பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – வேலூர், சித்தூர் – 05 & 06.09.2026

இக்கட்டுரையை, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து துவங்குவது முற்றிலும் தற்செயலானது. ஏனெனில் நான் எத்தனைத் தரவுகளைத் தந்தாலும், படித்தபின் நீங்கள் சொல்லப்போவது ‘இது தற்செயலே’ என்றுதான். உதாரணமாக,
1. இப்படத்தில் ஒருவரைத் தேடி பயணம் துவங்கும். நாங்களும் குறிப்பிட்ட ஒருவரைத் தேடியே இந்த இரண்டுநாள் பயணத்தைத் துவங்கினோம்.
2. அவர் கிடைக்காமல் எங்கெங்கோ அலைவார்கள். நாங்களும் அலைந்தோம்.
3. நிறைய பேர் அவர்களை இங்கேதான் பார்த்தோம் என்பார்கள். எங்களிடமும் கூறப்பட்டது.
4. இடையே ஒருவர் அகப்பட, அவர் தேடிவந்தவர் இல்லை என்று சொல்லப்படும். சொல்லப்பட்டது.
4. காடுகளுக்குள் செல்ல வேண்டியிருக்கும் போது அங்கே புலிகள் இருப்பதாய் எச்சரிக்கப்படுவார்கள். நாங்கள் சிறுத்தை இருப்பதாய் எச்சரிக்கப்பட்டோம்.
5. தேடப்பட்ட இருவருமே அடர்நிறக்காரர்கள்.
6. ஏனோ இருவரின் பெயரும் அழைக்கபடுகையில் ஒன்றெனவே ஒலிக்கிறது.
‘ஷாமா’
ஒருவேளை இயக்குனர் மணிரத்தினம், இதே போன்றதொரு கடும் கோடையில் அப்பறவையைத் தேடிக் கிடைக்காமல், அல்லது பல அல்லல்களுக்குப் பிறகு கண்டடைந்ததால், அதே போன்றதொரு தேடி அடையப்பட வேண்டிய பாத்திரத்திற்கு ‘ஷியாமா’ என்று பெயர் மட்டும் சூட்டிவிட்டு, அழைக்கும் போது கண்டிப்பாக ‘ஷாமா’ என்றுதான் அழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கலாம்.

ஐந்தாம் தேதி (05.09.2026), சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு ஷாமாவைக் (சோலைப்பாடி) காண சென்னையிலிருந்து, வேலூருக்கு பயணத்தைத் துவங்கினேன். விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட நண்பர்கள் சிலர் வெள்ளிக்கிழமையே வேலூர் வந்தடைந்திருந்தனர். சிலர் என்னைப் போலவே பிற பகுதிகளிலிருந்து வந்து கொண்டிருந்தனர். அனைவரும் அன்று காலை ஏழு மணியளவில் வேலூருக்கு மிக அருகே, ஆந்திராவில் சந்தித்துக் கொண்டோம். சரியாகச் சொல்வதென்றால் தமிழக – ஆந்திர எல்லையில். அங்கிருந்த மின்னலாட்சி அம்மன் கோவிலில் முதல் பறவைப் பார்த்தல் நிகழ்வு துவங்கியது.

நிகழ்வு துவங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு மஞ்சள் நிறப்பறவை குரலால் தீண்டி, நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்களில் தட்டுப்பட்டு மறைய, அதிலிருந்து இரண்டு நாட்களுக்கு நீளப்போகும் கண்ணாமூச்சியாட்டம் தொடங்கியது. வெங்கட், பறவையின் அழைப்பை வைத்து மாம்பழச் சிட்டு (Common iora) என்றார். சற்று நேரத்தில் இளம் மாம்பழச் சிட்டொன்று ஈஷ்வர் சாரால் கண்டடையப்பட்டது. பின் தோன்றி, மறைந்து விளையாடிக் கொண்டிருந்த சிட்டின் பின்னால் சென்றபடி எல்லையிலிருந்த சிறு குட்டையில் முட்டி மீண்டும் துவங்கிய இடத்திற்கே திரும்பினோம். திரும்பும் வழியில் சிறிய மின்சிட்டு (Small minivet) இருப்பது அறிவிக்கப்பட, அப்பறவையும், நாங்கள் பார்க்கும்முன் கிளைகளுக்கு நடுவே மறைந்தது.

அங்கிருந்துக் கிளம்பி ‘Our Lady of Lourdes Church’ ஐ சென்றடைந்தோம். தேவாலயத்தின் பின்புறம் படிகள் காட்டிற்கு இறங்கிச் சென்றன. அங்கே சோலைப்பாடியைப் (Shama) நண்பர்கள் முன்பு பார்த்திருந்தனர். நாங்கள் படியை அடைவதற்கு முன் ஒரு தேன்சிட்டால் இடைமறிக்கப்பட்டோம். மேலே அடர்ஊதா,
கீழே மஞ்சள், சிறிய அலகு = ஊர்த்தேன்சிட்டு (Purple rumped sunbird), என்று வழக்கம் போல நினைத்துக் கொண்டு அடுத்தப் பறவையை நோக்கி செல்ல முயல்கையில், அது ‘Crimson backed sunbird’ என்றார் அன்பரசி. முதுகில் கவனமாகப் பார்த்தால் அடர்செந்நிறம் (Crimson) தெரியுமென்றார். அவர் சொல்லிய பின் உற்றுப் பார்த்தால் செந்நிறம் தெரிந்தது போலவும், வேறொரு கோணத்தில் தெரியாதது போலவும் இருந்தது. கடைசியில், பார்த்தவுடன் குழப்பமின்றி இது என்ன பறவையென்று சொல்லிவிடமுடியும் என்று நான் நம்பியிருந்த பட்டியலிலிருந்து ஊர்த் தேன்சிட்டு விடை பெற்றுக் கொண்டது.

நான் கொண்ட வருத்தத்தைப் பார்த்த மேரி மாதா, அருகிலிருந்த மின்னலாட்சி அம்மனுக்கு தகவல் சொல்லி, அங்கிருந்த மின்சிட்டை இங்கே வரவழைத்துக்காட்டி என்னை ஆறுதல்படுத்தினார். பின் படிகளில் இறங்கி காட்டிற்குள் நுழைந்தோம். விஜய் சார் பேசாமல் வருபவர்களுக்கு மட்டும் காட்டின் உள்ளே நுழைய அனுமதியளித்திருந்தார். உள்ளே நுழைந்தவுடன் கண்ணாமூச்சி ஆட்டத்தில் முதலில் தோற்றது ‘வெண்வயிற்றுக் கரிச்சான்’ (White bellied drongo) அதைத் தொடர்ந்து தன் குரலின் வழி மாட்டிக் கொண்டவர் வேதிவால் குருவி (Paradise flycatcher). வெண்நிறத்தில் இப்பறவையை முதன்முதலில் பார்க்கிறேன்.

திடீரென ஈஸ்வர் சார் அனைவரையும் அமைதிகாக்கச் சொன்னார். அவர் முகம் தீவிரமடைந்திருந்தது. எங்களை செவிகூர்க என சைகை செய்தார். அப்போது தொலைவில் ‘அவ்வ்’ என ஒலித்தது. நாங்கள் அனைவரும் உறைந்து நின்றோம். அது சிறுத்தையாய் இருக்கலாம் எனவும், சமீபத்தில் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதால், அனைவரும் கவனமாய் இருக்க வேண்டும் எனவும் கூறினார். சட்டென சூழல் மாற, நான் முதல்முறை காட்டில் நின்றிருப்பதை உணர்ந்தேன். அத்தனைப் பேர் சூழ்ந்திருப்பினும், காடெனும் உணர்வளித்த அளித்த அச்சம் ஆழமானது. ஆழம் அமைதியளிக்க, புலன்கள் கூர் கொண்டன. ஒவ்வொறு ஒலியும் துல்லியமாய்க் கேட்டது. பச்சையிருளில் பதுங்கி எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுத்தையை நான் கற்பனையில் பார்த்துவிட்டேன். மற்றவர்களின் நிலையென்ன எனப் பார்க்கத் திரும்பிய போது, அங்கே ஒரு சிறு கூட்டம் குழுமியிருக்க, கையில் கேக்குடன் ஆசிரியர் தினத்தைக் கொண்டாட அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

பிறகென்ன? கொண்டாட்டத்தில் பங்கு கொண்டு, Tickell’s Blue Flycatcher, Puff-throated Babbler, Oriental Magpie-Robin ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் பார்த்து, அன்பரசி அது ஏன் உறுதியாக Tickell’s Blue Flycatcher என்ற வாதத்தை எடுத்து வைக்க, Puff-throated Babbler -ஐ பார்த்துவிட்ட கார்த்தி நிலை மறந்து மகிழ்ந்திருக்க, அடுத்த ‘அவ்வ்’ கேட்கும் வரை மீண்டும் சோலைக்குள் ஷாமாவைத் தேடிக் கொண்டிருந்தோம். அடுத்த ‘அவ்வ்’- விற்கு பின் காடு மீண்டும் எங்களைச் சூழ்ந்தது.

பத்தரை மணிக்கு மேல் அனைவருக்கும் காலை உணவு பற்றிய நியாபகம் எழ, அங்கிருந்து கிளம்பி அருகிலிருந்த உணவத்திற்குச் சென்றோம். அது ஒரு அக்மார்க் ஆந்திர உணவகம். தோசைக்கு தந்த வேர்கடலைச் சட்னியில் கடலையை வாசனைக்கும், பச்சை மிளகாயையும், தேங்காயையும் சரிவிகிதத்திலும் பயன்படுத்தியிருந்தனர். பெரும்பாலானோர் தட்டில் சட்னி அப்படியே இருப்பதை கவனிப்பதற்குள் நான் மூன்று முறை சட்னியை வாங்கி ருசித்துவிட்டிருந்தேன். அதை பார்த்தபின்தான் நான்காவது முறைக்கு மேல் வாங்கக்கூடாது என உறுதி கொண்டேன். சாப்பிட்டுவிட்டு கிளம்பும் போதுதான் தோன்றியது, இவ்வளவு காரம் சாப்பிட்டிருக்கிறோமே உடல் சூடாகிவிட்டால் என்ன செய்வது? என. அதற்கு விஜய் சார் ஒரு உபாயம் வைத்திருந்தார். அது எஸ்கிமோக்களின் உத்தி. அதாவது அவர்கள் உறைப்பனிக் குளிரிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள, பனியை பாளங்களாக வெட்டி, இக்ளூ எனும் வீடமைத்து அதில் தங்கிக் கொள்வர். உறைபனி ஒரு கடத்தாப் பொருளாக செயல்பட்டு உள்ளே குளிர் பரவுவதைத் தடுத்துவிடும். சூட்டிற்கு இதை அப்படியே தழைகீழாக்கம் செய்ய வேண்டும். அதாவது மதியம் பண்ணிரண்டு மணி வெயிலில் நடக்க விட்டால் அந்த வெயிலே உடல் மேலும் சூடாகாமல் தடுத்துவிடும். எனவே நாங்கள் உடனடியாக ஆந்திரத்திலிருந்த அடுத்த காப்புக் காட்டிற்கு பயணமானோம்.

மொத்தம் ஐந்து கார்களில், சிறிய மலைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தோம். கார்களுக்கு நடுவே தொடர்பை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி, தொலைத்தொடர்பு அலைவரிசைக் குறைபாட்டால் முறியடிக்கப்பட்டது. எங்கள் கார் மூன்றாவதாக இருந்தது. எனவே முதல் இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கு காட்சியளித்த பறவை நாங்கள் செல்வதற்குள் பொறுமையிழந்து பறந்துவிடும். பந்திக்கு மட்டுமல்ல பறவைப் பார்த்தலுக்கும் முந்த வேண்டும் போல. செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், ஏன் இங்கே நிறுத்தினார்கள் எனத் தெரியாமல் இறங்கி நடந்துவர, அங்கே ஒரு சிறியக்கூடு காட்டப்பட்டது. வேதிவால் குருவியின் கூடு. அவ்வளவு சிறிய கூட்டை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதிலெப்படி முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும் என நாங்கள் வியக்க, இன்னொரு இடத்தில் அதைவிடச் சிறிய கூடொன்று கண்டடையப்பட்டது.
பிறகு அனைவரும் அவரவர் தங்குமிடத்திற்கு திரும்பி, சற்றே இளைப்பாறி மீண்டும் மதிய உணவுக்கு இணைவது என முடிவானது. நான் அறைக்குச் சென்று மெத்தயை பார்ப்பதற்கு முன் வரை அவ்வளவு களைத்திருப்பேன் என உணரவில்லை. கால்கள் தானாக உடலை அழைத்துச் சென்று மெத்தையில் கிடத்தின. எனவே மதிய உணவின் நேரத்தை இரவுக்கு மாற்றிவிட்டு உறங்கலாமென கண்களை மூடித் திறந்தேன். ஒரு மணி நேரம் கடந்துவிட்டிருந்தது. அவசராமகக் கிளம்பி அடுத்த இடமான பாலமதி மலைக்குச் சென்றேன்.

குழுவினர் வருவதற்கு சற்றே நேரமானதால் நானே மலைச்சரிவில் ஆடுகள் சென்ற தடத்தைத் தொடர்ந்து சென்று ஒரு பாறை விளிம்பில் சென்றமர்ந்து கொண்டேன். லோட்டன் தேன்சிட்டும் (Loten’s sunbird), பச்சசைப் பஞ்சுருட்டானும் (Asian green bee eater) முறையே தேனையும், தேனீயையும் உண்டு கொண்டிருந்தன. சற்று நேரத்தில் நண்பர்கள் வரத்துவங்கினர்.

இப்பயணத்தில் ஈஸ்வர் சாரின் உடனிருக்கும் வாய்ப்பமைந்தது. பெரும்பாலான நேரங்களில் நாம் ஆசிரியரின் எதிரேதான் அமர்கிறோம். உபநிஷதம் சொல்லும் ஆசிரியரின் அருகமரும் வாய்ப்பு பறவைப் பார்த்தல் போல் வேறெங்கிலும் அமையுமா எனத் தெரியவில்லை. அங்கே அமர்ந்து எதிரே விரிந்திருந்த குன்றுகளின் முகடுகளை, பெரிய ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கதிரவன் ஒவ்வொறு முகடுகளாய் ஒளிரவைத்துக் கொண்டிப்பதை, முழு மலையும் ஒளிர்வதை, பின் இருள்வதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் பயணங்களை, புலியைப் பார்த்ததை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் நிலக்காட்சிகளை வியந்து கொண்டிருந்தார். பின் நாங்கள் செல்ல வேண்டிய இடம், நான் வந்த இடத்திற்கு சரியாக எதிர் திசையிலிருப்பதாகச் சொல்லப்பட, ஷாமா-வைத் தேடி அங்கிருந்து கிளம்பினோம்.
வழியிலிருந்த முருகன் கோயிலையும், அடுத்திருந்த சாலையையும் கடந்து, காட்டிற்குள் நுழைந்தோம். இரண்டு நீலக்கண்ணிகள் (Blue faced malkoha) மரக்கிளைகளில் மறைந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தன. கொஞ்ச தூரம் நடந்து வலதே திரும்பி ஒரு சிறு தடுப்பணையில் அமர்ந்து கொண்டோம். சற்று தொலைவிலிருந்த மரத்தின் கிளையில் ஒரு வால்காக்கை (Rufous treepie) வந்தமர்ந்தது. எதிரே, ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து கரிச்சான்கள் (Black Drongo) வந்தமர்ந்தன. பின் சில உழவாரன்கள்.

நாங்கள் அமர்ந்து ஷாமாவிற்காக காத்திருந்தோம். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் அதன் அழைப்பு கேட்டதே தவிர பார்க்க முடியவில்லை. அந்தி அணைந்து கொண்டிருந்தது. அனைவரும் செந்நிற வானத்தைப் பார்த்துக் கொண்டே வந்துதான் அங்கே அமர்ந்திருந்தோம். அப்போதுதான் நண்பர் ஒருவரிடமிருந்து அந்தக் கேள்வி எழுந்தது!
“பறவை பார்க்கன்னு சொல்லிட்டு, அதத்தவிற எல்லாத்தையும் பார்த்துகிட்டிருக்கீங்க?”
அங்கும் ஷாமாவைப் பார்க்க முடியாமல் கிளம்பிய நான், அக்கேள்வியுடன் அன்றிரவு தூங்கச் சென்றேன்.
அடுத்த நாள் காலை தெல்லை காப்புக் காட்டிற்குள் ஷாமாவைத் தேடிப் பயணம் தொடர்ந்தது. முதலில் நுழைந்த இடத்தில் சாம்பல் தகைவிலான்களைப் (Ashy wood swallow) பார்த்தோம். மீண்டும் ஷாமாவின் குரல் கேட்க, அது வந்தமரக்கூடய சாத்தியமுள்ள இடங்களுக்கெல்லாம் சென்று காத்திருந்தோம். பார்க்க முடியவில்லை. பிறகு சிறு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் தொடரந்தது. தோல்வியுடன் மீண்டும் சந்தித்துக் கொண்டோம்.
அடுத்த இடத்திற்கு கிளம்பும் முன் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு ஓடை இருந்ததால், அதன் வழி சிறிது நேரம் சென்று பறவைகளை அவதானித்து திரும்பலாம் என முடிவு செய்யப்பட்டது. சென்ற சிறிது நேரத்திலேயே கார்த்தி ஒரு ஊனுண்ணிப் பறவையைப் பார்த்துவிட, எங்களை அமைதிகாக்கச் சொல்லிவிட்டு அப்பறவைவயை தொலைநோக்கியால் பார்த்து பாம்புண்ணிக் கழுகு என்றார் (Sepent eagle). இப்பறவையையும் நான் முதல் முறைப் பார்க்கிறேன். எங்களுடன் தன் மகன் தாமிரன் வராதததும், அவன் பாம்புண்ணிக் கழுகைப் பார்க்காததும் அவருக்கு மிகுந்த வருத்தம். இந்தப்படம் தாமிரனுக்காக.

பின் அங்கிருந்துக் கிளம்பி அடுத்த இடத்திற்குச் சென்றோம். அங்கே நண்பர்கள் துடுப்புவால் கரிச்சானை (Rocket tailed drongo) முந்தைய உலாவில் பார்த்திருந்தார்கள். என் விருப்பப் பட்டியலில் நெடுங்காலமாக இருக்கும் பறவையது. வழக்கம் போல காட்டிற்குள் நுழைந்ததும் அதன் குரல் கேட்க, அங்கேயே அமர்ந்தது கொண்டோம். நேரம் சென்று கொண்டிருந்தது, பறவையெதுவும் கண்ணில் படவில்லை. பின் ஒரு விசில் சத்தம். ஈஸ்வர் சார் பாம்புண்ணிக் கழுகு என்றார். நாங்கள் ஆர்வமுடன் தயாரானோம்.

ஆனால் முந்தையநாள் துவங்கிய கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒலிகளை கவனித்த அவர், அது வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டிருப்பதை கணித்து பறவை வட்டமடித்துக் கொண்டிருக்கலாம், எனவே அனைவரும் மேலே பாருங்கள் என்றார். மேலே பார்த்த நண்பர்கள் உடனடியாக பறவையைக் கண்டு கொண்டனர். பாம்புண்ணிக் கழுகை, வல்லூறு (Shikra) துரத்திக் கொண்டிருந்தது. ஆனால் நான் மட்டும் ஆச்சரியத்துடன் கிழே பார்த்துக் கொண்டிருந்தேன். பறவையின் ஒலிகளைக் கவனித்து, அதன் நடவடிக்கையை கணித்து, பின் எங்களை வானைப் பார்க்கச் சொல்வதற்கு முன்பே ஜெயராம் வானைப் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தார். இவரெப்படி இவ்வளவு துல்லியமாகக் கணித்தார் என எனக்கு ஆர்வமெழெ, அவரிடமே கேட்டுவிடுவோமென அருகே சென்றேன். ஆனால் அவர் கண்களை மூடி அடுத்து வரப்போகும் பறவையெது என்றறிய ஆழ்வூழ்கத்திலிருக்கவே, பின்னர் கேட்டுக் கொள்ளலாம் எனத் திரும்பிவிட்டேன்.

நேரம் செல்லச்செல்ல நான் நம்பிக்கையிழந்தேன். அங்கிருந்து நானும் கார்த்தியும் மலைச் சரிவில் இறங்கி, கள்ளிச் செடிகளையும், பட்டாம்பூச்சிகளையும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த வல்லூறையும் பார்த்து திரும்பும் நேரத்தில் மிக அருகே பறவையின் ஒலியெழ அது வல்லூறின் குஞ்சாய் இருக்கலாம் என்றார் கார்த்தி. அவ்விடம் செல்வதற்கு நாங்கள் எத்தனிக்க, எதிர்புறமிருந்து புதர் சலசலக்கும் ஓசையெழுந்தது. நாங்கள் திகிலடைந்தோம். இப்பகுதிக்குள் நுழைகையிலேயே இவ்வளவு மூங்கில் இருக்கையில் ஏன் யானைகளைக் காணவில்லை என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. திகில் தீவிரமடைய நாங்கள் அங்கேயே நின்றுவிட்டோம். சலசலப்பு நெருங்கி நெருங்கி வந்தது ஆடாய் மாறி நின்றது. அப்பாடா என பெருமூச்சுவிட்டு திரும்புகையில் நாங்கள் சரிவிலிருந்து மேடேறிவிட்டிருந்தோம்.
குழு அங்கிருந்து நகர்ந்து காட்டின் மரங்கள் அடர்ந்த பகுதிக்குச் சென்றிருந்தது. அங்கே ஈஸ்வர் சார் எங்களை அழைத்துக் கொண்டு நீரற்ற, மரங்கள் கவிந்த ஒரு ஓடைக்குள் சென்றார். மீண்டும் மீண்டும் அந்நிலக் காட்சிகளை வியந்து கொண்டிருந்தார். நான் கண்கள் மட்டுமாக அங்கே சென்று கொண்டிருந்தேன். அந்நிலம் என் அகத்தில் நிகழவேண்டும் என விரும்பியதால் புகைப்படங்கள் ஏதும் எடுக்கவில்லை. இன்று, இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கையில் அந்நிலத்தை ஒரு வேழமென என் நினைவிலிருந்து மீட்டெடுக்கிறேன்.
மாபெரும் வேழம். படுத்திருக்கிறது. அதன் மேல் செடியென முளைத்திருக்கின்றன மரங்கள். சிறு வண்டுகள் சாணப் பந்துருட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றன. வேழத்தின் மேல் நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். ஓடை அரித்த கரையில், பக்கவாட்டில் நிறைந்திருந்த வேர்கள், யானையின் மத்தகத்தில் பரவிய வெண்புள்ளிகள் போலிருக்கிறது. அவ்வளவு கடினமான, பலம் பொருந்திய மத்தகத்தை மிருதுவானதாக காட்டும் மாயத்தை நிகழ்த்துகின்றன அப்புள்ளிகள். குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை அதன் தந்தமாய் நீட்டியிருந்த பெருமரக்கிளையோன்றில் ஆடிக் கொண்டிருந்தனர். பொறுமையுடன் எங்களை கேட்டுக் கொண்டிருந்தது அவ்வேழம். எங்கள் கால்கள் வழி எம் விருப்பத்தை, தேடலை அறிந்து கொண்டிருந்தது போலும். சென்று கொண்டிருந்த வழியில் முன்னிருந்தவர்கள் சைகை செய்ய கணப்பொழுதில் ஒரு கருநிறப் பறவை தன் பின்னே கறுத்து நீண்ட இரு மயில் தோகைகளை இழுத்துக் கொண்டு எங்கள் தலைக்கு மேலாகக் கடந்து சென்றது. துடுப்புவால் கரிச்சான்!

நான் இப்பயணத்தின் நிறைவை உணர்ந்தேன். அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு மதியமே வேலூரிலிருந்து சென்னைக்கு கிளம்பினேன். சென்று கொண்டிருக்கையில் உடன் அந்தக் கேள்வியும் வந்தது.
“பறவை பார்க்கன்னு சொல்லிட்டு, அதத்தவிற எல்லாத்தையும் பார்த்துகிட்டிருக்கீங்க?”
ஆம். நாங்கள் ஏன் பறவைகளை மட்டும் பார்க்கவில்லை? அல்லது பறவைகள் வழியே நாங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
பிரதானமாக பறவைகளைப் பார்ப்பது வேறெங்கும் பார்த்துவிட முடியாத வடிவங்களை, வண்ணங்களை, அழகை, திறனைக் காண்பதற்காக எனத் தோன்றியது.
ஆம். ஆனால் அது மட்டுமா?
இல்லை. பறவைகளைக் கணக்கெடுக்கிறோம். ebird போன்ற செயலிகளில் பதிவிடுகிறோம். குடிமக்கள் அறிவியலில் பங்கு கொண்டு, தரவுகளை அளித்து ஆய்வாளர்களுக்கு உதவுகிறோம்.
ஆம், நிச்சயமாக. ஆனால் அது மட்டுமா?
இன்னும் இருக்கிறது. பறவைகள் பார்ப்பதன் வழியே நாம் சூழலையும் பார்க்கிறோம். அதன் வாழிடம், உணவு சேகரிக்கும் இடம், இனப்பெருக்கம் செய்யுமிடம் ஆகியவை நம் கருத்துக்கு வருகின்றன. அதன் முக்கியத்துவம் புரிக்கிறது. குறைந்தபட்சம் அவ்விடங்களை மாசுபடுத்தாமலாவது இருக்கிறோம்.
ஆம், அதுவும் கூடத்தான். ஆனால், அது மட்டும்தானா?

நான் நிதானித்தேன். மேலே தோன்றியவை எல்லாம் பறவைகளைச் சுற்றியே இருக்கின்றன. அப்படியென்றால் பறவைகளை மட்டும்தானே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எனில் அந்தக் கேள்வியும் சரிதானே? எனத் தோன்றியது.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் ஷியாமா-வைக் கண்டுபிடிப்பதைப் பற்றியதல்ல, அதற்கான பயணத்தைப் பற்றியது. இந்த இரண்டு நாள் பயணத்தில், பறவைகளைத் தவிர நாங்கள் கவனித்ததென்ன?
பட்டாம்பூச்சிகள், வண்டுகள், மலர் பூத்திருந்த கள்ளிச்செடிகள், குரங்குகள், ‘அவ்வ்’ என்ற குரலால் சிறுத்தைத் தோல் போர்த்திய புள்ளி மான்கள், காய்ந்த இலைகளுக்குள் ஒன்றாய் மாறியிருந்த ஆமைக் குஞ்சு, மரத்தின் உருவில் சேலை கட்டி நின்றிருந்த தஞ்சியம்மன், அமுதென்பது இனிப்பாய் மட்டும் இருக்க வேண்டியதில்லை என உணர்த்திய கடலைச் சட்னி, சென்ற இடங்களிலெல்லாம் தங்கள் ராஜ்ஜியங்களை உருவாக்கிக் கொண்டிருந்த குழந்தைகள், கொந்தளிக்கும் ராட்சத அலைகள் உறைந்தது போலிருந்த மலை முகடுகள், அனைத்திற்கும் வண்ணம் பூசிக் கொண்டிருந்த சூரியன், அவனை நகலெடுத்துக் கொண்டிருந்த சிறு பல்லி.


பறவைகள் வழியே இத்தனையையும் அறிந்து கொண்டோம். இவையனைத்திற்குள் நாமும் ஒருவரென இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டோம். இவ்விரண்டு நாட்களில் ஒருமுறைக்கூட ஒரு பறவையையும் அதற்கு தொந்தரவளிக்கூடிய ஒரு செயலையும் குழுவினர் செய்யவில்லை. இங்கிருக்கும் எதுவும் நம்மைவிடத் தாழ்ந்ததில்லை எனப் புரிந்து கொண்டோம்.
ஒருவேளை இதுதான் இயற்கையை அறிதலா?

இயற்கையை அறிதலெனும் சொல் புறவயமாக ஒலிக்கிறது. முதல்நாள் மாலை அந்தி அணைந்து கொண்டிருக்கையில் உச்சிக் கிளைகளில் மேற்கு நோக்கி அமர்ந்திருந்த வால் காக்கையை, கரிச்சான்களை நினைவு கூர்கிறேன். அந்தி அணைதலை என்னைப்போல் அப்பறவைகளும் பார்த்துக் கொண்டிருந்தனவா? எனில், பறவைகள் வழியே நானும், இயற்கையிலுள்ள மற்ற அனைத்தும் ஒன்றே என புரிந்து கொள்கிறேனா?
ஒருவேளை இதுதான் ‘எங்குமிருக்கும் அதுவே நான்’ என உணர்வதா!?
எண்ணங்கள் நீண்டு, நீண்டு சென்று கொண்டிருந்தன. அன்று மாலை நண்பர்கள் ஷாமாவைப் பார்த்துவிட்டதை குழுவில் அறிவித்திருந்தனர். எனக்கு ஷாமா வேறு திட்டங்கள் வைத்திருக்கக் கூடும். வரும் நாட்களில் நான் பார்க்கப் போகும் அப்பறவை எனக்காக ஒரு பிரத்தேயகமான பாடலைப் பாடக்கூடும். அப்பாடல்,
“ஆம், இவையனைத்தும் தான், ஆனால்…?”
எனும் முற்றுப் பெறாத கேள்வியாக ஒலிக்கக்கூடும்.
eBird trip report: https://ebird.org/tripreport/569371
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்,
சென்னை,
11.09.2026