தூவித்தோழர்கள்-61

கருந்தோள் பருந்து(Black-winged Kite)

வெள்ளிமலை பறவை பார்த்தல் வகுப்பிற்கு வந்தபோது, ஒரே இடத்தில் பறக்கக்கூடிய பறவைகளில் ஒன்று கருந்தோள் பருந்து என்று கூறினார்கள். மதிய இடைவேளையில் அது வானில் வட்டமிட்டு கொண்டிருந்ததை பார்த்தோம். சிறிது நேரத்தில் ஒரே இடத்தில் பறந்தும் காட்டியது. அதன் பின் ஒவ்வொரு முறை வெள்ளி மலை வரும்போதும், மதிய இடைவேளையில் அதை தேடுவது என் வழக்கமாயிற்று. வருடம் முழுவதும் அதை பார்க்க முடிந்தது. ஆகஸ்டு மாதத்தில் ஜோடியாக வானில் வட்டமிட்டு கொண்டிருந்தது. செப்டம்பர் மாதம் ஜெ உடன் மாலை நடை செல்லும் போது, வானிலிருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கியபடி வந்த கருந்தோள் பருந்தை பார்த்தேன். கூட்டமாக நாங்கள் வந்ததா அல்லது இரை தப்பி விட்டதா தெரியவில்லை. அதன் கரு நிற இறக்கைகளை தெளிவாக பார்க்கும் அளவு, கீழே வந்தபின், மேலே பறந்து சென்று விட்டது. பறக்கும் போது அளவில் சற்று சிறியதாக தோன்றும். இறக்கைகளை சற்றே வளைத்து வேகமாக அடிக்கும்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவை பார்த்த பின், விழா அரங்கு வந்தோம். திருமண மண்டபம் எதிரில் உள்ள மின்சார கம்பியில் கருந்தோள் பருந்து மெதுவாக அதன் வாலை மேலும் கீழும் ஆட்டியவாறு அமர்ந்திருந்தது. கரும்பருந்தை விட சிறிய பருந்து. பெரும்பாலான நேரம் அமைதியாகவே இருக்கும்.  

வளரிளம் பறவை ©Simon Carter

வாழிடம்

சஹாரா பாலைவனம் தவிர்த்த ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஐரோப்பா, இந்திய துணை கண்டம், ஜாவா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் ஆகிய தீவுகளிலும் காணப்படுகிறது.வரை காணப்படுகின்றன. இதில் நான்கு துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுவது Elanus caeruleus vociferus என்ற துணையினம். Black-shouldered kite(Elanus axillaris) என்பது ஆஸ்திரேலியாவில் காணப்படும் பருந்து. வெள்ளை வால் பருந்து அமெரிக்காவில் காணப்படுகிறது. மிக நுண்ணிய வேறுபாடுகள் கொண்ட இம்மூன்றும் ஒரே பேரினம்.

வலசை செல்லாது. உணவு தேவையைப் பொறுத்து, அருகிலுள்ள இடங்களுக்கு செல்லும். இனப்பெருக்கமில்லா காலங்களில் கூட்டமாக ஒரே இடத்தில் தங்கும். பொதுவாக 15-20 வரையிலும், மிக அரிதாக 500 பறவைகள் கூட ஒரே இடத்தில் இருக்கலாம்.

©BOW

தோற்றம்

உடல் சாம்பல் நிறமாகவும், இறக்கையின் ஓரங்களில் கரு நிறமும் காணப்படும். இரை கொல்லி பறவைகளுக்கே உரிய கூர்மையான வளைந்த அலகு. முன்புறம் அமைந்த கண்களில் சிவப்பு நிற கருவிழி.வால் சதுரமாக இருக்கும். குட்டையான மஞ்சள் நிற கால்களை உடையது.பெண் பறவைகள் சற்றே பெரிதாக இருப்பதை தவிர ஆண் பெண் பறவைகளுக்குள் வேறுபாடு இல்லை.(இப்பறவையின் ஒலியை கேட்க)

உணவு

இதன் முக்கியமான உணவு எலி போன்ற சிறிய பாலூட்டிகள். பூச்சிகள், பல்லிகள், சிறிய பாம்புகள், தவளைகள் ஆகிவற்றையும் உண்ணும். இப்பறவையினால் பறந்தவாறு உணவு உண்ண முடியும்.

இனப்பெருக்கம் 

பட்டாம்பூச்சி போன்ற இனப்பெருக்க நடனத்தில், ஆண் பறவை இறக்கையை விறைப்பாக வைத்து மிகைப்படுத்தப்பட்ட அசைவுகளுடன் பறக்கும். ஆண் பெண் பறவைகள் கூர் உகிர்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்து, சேர்ந்து சுழன்று பறக்கும். ஒரே வருடத்தில் இருமுறை கூட இனத்தைப் பெருக்கலாம். இது இரைகொல்லிப்பறவைகளில் மிகவும் அரிதாக காணப்படுகின்ற விஷயம். குச்சிகளை வைத்து, ஆண் பெண் பறவைகள் சேர்ந்து ஓரிரு வாரங்களில் சிறிய தட்டு போன்ற கூடமைக்கும். காய்ந்த புற்களை வைத்து உள் அமைக்கும். சில சமயம் கூட்டை மறுபடியும் பயன்படுத்தும். மூன்று முதல் நான்கு முட்டைகளையிட்டு, ஒரு மாதம் வரை பெண் பறவை அடைகாக்கும். பெண் பறவை வேட்டையாடும் நேரத்தில் மட்டும், ஆண் பறவை அடைகாக்கும். 40 நாட்கள் வரை குஞ்சுகளை கவனிக்கும்.

அறிவியல் பெயர்

வரிசை (Order): Accipitriformes குடும்பம் (Family): Accipitridae– பருந்து Elanos – பேரினப் பெயர் கிரேக்கச் சொல்லான elanos என்றால் பருந்து (Kite) என்று பொருள். caeruleus– லத்தீன் சொல்லான caeruleus என்றால் நீலம் கலந்த சாம்பல் நிறம்(Azure-Blue) என்று பொருள். Elanus caeruleus vociferus– உரத்த ஒலியெழுப்பும் நீலம் கலந்த சாம்பல் நிறப் பருந்து.

References-உதவிய நூல்/வலைத்தளம்
  • Birds of the World(Link)
  • Ferguson-Lees, J., and D. A. Christie (2001). Raptors of the World. Christopher Helm, London, UK. Page 355-358

One thought on “தூவித்தோழர்கள்-61”

Leave a Reply