பறவைப் பார்த்தல் அனுபவக் குறிப்பு – நித்தியவனம் – 18, 19 & 20.09.2026

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
விருந்தோம்பல்; குறள் – 86; திருவள்ளுவர்

பறவைப் பார்த்தல் அறிமுகமான பின், நித்தியவனம் மிக நெருக்கமானதாக ஆகிவிட்டது. விஷ்ணுபுரம் பறவைகள் வட்ட குழுவினரும் இதையே உணர்வார்கள் என எண்ணுகிறேன். அதற்கு முன் வகுப்பறை, ஓய்வறை, உணவுக்கூடம், அதன் எதிரே துருத்திய பாறை, கீழே சிறு ஓடை என்றிருந்த நித்தியவனம் இன்று அங்குலம் அங்குலமாய் விரிந்து பேருரு கொண்டிருக்கிறது. இத்தனை முறை அங்கே சென்று அலைந்து, திரிந்த பின்னும், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய இடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது. இயற்கையுடனான சந்திப்பின் போதும், திரும்பும் போதும் இயற்கையின் பரிசு நிச்சயம் உண்டு.
இம்முறை மேலையிசை வகுப்பிற்காக நித்தியவனம் சென்றிருந்தேன். உடன் கோவிந்த் சார், செல்வகுமார் சார் மற்றும் ஜோதி போன்ற தெரிந்த நண்பர்களும், கையில் தொலைநோக்கியுடன் அதுவரை அறிமுகமற்ற நண்பர்களும் என ஒரு குறுங்குழு காலையும், மாலையும் நித்தியவனத்தில் ஊடும், பாவும் போல ஊடுருவிக் கொண்டிருந்தோம். எங்களை இணைக்கும் கண்ணிகளாக இருந்தனப் பறவைகள்.

முதல் நாள் (18.Sep) காலை வகுப்பு துவங்க சற்று நேரம் இருக்க, அப்போதே முதல் பட்டியலைத் துவங்கிவிட்டோம். வெயிலும், வெப்பமும் மிகுதியாக இருந்ததால் பறவைகள் புதர்களுக்குள் அடங்கிவிட்டிருந்தன. சரி, யானைக்குடில் வரை சென்று திரும்பிவிடுவோம் என முன்னேறிச் சென்ற போது வெகு தொலைவில், வயிற்றில் வெள்ளை பூசியபடி கிளையில் நின்ற பறவையை வெண்வயிற்றுக் கரிச்சான் (White bellied drongo) என அடையாளம் கண்டார் செல்வகுமார் சார். அவர் சொல்வதைக் கேட்டுவிட்டு திரும்புவதர்க்குள் கரிச்சான் எழுந்து, பறந்து எங்களுக்கு இடப்பக்கம் இருந்த மரக்கிளைத் தழைப்புக்குள் மறைந்தது. கிடைத்த ஒரு பறவையையும் தவறவிட மனமில்லாத நாங்கள் விரைந்து முன்னேறி பறவை நுழைந்த மரத்தை அணுகினோம். மரம் மலைச்சரிவில் இருக்க, நாங்கள் யானைக் குடிலுக்கு அருகே வேலிக்குப் பின் நின்று கொண்டிருந்தோம். கருப்பும், வெள்ளையுமாய் உள்நுழைந்த பறவை சாம்பல் நிறத்தில் வெளியேறிப் பறந்தது.
ஆம். வருவிருந்து!

நாங்கள் பார்த்தது, குயில் கீச்சான் (Indian cuckooshrike). நான் முதல் முறையாக இப்பறவையைப் பார்க்கிறேன். ஆனால் இலைப்பரப்பிற்குள் ஆடிக் கொண்டிருந்த பறவையை முழுதாகப் பார்க்கவோ, படமெடுக்கவோ எத்தனை முயன்றும் முடியவில்லை. வெறும் கண்ணும், காமிராவுமாய் வகுப்பிற்குத் திரும்பினோம். வகுப்பு முழுவதும் வாக்னரின் இசைக் கோர்வைகள் பறவைகளின் அழைப்பை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியிருந்ததால் ஒழுங்காக வகுப்பை கவனிக்க முடிந்தது. வகுப்பு முடிந்ததும் மீண்டும் தொலைநோக்கியும், படக்கருவியுமாக திரியத் துவங்கினோம்.
இம்மூன்று நாட்களில் இரண்டு முறை மழை பெய்தது. மழைவிட்டதும் பறவைகள் வெளிக்கிளம்பிய பூச்சிகளை வேட்டையாடத்துவங்கின. இருவகைச் சின்னான்கள், கரிச்சான்கள், கல்லுக் குருவி, கருஞ்சிட்டு, தவிட்டுக் குருவிகள், வெள்ளைக் கண்ணி எனத் தெரிந்த முகங்களாக வந்து கொண்டிருந்தன. நீளவால் கீச்சானை சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. ஊர்த் தேன்சிட்டும், லோட்டன்’ஸ் தேன்சிட்டும் மின்னிக் கொண்டிருந்தன.

மறுநாள் (19.Sep) காலை நித்தியவனத்திற்கு வடக்கே, மலைச்சரிவிலிருக்கும் காட்டிற்கு சென்றேன். வழக்கமாய்ப் பார்க்கும் ஆலமரத்தில் புள்ளி ஆந்தையைத் தேடிக் கொண்டிருந்த போது, நான் வந்ததறியாமல் வயலில் ஏதோ தேடிக் கொண்டிருந்த ஆந்தை, என்னைப் பார்த்தும் பறந்தெழுந்து ஆலத்தில் அமர்ந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, உணர்வெதும் எழாத முகத்தில் அன்பைக் காட்டியபின் அவரவர் வழியில் முன்னேறினோம்.

சற்று தூரத்தில் பாதை சரிவில் இறங்கத் துவங்கியது. நாம் இருக்கும் நிலையிலிருந்து இறங்கித்தான் காட்டிற்குள் செல்லவேண்டியிருக்கிறதோ? இறங்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் கற்றவை, பெற்றவை, தொழில் தகுதியென நம்பியிருப்பவை என எல்லாம் மறைய எடையற்றவனாக மாறிக் கொண்டிருந்தேன். பாறைகளைத் தாவிக் கடந்து கொண்டிருந்தேன். வெளியேறியவை உருவாக்கிய பள்ளத்தில் முதலில் வந்து நிரம்பியது அச்சம். புள்ளொலிகள் மட்டும் நிரம்பிய சூன்யமான சூழலில் சிறு அசைவும், ஒலி மாறுபாடும் உருவாக்கும் பயம் ஆழமானது. என் ஆழுள்ளத்தில், யாரோ ஒரு மூதாதை, எங்கோ ஓர் அபாயத் தருணத்தில் பார்த்துக், கேட்டு மறந்த காட்சிகளுடன் தற்போதைய சூழலை, அதன் ஒலிகளை மூளை அசுர கதியில் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது. காலடியில் பச்சைக் குவியலாய்த் தெரிந்ததெல்லாம் யானையின் லத்தியென நம்பி மனம் பதறிக் கொண்டிருந்தது.


மனதை நிலைகொள்ளச் செய்ய, உடலை அசைவற்று நிலைக்கச் செய்வது ஒரு சிறந்த உத்தி என்பது என் அனுபவம். எனவே சற்றே செடிகள் சூழந்த ஒரு சிறு பாறைமேல் சென்றமர்ந்து கொண்டேன். செடிகள் என்னை மறைத்திருந்தன, என் நான்கு திசைகளிலும் காடு சூழ்ந்திருந்தது. அச்சம் படிப்படியாய் வடிய, கண்களும், காதுகளும் பறவைகளுக்காய் விரியத்துவங்கின. அதுவரை அத்தனை அருகிலிருந்தும் கருத்தில்படாத மின்சிட்டு ஜோடியொன்று, திடீரெனக் காட்சியளித்து. பின் ஒவ்வொன்றாய் பறவைகள் வரத்துவங்கின.

இதுவரை பறவைகளின் அலகை, சிறகை, அதன் வடிவங்களை, வண்ணங்களை மேற்புறமாக, கிடைமட்டமாக பார்த்து, வியந்து, மகிழ்ந்து கொண்டிருந்த எனக்கு சரியாக நேர்கீழே அமர்ந்து பறவைகளை அடியிலிருந்து பார்ப்பது ஓர் தனித்துவமான அனுபவம். இதுவரை பார்த்துப் பரிட்ச்சயமான அனைத்து பறவைகளும் வேறொன்றாய்த் தெரியத்துவங்கின. செந்தலைக் கிளி, நாகணவாய், குண்டுக் கரிச்சான் என வந்தமர்ந்து சென்று கொண்டிருந்தன. ஒரு நீலவால் ஈ பிடிப்பான் வந்தமர, இதுதான் இருமுனை கூர்கொள்வதோ என நினைத்துக் கொண்டேன்.
நேரம் சென்று கொண்டிருந்தது. காட்டில் நுழைந்த போதிருந்த பதற்றம் இப்போதில்லை. மனம் தெளிவாக இருந்தது. புலன்கள் துல்லியமாக இருந்தன. எந்தக் கவனச்சிதறலும் இல்லை. நல்வாய்ப்பாக நித்தியவனத்தில் தொலைத் தொடர்பும் இல்லை. நெடுநேரம் தொலைநோக்கியை செங்குத்தாகப் பிடித்திருந்த கைகள் ஓய்வுக்கேங்கின. கருவிகளை கீழேவைத்து இலக்கற்று நோக்கியபடி அமர்ந்திருந்தேன். சற்று நேரம் சென்றிருக்கும். அப்போது தலைக்கு மேல் வந்தமர்ந்த பறவை குயில் கீச்சான்தான் என பார்க்காமலேயே எப்படி அறிந்தேன்?

கானகம் எனும் சொல் அடர்ந்த, பெரிய காட்டைக் குறிப்பது என்கிறது அகராதி. கானகம் என்பது உண்மையில் காண் + அகமோ எனத் தோன்றியது. இக்காட்டில் நுழைந்ததிலிருந்து என்னில் நிகழந்தவற்றை மீண்டுமொருமுறை நினைவுகூர்கிறேன். நான் என நினைத்திருந்தவை விலக, முதலில் அச்சம் நிரம்பியது. பின் அச்சம் குறைய சூழல் துலங்கிவந்தது. காட்சியும், ஒலியுமாய் கொந்தளித்துக் கொண்டிருந்த சூழல் ஆழ்ந்து ஆழ்ந்து சென்று அமைதியானது. இப்போது எண்ணுகையில், என் கைகள் அவ்வளவு எளிதாக சோர்வடைபவை இல்லை என்பது உறைக்கிறது. நான் கருவிகளை கீழே வைத்தது இயற்கைக்கும் எனக்கும் நடுவே கருவிகள் இருப்பதை ஏதோ ஒன்று விரும்பாமலிருந்திருக்கலாம் என எண்ணிக்கொள்கிறேன். அது என்னை நிராயுதபாணியாக, தடையற்றவனாக, கவசங்களற்றவனாக தன்னுள் நுழைய அனுமதிக்கிறது. உள்நுழைகையில் என்னையும் இழந்து சூழலில் ஒன்றுகிறேன். இப்போது நானும் காடும் வேறல்ல. என் அகம், காட்டின் அகத்துடன் ஒன்றுகிறது. இரண்டும் ஒன்றாகிறது. நான் கண்டுகொண்டிருப்பது என் முன் காடாய் விரிந்திருக்கும் என் அகம்.
காணகம்!
அந்தக் கணம் என்மேல் குயில்கீச்சான் பறந்து வந்தமர்ந்தது.

மேற்குறிப்பிட்டவை, இரண்டு வாரங்கள் கழித்து நிகழ்ந்தவற்றை என் நினைவிலிருந்து மீட்டெடுக்கையில் நான் உணர்பவை. குயில் கீச்சானை நான் அறிந்து கொண்டதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். முந்தைய நாள்தான் இப்பறவையை கவனமாய் பார்த்திருந்தேன். அதன் பறக்கும் முறையும், வடிமும், வண்ணங்களும் நன்றாகப் பதிந்திருந்தன. இன்று காட்டில் என் கவனம் வேறெங்கோ இருந்த போதும், ஒரு சிறு அசைவால் விழிப்படைந்த மூளை, அதிவேகமான விழியசைவில் கிடைத்த தகவல்களைக் கொண்டு அப்பறவையை அடையாளம் கண்டிருக்கலாம். எப்படியாயினும் குயில்கீச்சானை கண்ட நிகழ்வு, வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாகிப்போனது.

மூன்றாம் நாள் (20.Sep) காலை மடம் செல்லும் வழியில் நடந்து கொண்டிருந்தேன். இன்றும் நான் எப்படியும் வெறுங்கையுடன் அனுப்பப்டப் போவதில்லை என்பது தெரியும். ஆனால் பெறப்போகும் பரிசு என்ன? என்பதுதான் புதிர். ஆனால் அதற்கு அவ்வளவு சிரமப்படவில்லை. துவங்கிய ஒன்றறை மணி நேரத்தில் Golden fronted leafbird (பச்சைச் சிட்டு) வந்து என்னை வழியனுப்ப, இறுதியில் வகுப்பு முடிந்து திரும்ப காரில் ஏறிய கணம் கருங்கழுகும் (Black eagle) வந்து எங்களை வழியனுப்பியது.
ஆம். செல்விருந்து!

eBird trip report: https://ebird.org/tripreport/573626
லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன்,
சென்னை,
02.10.2026