அதிர்வுதாங்கியின் முன்னோடி

ஊர் மரங்கொத்தி – Black-rumped flameback (தூவித்தோழர்கள்-2)

 ஊர் மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 22 முறை  வரை மரத்தை தட்ட முடியும். இடையில் நிறுத்தாவிட்டால், மூளை சூடாக வாய்ப்புள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக சுருங்கி, விரியக்கூடிய மண்டை ஓட்டை கொண்டுள்ளது. இதன் நாக்கு மண்டையோட்டை சுற்றி வரும் அளவு நீளமானது. நாக்கின் நுனியில் கூர்மையான முட்கள் உள்ளன. நீண்ட நாக்கை நீட்டி மரத்தின் பிளவுகளில் மறைந்திருக்கும் பூச்சியை பிடிக்கிறது இந்தப் பறவை. இதன் நாக்கு ஓர் அதிர்வுதாங்கியாக (Shock Absorber) செயல்படுகிறது. இப்பறவைப் பற்றி மேலும் அறியலாமா?

©BirdWatchingDaily
வாழிடம்
  • இந்திய துணை கண்டத்திலும், இலங்கையிலும் காணப்படும் வலசை செல்லாத பறவை. இலையுதிர் காடுகள், தோட்டங்கள் மற்றும் மனிதர்கள் வாழும் இடங்களில் மிக அதிகமாக காணப்படும் மரங்கொத்தி இது.
©BOW
தோற்றம்

நீண்ட கூர்மையான கருப்பு அலகு. அரக்கு நிற கருவிழி. சாம்பல் பச்சை வண்ண கால்கள். உடலின் முதுகு பகுதி பொன்னிறமான மஞ்சள். வயிறு மற்றும் மார்பு பகுதி வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகளோடு இருக்கும். தொண்டையிலும் தலையிலும் வெண்ணிற புள்ளிகளில் இருக்கும். விரைப்பான கருப்பு வால் இறகுகள் சமநிலை தவறாமல் இருக்க உதவுகிறது. ஆண் பறவைக்கு சிவப்பு கொண்டை  நீளமாகவும், பெண் பறவைக்கு பாதி தலை வரையிலும் இருக்கிறது. இந்த படத்தில் ஆண், பெண் பறவைகளை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். மரம் ஏற வசதியாக, இதன் கால்களில் இரண்டு விரல்கள் முன்புறம் நோக்கியும், இரண்டு விரல்கள் பின்னோக்கியும் இருக்கும். (இப்பறவையின் ஒலியை கேட்க)

©Sivaguru Noopuran PRS
©Anonymous eBirder
உணவு

எறும்பு முதலிய பூச்சிகளும் அதன் முட்டைகளும், புழுக்களும் முக்கிய உணவு. மலரமுது மற்றும் பழங்களும் உண்ணும். 

 இனப்பெருக்கம் 

 மா, பனை போன்ற மரங்களில் ஆண், பெண் பறவைகள் சேர்ந்து கூடு கட்ட துளைகளை அமைக்கும். இரண்டு முதல் மூன்று முட்டைகள் இடும். ஆண், பெண் பறவைகள் சேர்ந்து 17 முதல் 19 நாட்கள் வரை அடைகாக்கும். மூன்று வாரம் குஞ்சுகளை கவனிக்கும். அவை பறந்து போன பிறகு, மைனா, கிளி போன்ற பறவைகள், அந்த பொந்தை பயன்படுத்தும்.

அறிவியல் பெயர்

ஐந்து துணை இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. பேரினப் பெயரான Dinopium – deinos (வலிமைமிக்க) மற்றும் ōps (தோற்றம்) என்ற இரு சொற்களால் ஆனது. benghalense என்ற இனப்பெயர், இப்பறவை முதன்முதலில் வங்காளப் பகுதியில் பதிவு செய்யப்பட்டதால் வைக்கப்பட்டுள்ளது. Dinopium benghalense – வலிமையான தோற்றம் கொண்ட வங்காளத்தில் பதிவு செய்யப்பட்ட பறவை.

தொன்மம்

கேனன்ஸின்(Canens) கணவரான மன்னன் பிக்கஸை(Picus), சூனியக்காரி சிர்சி(Circe) அடைய முயன்றாள். பிக்கஸ் அவளை நிராகரிக்க, கோபம் கொண்ட அவள், அவனை ஒரு மரங்கொத்தியாக மாற்றியதாக ஒரு ரோமானிய தொன்மம் உள்ளது.

என் தோழர்

மிகவும் சத்தமான ‘கி கி கி கி கி’ ஒலியை எழுப்பும் ஊர் மரங்கொத்தியை தற்செயலாக பார்த்தேன். மின்சார கம்பத்தில் நின்று கொண்டிருந்து. அன்றிலிருந்து ஆரம்பித்தது தேடல். பெரும்பாலான நாட்களில் பகல் வேளையில் அதன் ஒலி கேட்கும். உடனே வெளியே சென்று பார்ப்பேன். சில நாட்கள் கண்ணிலேயே படாது. சில நாட்களில், மிகவும் வேகமாக, அதன் சிறகசைப்பு ஒலி கேட்க, அலை போல மேலும், கீழும் பறந்து செல்வதை பார்க்க முடியும். . பல நாட்கள், ஓரிரு நொடி மின்சார கம்பத்தில்  பூச்சி உண்ணுவதை பார்க்க முடியும். இப்படியாக தேடல் தொடர்ந்து கொண்டிருந்து.

ஒரு நாள், ஜோடியாக தரிசனம் கொடுத்தது. அதன் Robo போன்ற தலை அசைவும், குதித்து குதித்து நகரும் விதமும், பளிச் சிவப்பு நிற கொண்டையும் என்னை மிகவும் கவர்ந்தது. பூச்சியை உண்பதும், தலையைத் திருப்பி சுற்றி பார்ப்பதும், மேலே கீழே நகர்ந்து செல்வதும் என்று நீண்ட நேரம் நின்றிருந்தது. மதிய வெயிலில், அதன் முதுகு எரியும் தங்கம் போல் மின்னியதைக் கண்டபோது, ‘Golden flameback’ என்ற பெயர்க் காரணம் புரிந்தது. ‘Watch as long as it lets you’ என்று மா. கிருட்டிணனின் கூற்றை வகுப்பில் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘என் உலகத்திற்குள், நீங்களும் சிறிது நேரம் இருக்கலாம்’ என்று அனுமதி தந்ததால், ஊர் மரங்கொத்தி என் தோழர் ஆனது.

References-உதவிய நூல்/வலைத்தளம்
  • Birds of the World(Link)
  • தென்னிந்தியப் பறவைகள்- க.ரத்னம். பக்கம்:324
  • அறிமுகக் கையேடு- பறவைகள்- ப. ஜெகநாதன்-பக்கம்:123
  • Shock Absorber Facts
  • Woodpecker’s Tongue (Link)

One thought on “அதிர்வுதாங்கியின் முன்னோடி”

Comments are closed.