. கரையில் நின்றிருந்த போதே என்னைப்பார்த்து மிக உள்ளே சென்றுவிட்ட முக்குளிப்பான்கள், இப்போது அருகில் நீந்திக் கொண்டிருந்தன. இப்போது யோசிக்கையில் ஆச்சரியமாக இருக்கும் எனக்கு, அப்போது அது இயல்பாய் தோன்றியதுதான் உண்மையில் ஆச்சரியம்.

வந்த இடம் நோக்கி…

தொலைநோக்கியும், படக்கருவியும் முறைவைத்து தாராக்களையும், முக்குளிப்பான்களையும் பார்த்துக் கொண்டிருந்தன. பாம்புதாரா, தன் கழுத்தை சாத்தியமான எல்லாத் திசைகளிலும் வளைத்தும், திருப்பியும் இறகுகளைக் கோதிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பறவை சிற்றடி வைத்து கிளையின் நுனிக்கு வந்தது. நீரில் பாயப் போகிறது என நினைத்தற்கு மாறாக எழுந்துப் பறந்தது. தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பறவை மெல்ல பறந்தபடி, நான் எங்கிருந்து வந்தேனோ அந்த திசைக்கே மீண்டும் சென்றது. ஒருவேளை இது இளைப்பாறும் இடமோ? உணவுக்கூடம் அங்குதான் இருக்கிறதா? இன்னும் இரண்டு பறவைகளிருக்கின்றன, கவலை வேண்டாம் என என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இந்தப் பக்கம் முக்குளிப்பான்கள் நீரில் மூழ்கி எழுந்ததும், இறகுகளை கோதிக் கொண்டன. அவை ஒவ்வொறு முறை இறகு கோதும் போதும் எனக்கு உடல் சிலிர்த்தது. ஒவ்வொறு கோதலின் துவக்கத்திலும் “இதோ, இப்போது!” என்றும், முடிவில் “இல்லை, இது வெறும் முன்னோட்டம்” என்றும் கூறி என்னைத் தேற்றிக் கொண்டேன். தாராக்கள் பக்கம் திரும்பினால் குடும்பத்தில் இன்னுமொன்றைக் காணவில்லை. சுற்றியிருந்த நாமக் கோழிகளின் நடுவே தாராவை எங்கேவெனத் தேடுவது. மீண்டும் முக்குளிப்பான்கள் பக்கம் திரும்பி, முன்னொட்டத்தை மட்டும் பார்த்துவிட்டு, தாராக்கள் பக்கம் திரும்பினால் முதலில் சென்ற பறவை வேலையை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தது. இவ்வாறு நம்பிக்கைக்கும், ஏமாற்றத்திற்கும் நடுவே நான் அமர்ந்தபடி, சூழலை கவனித்துக் கொண்டிருந்தேன்.

வாய்க்கு கிட்டியது….

மீண்டுமொரு முன்னொட்டமென முக்குளிப்பான் இறகு கோதுவதைப் பார்த்தபோது, அது தன் அலகில் இறகுடன் என்னைப் பார்த்து திரும்பியது. வெண்ணிறத் தூவிகள். ஒன்றல்ல, இரண்டு. வெற்றி வாய் வரை வந்துவிட்டது. அவர் விழுங்க வேண்டும் அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டிருந்த போதே, இரண்டையும் உதறிவிட்டு நீரினுள் மூழ்கி மறைந்தார். மேலுமொரு அதிர்ச்சி. இப்போது ஏமாற்றத்திற்கும், ஏமாற்றத்திற்கும் நடுவே அமர்ந்திருந்தேன்.

தொலைநோக்கியையும், படக்கருவியையும் வைத்துவிட்டு வெறும் கண்களால் ஏரியை ஒருமுறை துழாவினேன். எவ்வளவு, எவ்வளவு பறவைகள்? ஒவ்வொன்றும் வாயில் மீன்களுடன் எழுந்து கொண்டிருந்தன. முக்குளிப்பான்கள், நீர்காகங்கள் மட்டுமல்ல ஒரு ஊர்காகமும் ஏரியிலிருந்து மீனைக் கொத்திக் கொண்டு பறந்தது. நத்தையின் ஓடுகள் நெறிபடும் ஒலி துல்லியமாய்க் கேட்டது. சட்டென வேறொரு உலகம் என் முன் தோன்றியது. ஒட்டுமொத்தமாக இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?

நீர்காகம், முக்குளிப்பான், காகம்

இங்கே நடந்து கொண்டிருப்பது உண்டாட்டு. உணவுக் களியாட்டு. உயிர்கள் உயிர்களை, உடல்கள் உடல்களை அறிந்து கொண்டிருந்தன. பூச்சிகளும், நத்தைகளும், மீன்களும், பறவைகளும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தன. மீன்கள் பறவைகளைப் போல் காற்றில் பறந்தன. பறவைகள் மீன்களாய் மாறி ஆழங்களுக்குச் சென்றன. சிறகுலர்த்தவும், ஓய்வெடுக்கவும் அவை நிலத்திற்கு திரும்புகையில், நீரின் மேற்பரப்பிற்கு வந்து இமையா விழிகளுடன் பறவைகளைப் பார்த்தபடி காத்திருந்தன மீன்கள். அவை பொறுமையிழக்கையில் கூட்டமாக துள்ளிப் பறவைகளின் கவனத்தையீர்த்தன. சில சாகசமீன்கள் உயரே துள்ளி பறவைகளைப் போட்டிக்கு அழைத்தன.

நீர் அனைவரும் விளையாடக் களமமைத்திருந்தது. நீரைத் தாங்கியிருந்த நிலம் ஆங்காங்கே சிறு மேடுகளாக, குறும்புடன் தலை நீட்டி எட்டிப் பார்த்தது. நிலத்தின் தலையில் சூட்டிய மலர்கள் போலிருந்தன பசும் செடிகள். கொம்புகள் போல் கிளைவிரித்திருந்தன காய்ந்திருந்தவை. நீருடன் ஒளியென, நிலத்துடன் சூடென கலந்து கொண்டிருந்தான் கதிரோன். வானை போர்த்தியிருந்த நீர்பரப்பை, காற்று சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது. நான் ஐம்பூதங்களின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெறும் கண்களும், காதுகளுமாய் இருந்தேன். சட்டென இது ஒரு நடனமெனத் தோன்றியது.

‘நீள’கண்டன்

நடனம், நடனம், நடனம்…!

நீரின் மேல் நீட்டிய சிறு கிளையில் ஒரு கால் கீழே நீட்டி, மறுகால் மேலே தூக்கிப் பிடித்திருக்க, காற்றில் பறக்கும் விரிசடையென சிறகுகள் விரிந்திருக்க நின்றிருக்கிறான் பித்தன். கழுத்தில் அணிந்திருப்பதல்ல, அவன் கழுத்தே பாம்பு. அவன் தலையில் பட்ட சூரியன், சோமனென பரிணமிக்கிறான். தலையில் ஊற்றெடுத்து, நீர்வெளியெங்கும் பரவுகிறது சோமரசம். பித்தில் திளைக்கின்றன உயிர்கள். மீனென, பறவையென, பூச்சியென, பூதங்களெனக் காட்டும் ஒன்று இல்லமலாகிறது. வேற்றுமைகள் சோமத்தால் கரைத்தழிக்கப்படுகிறது. மீனைப் பிடித்த பறவையிடம் வெற்றிக் களிப்பும் இல்லை. மீனிடம், மரணத்தின் பயமும், சோகமும் இல்லை.

தானென்றாதல்

பித்தனை தன்னுள் இழுத்தது நீர். அவன் அலகில் சென்றமர்ந்தது மீன். மீனை வானில் விசிறி பறவையாக்கினான் பித்தன். காற்றில் சிறகு விரித்துப் பறந்தது அச்சிறு பறவை. அதை மீண்டும் மீனாகவிடாமல் தன்னுள் வாங்கித் தானென்றே ஆக்கினான் அவன். முன்பு மீனாக இருந்தது அவன் நீண்ட கழுத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. ஆ.. எவ்வளவு நீளம்! எவ்வளவு நீளம்!! தொண்டர்களுக்கு நீலகண்டணாய் காட்சியளித்த அது ‘நீள’கண்டணாய் எனக்கு மட்டுமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அப்பர், அவனைக் காண மனிதனாய்க் கூடப் பிறக்கலாம் என்கிறார்.

இதோ, நானும் சான்றளிக்கிறேன்.

ஆம். மனிதப்பிறவியும் வேண்டுவதே, இம்மாநிலத்தே!


eBird trip report: https://ebird.org/tripreport/554839


லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்
கொரட்டூர், சென்னை
30.07.2026