தூவித்தோழர்கள்-60

வெள்ளைக்கண்ணி(Indian White-eye)

2025 ஜூலை மாதம் இந்திய மரபிசைப் பயிற்சிக்கு நித்யவனம் சென்றிருந்தேன். பறவை பார்க்கும் நண்பர்கள் பலர் இருந்ததால், கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் பறவை பார்க்க சென்றோம். கிணத்துக் குடில் எதிரில் உள்ள மரத்தில் கூட்டமாக வெள்ளை கண்ணியை பார்த்தோம். மரக்கிளைகளிடைய அங்கும் இங்கும் பறந்தபடியே இருந்தது. ச்சீர் ச்சீர் என்ற மெல்லிய சீட்டியொலி போல இருந்த  அதன் குரலையும் கேட்க முடிந்தது. மொட்டுக்கள், விதைகள், பழங்கள், மலரமுது மற்றும் சிறு பூச்சிகளை உண்ணும். பல சமயங்களில் தலைகீழாக தொங்கியபடி, தேன் சிட்டுகளைப் போல பூவின் அடியில் துளையிட்டு மலரமுது உண்ணும்.  

©Holger Teichmann

 ஊட்டி Sims பூங்காவில், கைக்கெட்டும் தூரத்தில், காகித மலர்(Bougainvillea) கொடிக்குள் அமர்ந்திருந்தது வெள்ளைக்கண்ணி. Binocular ல் பார்த்த அதன் வெள்ளை கண்ணை, மிக அருகில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். (காகித மலர்க் கொடியைப் பார்க்கும் போதெல்லாம் ழ்ஜான் பாரெ அவர்களின் சாகசப் பயணம் ஞாபகம் வருவது தனிக்கதை.)

வெண் மார்பு மீன் கொத்தி, கரிச்சான் போன்றவை இப்பறவையை உண்ணும்.

தோற்றம்

சற்றே வளைந்த பழுப்பு நிற அலகு. அலகுக்கும் கண்களுக்கும் இடைப்பட்ட பகுதியில், வெள்ளை நிறக் கண் வளையத்தில் சிறு இடைவெளி உள்ளது. பழுப்பு நிறக் கருவிழி. உடலின் மேற்பகுதி பச்சை தோய்ந்த மஞ்சள் நிறமாக இருக்கும். தொண்டை மற்றும் வாலடி பகுதிகள் நல்ல மஞ்சள் நிறம். மார்பும், வயிறும் மங்கலான வெண்மை நிறம். கரும்பச்சை நிற விளிம்புகளோடு சதுரமான வால் இருக்கும்.

படித்தறிந்தது

  •  இந்திய துணை கண்டத்திலும், தென் கிழக்கு சீனா, தாய்லாந்து ஆகிய இடங்களில்  காணப்படுகின்றது. இதன் துணையினங்கள் இன்னும் பட்டியலிடப்பட்டு முடிக்கப்படவில்லை. ஆகவே பல குழப்பங்கள் உள்ளன. இப்போதைக்கு ஏழு துணை இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. வலசை செல்லாத பறவை.
©BOW
  • ஒரே இணையுடன் வாழும் என்று கருதப்படுகிறது. நான்கு முதல் ஆறு நாட்களில், ஆண் பறவையின் உதவியுடன், மிக மெல்லிய சிறு கோப்பை போன்ற கூட்டை பெண் பறவை கட்டி முடிக்கிறது. புல், சிலந்தி வலை, விலங்குகளின் முடி, சணல், எருக்கன் பஞ்சு ஆகியவற்றை வைத்து கூடமைக்கிறது. இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இடுகிறது. ஆண் பெண் பறவைகள் சேர்ந்து பத்து முதல் 11 நாட்கள் வரைஅடைகாக்கின்றன. ஆண் பெண் பறவைகள் சேர்ந்து 10 முதல் 14 நாட்கள் வரை குஞ்சுகளை வளர்க்கின்றன.
©Prem Prakash Garg
  •  வரிசை (Order): Passeriformes குடும்பம் (Family): Zosteropidae
    – வெள்ளைக்கண்ணிகள் Zosterops – பேரினப் பெயர் கிரேக்கச் சொற்களான zōstēr (வளையம்) மற்றும் ōps (கண்) ஆகியவற்றிலிருந்து உருவானது. palpebrosus – இலத்தீன் சொல்லுக்கு தடித்தகண் இமை என்று பொருள். எல்லா குருவிகளுக்கும் உள்ளது போல் தான் இதன் கண் இமையும் மெல்லியதாகவே உள்ளது. இதன் வெள்ளைக் கண் வளையத்தையே அவ்வாறு கூறுகிறார்கள். Zosterops palpebrosus – கண்ணைச் சுற்றி இருக்கும் வளையம், தடித்த இமை போல காட்சியளிக்கும் பறவை. இதன் வெள்ளை நிற கண் வளையம், பார்க்க கண்ணாடி அணிந்திருப்பது போல உள்ளதால், இதற்கு ‘கண்ணாடிக் குருவி’ என்றொரு பெயரும் உள்ளது.
உதவிய நூல்/வலைத்தளம்
  • தென்னிந்தியப் பறவைகள்- க.ரத்னம். பக்கம்:510
  • BOW

2 thoughts on “தூவித்தோழர்கள்-60”

Leave a Reply