தூவித்தோழர்கள்-57

பெரிய தேன்சிட்டு (Loten’s Sunbird)

 தில்லைவனத்  தோட்டத்தில் பெரிய தேன் சிட்டை முதன்முதலாக பார்த்தேன். சட்டென்று பார்க்க ஊதா தேன்சிட்டை போலவே இருக்கும். இதன் கரு நிற அலகு நீண்டு, கீழ்புறமாக வளைந்து இருக்கிறது. குரலும் வேறுபடுகிறது. முதலில் மந்தாரை மரத்தின் கிளையில் அமர்ந்து  இளஞ்சிவப்பு நிற பட்டாம்பூச்சி போன்ற மலரில் மலரமுது உண்டது. அதன் அடியில் சோற்றுக்கற்றாழை பூத்திருந்தது. செடியின் நடுவிலிருந்து உயரமாக வரும் மஞ்சரித் தண்டில் மணி வடிவ மலர்கள் கொண்ட  ஆரஞ்சு நிற  மஞ்சரி இருந்தது. பெரிய தேன் சிட்டு  மஞ்சரித்  தண்டில் அமர்ந்து  மலரமுது உண்டது.  (Checklist) 

ஆண் பறவை
©Swardeepak 
பெண் பறவை
© S S Suresh

மலையாளத்தில் இதன் பெயர் கொக்கன் தேன்கிளி. கொக்கு போன்ற நீண்ட அலகினால் கொக்கன் என்றும், மலரமுது உண்ணுவதால் தேன்கிளி என்றும் அழைக்கப்படுகிறது. எருக்கம் பூ முதல் பன்னீர் பூ வரை எல்லா வகையான மலர்களிலும், அதன் நீண்ட அலகினை நுழைத்து மலரமுது உண்ணும். சிலந்தி முதலிய சிறு பூச்சிகளையும் உண்ணும். இனப்பெருக்க காலத்தில் சிறு மரங்களில் அமர்ந்து இறக்கைகளை விரித்துப் பாடிக்கொண்டே இருக்கும்.

தோற்றம்

நீண்ட, கூர்மையான, கீழ்நோக்கி நன்றாக வளைந்த அலகு. உடலின் மேற்புறம் முழுவதும் ஊதா நிறம் பளபளப்பாக இருக்கும். வாலிறகுகள் கருநீலமாக இருக்கும். மார்பு பகுதியில் அடர் சிவப்பு  நிறப்பட்டை  இருக்கும். இறகடியில் பளீர் மஞ்சளில் மார்பு குஞ்சத்  தூவிகள்(Pectoral Tufts) உண்டு.  இனச்சேர்க்கைக்காக பெண் பறவையை அழைக்கும் போதும், தன் எல்லையை நிர்ணயிக்கும் போதும், இவற்றை வெளியில் காட்டும்.(Source) பெண் பறவையின் மேல் பகுதி முழுவதும் வெளிர் பழுப்பாக இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள் தோய்ந்த வெண்மையாக இருக்கும்.

Pectoral tufts seen in Olive-backed Sunbird
©YC Wee

படித்தறிந்தது

  • இரண்டு துணை இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியாவில் காணப்படுவது Cinnyris lotenius hindustanicus. இலங்கையில் காணப்படுவது Cinnyris lotenius lotenius. வலசை செல்லாத பறவை.
©BOW
  • நார், வேர், புல் மற்றும் இலைகளை வைத்து நுழைவாயிலோடு கூடிய சுருக்கு பை போன்ற கூடமைக்கிறது. வெளியில் இருந்து பார்க்க குப்பைகளை சேர்த்து கட்டியது போல் தோற்றமளிக்கும். சிலந்தி வலை வைத்து உள் அமைத்து இரண்டு முதல் மூன்று முட்டைகளை இடுகிறது. கூடு கட்டுவது மற்றும் அடைகாப்பது இரண்டையும் பெண் பறவை செய்கிறது. குஞ்சுகளுக்கு இரை  ஊட்டுவதை இரு பறவைகளும் சேர்ந்து செய்கின்றன. 
© Subhadra Devi
  •  வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family):Nectariniidae தேன்சிட்டு Cinnyris – Hesychius எழுதிய கிரேக்க வரலாற்று நூல்கள், kinnuris என்ற பெயர் தெரியாத சிறிய பறவையை குறிப்பிடுகின்றன. கிரேக்க தொன்மத்தின் சைப்ரஸ் நாட்டை ஆண்ட மன்னன் Cinyras ஆவான். Aproditeன் சாபத்தால், அவருடைய பெண் Myrrha, அவர் மேல் காதல் கொள்கிறாள். இருவருக்கும் பிறக்கும் குழந்தை Adonis என்று கூறப்படுகிறது. இந்த இரண்டில் ஏதோ ஒன்றின் காரணமாக இதன் பேரின‌ பெயர் Cinnyris என்று வைக்கப்பட்டிருக்கிறது. lotenius – சிற்றின பெயர் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக இலங்கையின் 29-வது ஆளுநராகப் பணியாற்றிய Joan Gideon Loten அவர்களின் அறிவியல் பங்களிப்பைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. Cinnyris lotenius – சிறிய பறவை; Loten என்பவருக்காக வைக்கப்பட்டுள்ளது. (Source : BOW)

மார்புக் குஞ்சத் தூவிகளைப் பற்றிய Green Humour Cartoon.

©Rohan Chakravarty

Disco Dance, Male Sunbird Style- Court Like a Sunbird

Leave a Reply