ஒரு குரல்

ஒரு பறவையின் குரலுடன் மட்டும் தனித்து இருந்திருக்கிறீர்களா? பதிமூன்று வருடங்களுக்கு முன் ஒரு மாலை பொழுதில் பல கிளிகளின் கீச்சிடலுக்குள் அத்தனை சத்தங்களையும் மீறி தனித்து ஒலித்தது அந்த பறவையின் குரல். முதன்முதலில் நான் அப்போது தான் கவனித்தேன். பின்னர் ஒவ்வொரு மாலையும், அங்கிருக்கும் போது தனித்தோ சேர்ந்தோ ஒலிக்கும் அந்த பறவையின் குரலை கவனிக்காமல் இருக்க முடிந்ததில்லை.

அப்பொழுது அது எந்த பறவை என்று பார்க்கத் தோன்றவில்லை. கிராமத்தில், கணவரின் குடும்ப வீடு மச்சு வீடு என்றாலும், வீட்டிற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இருக்கும் தென்னை மரங்களின் மேல் பகுதியை அங்கிருந்து பார்க்க இயலாது. மாலையானால் கிளிகளின் கீச் கீச் சத்தம் சுற்றுப்புறத்தை நிறைத்துவிடும். இரவு கவிய தொடங்கி, வவ்வால்கள் ஒன்றிரண்டு பறக்கத் தொடங்கும் வரை அது தொடரும்.

பறவை பார்த்தல் வகுப்பிற்கு பின் அங்கு சென்றிருந்தபோது மாலை அந்த குரல் கேட்டது. Merlin appல் சத்தங்களை கொண்டு பறவையை அறிய முற்பட்டேன். முதலில் பச்சைக்கிளி(rose ringed parakeet) அடுத்ததாக செந்தலை அன்றில்(red naped ibis) என காட்டியது. செந்தலை அன்றிலை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தனிமை நிறைந்த அதன் குரலை மெல்ல, மெல்ல பொருத்திக்கொள்ள முடிந்தது.

Binoculars கொண்டு அதை பார்க்க முற்பட்ட போது, அதற்குள் இருட்டிவிட்டதால் ஒன்றும் தெரியவில்லை. அடுத்தநாள் வரை காத்திருப்பு. அடுத்தநாள் ஊருக்கு செல்லவிருந்ததால் பார்க்க வாய்க்குமா வாய்க்காத எனும் சின்ன அலைக்கழிப்புடன் நேரம் கழிந்தது. அடுத்த நாள் மாலை இன்னும் சற்று முன்னரே வந்து காத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கிளிகளின் சத்தம் அந்த சுற்றுப்புறத்தை நிறைக்க ஆரம்பித்த வேளை, செந்தலை அன்றில் ஒன்று பறந்து வந்து எதிரில் இருந்த தென்னையின் உயர்ந்த இடத்தில் அமர்ந்தது.

குரலெழுப்பி தன் இணையை அழைக்க ஆரம்பித்தது. கேட்டு மட்டுமே பழகியிருந்த குரல். எனை மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அதன் இணை வந்ததும் இருவரும் பேச ஆரம்பித்துவிட்டனர். நீண்ட அலகுகளை திறந்து மூடி, ஒருவரின் அலகில் இன்னொருவர் அலகு தொட்டு, விலகி என நீண்டது பேச்சு. இருவரிடமும் விடை பெற்றேன். சற்றுத் தள்ளி இன்னும் இரு இணைகளை காண முடிந்தது.


இது நடந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து சென்ற வாரம் அங்கு சென்றிருந்தேன்.மாலை பறவைகளை காண வழக்கம் போல் மாடிக்கு சென்று கிளிகளின் ஆரவாரத்தில் காத்திருந்தேன். சிறிது நேரத்தில், கருந்தலை அரிவாள் மூக்கன்(black headed ibis) சிறு சிறு குழுக்களாக வந்து அமர்ந்தது கொஞ்சம் தள்ளி இருந்த மரங்களில், பெரும்பாலும் தென்னை மரங்களில்.

சற்று தள்ளி ஒரு தென்னை மரத்தில் செந்தலை அன்றில் வந்தமர்ந்து தன் இணையை அழைக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் வந்தமர்ந்த அதன் இணையுடன் வாயாட ஆரம்பித்து விட்டது. இருவரும் பேசிப்பேசி எதை அளந்து கொண்டிருக்கிறார்கள். வீடியோ எடுக்க எண்ணி செல்பேசி கீழே இருந்ததால் சென்று எடுத்துக்கொண்டு வந்தேன்.

அருகில் இருந்த இன்னொரு தென்னை மரத்தில் ஒரு செந்தலை அன்றில் அமரவும் அதன் இணை வந்து உடனமரவும் சரியாக இருந்தது. ஒன்றுக்கொன்று எந்த பேச்சும் இல்லாமல் மோனநிலையில் அமர்ந்திருந்தனர் இருவரும்.



அருகிலிருந்த இன்னொரு மரத்தில் தனியே அமர்ந்திருந்த செந்தலை அன்றில் ஒன்றை அப்போது தான் கவனித்தேன். தனியே அமர்ந்திருந்தும், அமைதியாக யாரையும் அழைக்காமல் இருந்தது. சென்ற முறை நான் பார்த்த அதே மரத்தில், அதே இடத்தில் என்பதால் ஒரு எதிர்பார்ப்புடன் நான் பார்த்திருந்தேன். ஆனால் ஒருமுறை கூட அது அகவவில்லை. இருட்டிக்கொண்டே வந்தது. அதன் அமைதி என்னை என்னவோ செய்தது.

திரும்பிய நேரம், தலைக்கு மேல் கூட்டமாக சென்ற கருந்தலை அரிவாள் மூக்கன் பறவைகளை ரசித்த வண்ணம், சிறிது நேரம் வானின் வண்ண மாற்றங்களை பார்த்திருந்தேன். அல்லது கண்களால் காணாமலேயே மனதளவில் அந்த தனித்த பறவையுடன் உடனிருந்தேனா?



நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே.
(குறுந்தொகை – 160)

இந்த பாடலின் நினைவு வந்து தொட்டு சென்றது.

இப்போது கிளிகளின் குரல்கள் ஒருவாறு அடங்கிவிட்டது. பேசிகொண்டே இருந்த அன்றில் இணையரின் குரல்களும் கேட்கவில்லை. இருட்டில் மற்ற எந்த பறவையையும் பார்க்க முடியவில்லை. வானில் வவ்வால்கள் பறந்து இரவை அறிவிக்க ஆரம்பிக்க, திரும்பும் முன் ஒருமுறை அந்த அன்றிலை பார்க்க விழைந்தேன். வானில் நிழலுருவாக, தன் நீண்ட கழுத்துடன், வளைந்த அலகுடன் அது இரவுக்காகவும்-விடியலுக்காகவும் காத்திருந்தது.


https://ebird.org/checklist/S397443999