தூவித்தோழர்கள்- 56

கூகை (Eastern Barn Owl)

இரவு நடை சென்றபோது, தற்செயலாக மேலே நிமிர்ந்து பார்த்தேன். மின்சார கம்பியில் கூகை, சத்தமே எழுப்பாமல் அமர்ந்திருந்தது. நாங்கள் பலமுறை புள்ளி ஆந்தை பார்த்திருக்கிறோம். கூகையைப் பார்த்தது, இதுவே முதல் முறை. தலை திருப்பி, கண் சிமிட்டி, ஆர்வமுடன் எங்களை கவனித்தது. புள்ளி ஆந்தை மிகவும் வெட்கப்படும் பறவை. நாம் பார்ப்பது தெரிந்தால், உடனே அந்த இடத்தை விட்டு அகன்று விடும். இது கொஞ்சம் கூட பயப்படவில்லை. நாங்கள் நடக்க நடக்க, எங்களை திரும்பி பார்த்தபடியே இருந்தது. சிறிது நேரம் நின்று அதைப் பார்த்தேன். அதுவும் எங்களை பார்த்தபடி அமர்த்திருந்தது. M. கிருஷ்ணன் சார் அவர்கள் கூறிய, ‘அது அனுமதிக்கும் வரை பறவையை பாருங்கள்’ (Watch as long as it lets you) என்பதை பின்பற்ற முடியவில்லை. ‘அது இரவு முழுக்க அங்கே இருக்கும். நீயும் இருப்பியா?’ என்று கூறிய என் கணவர், என்னை இழுத்து வந்து விட்டார். பரிணாம வளர்ச்சியில் சத்தமே இல்லாமல் இது பறக்க ஆரம்பித்தது பற்றி வகுப்பில் விஜய் Sir கற்றுக் கொடுத்தார். இதன் காதுத் துளைகள் (ear openings) தலையின் இருபுறமும் மேலும் கீழுமாக அமைந்துள்ளன. இந்த அமைப்பு காரணமாக, ஒலி எந்த திசையிலிருந்து வருகிறது, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை மிகத் துல்லியமாக இப்பறவையால் கணிக்க முடியும்.

©Zhong Ying Koay

தோற்றம்

காகத்தை விட சற்று சிறிதான ஆந்தை. இதன் இதய வடிவ முகம் தட்டையாக இருக்கும். பழுப்பு நிற விளிம்பு. நீண்ட கூர்மையான கீழ்நோக்கி இருக்கும் அலகு. அலகை விரித்து தட்டி சத்தம் எழுப்பும். இதன் அலகின் மேல் cere என்று அழைக்கப்படும் தோல் இளம்சிவப்பு நிறத்தில் உள்ளது. அதன் நாசித்துவாரம் cere வில் அமைந்துள்ளது. கண்கள் கரு நிறத்தில் உருண்டையாக இருக்கும். ஆண் பெண் பறவைகளுக்கிடையே பெரிய வேறுபாடு இல்லை. பெண் பறவைகளின் மார்பு பகுதியி,ல் நிறைய புள்ளிகள் இருக்கும். பெரும்பாலும் உடலின் அடிப்புறம் வெண்மை நிறம். சிறகுகள் அடர் பழுப்பு மற்றும் தங்க நிறத்தில் புள்ளிகளுடன் காணப்படும். தூவிகள் இல்லாத பெரிய கால்கள்.

படித்தறிந்தது

  • ஏழு துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் பல துணை துணையினங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுவது Tyto javanica stertens என்ற துணை இனம். இது வடக்கு இலங்கை, கிழக்கிலிருந்து தெற்கு சீனா, வியட்நாம் மற்றும் தெற்கு தாய்லாந்து ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது.
© BOW
  • வரிசை(Order): Strigiformes குடும்பம் (Family):Tytonidae கூகை
    இந்த குடும்பத்தில் 2 பேரினங்கள் உள்ளன.  Tyto – பேரினப்பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான tytō என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் ஆந்தை. javanica – ஜாவா தீவைச் சேர்ந்த என்று பொருள்படும் லத்தின் சொல்லிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. stertens– துணையினப் பெயர் stertō லத்தின் சொல்லிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கு குறட்டை விடுவது அல்லது கரகரப்பாக ஒலி எழுப்புவது என்று பொருள். Tyto javanica stertens -ஜாவா தீவைச் சேர்ந்த கரகரப்பாக ஒலி எழுப்பும் ஆந்தை.
  • ஒரே இணையுடன் வாழும். இனப்பெருக்க காலம் ஆண்டு முழுவதும் இருக்கலாம். மரப்பொந்துகள், கூரையில் உள்ள இடைவெளிகள்,  பாறை இடுக்குகள்  ஆகியவற்றை வசிப்பிடமாக தேர்ந்தெடுக்கிறது. பெரும்பாலும் கூடு என்று எதையும் கட்டுவதில்லை. மிக அரிதாகவே புல் அல்லது இலைகளை பயன்படுத்துகிறது. நேரடியாக பொந்துக்குள் முட்டையிடுகிறது. அதற்குள் இரையின் மிச்சங்கள், எச்சங்கள் ஆகியவை காணப்படுகின்றது. அவற்றை இவை சுத்தம் செய்வதில்லை. இவை ஒரே இடத்தையே பல வருடங்களுக்கு தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். ஐந்து முதல் ஆறு முட்டைகள் வரை இடுகின்றது. கிடைக்கும் இரையை பொறுத்து இந்த எண்ணிக்கை மாறலாம். 29 லிருந்து 34 நாட்கள் பெண் பறவை அடை காக்கிறது. அப்போது  அது தன் இறகுகளை உதிர்த்து விடுகிறது.(Moulting) பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் சேர்த்து, ஆண் பறவை இரை தேடி கொண்டு வருகிறது. குஞ்சுகளை 90 நாட்கள் வரை வளர்க்கின்றன. எட்டு, ஒன்பது வாரங்களில் சிறகுகளும் வெள்ளை நிற தூவிகளும்  முளைக்கின்றன.
ஒன்பது வார குஞ்சு
© David King
  •  வங்காளத்தில் கூகை ‘லட்சுமி பெம்ச்சா’ (Lakshmi Pemcha) என்று அழைக்கப்படுகிறது. செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியின் படங்களில் சங்கு, தானிய கதிருடன் இதுவும் உள்ளது. இது கூடு கட்டினால், அது வீட்டில் உள்ளளோருக்கு வளத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் வேட்டைக்கார ஆந்தை(Brown Boobook) தீய சகுனமாக பார்க்கப்படுகிறது. வங்காளப் பெண் இதன் ‘ஊ-உக்’ என்ற அலறலை கேட்கும்போது, அது சாத்தானின் வாழும் பிரதிநிதியாக கருதப்பட்டு, பரிகாரமாக, ‘ராம் ராம்’ என்று கூறுகிறார். (ஏன் இந்த பாரபட்சம்?இரண்டும் ஆந்தைகள் தானே) பீகாரில் இந்த ஆந்தையின்  அலறல்களுக்கு, வெவ்வேறு பலன்கள் கூறப்பட்டிருக்கின்றன. பயணத்திற்கு கிளம்பும்போது, ‘கில்பில்’ சத்தத்திற்கு செழிப்பும் சந்தோஷமும், ‘சில் பில்’ சத்தத்திற்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றும், ‘கிட் கிட்’ சத்தத்திற்கு சிறை செல்ல வாய்ப்புண்டு என்றும், ‘குர் குர்’ சத்தத்திற்கு பயங்கரமான பயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. எனக்கு இதில் ஆச்சரியமாக தோன்றும் விஷயம் என்னவென்றால் , பொதுவாக ‘ஆந்தையின் அலறல்’ என்று கூறாமல், நான்கு வகையான அலறல்களை கவனித்து, ஒவ்வொன்றிற்கும் ஒரு பலனை கூறியிருக்கிறார்கள். (Merlin ஒரே ஒரு வகையான அலறலை மட்டும் காட்டுகிறது.) Source: ©Journal of the Asiatic Society of Bengal.(pdf pg no:692) (இக்கட்டுரையை எழுதியவர் சரத்சந்திர மித்ரா(1863 – 1938). தொன்மங்களையும், நாட்டுப்புற பாரம்பரியம் பற்றியும் விரிவாக பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.)
  • குறுந்தொகை 153-ஆம் பாடலில் கூகை குறிப்பிடப்பட்டுள்ளது.
    குன்றக் கூகை குழறினும், முன்றில்
    பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந்து உகளினும்,
    அஞ்சுமன்; அளித்து என் நெஞ்சம்; இனியே,
    ஆரிருட் கங்குல் அவர்வயின்
    சாரல் நீளிடைச் செலவு ஆனாதே.
    (பொருள்)
    புலவர்: கபிலர். குன்றில் வாழும் கூகை குழறினால், முன்பு தலைவி அஞ்சுவாள் என்கிறது இப்பாடல். கூகையின் அலறல் என்ற சொல்லை விட, குழறல் என்ற சொல் பொருத்தமாக உள்ளது.

Leave a Reply