மாடப்புறா(Rock/Feral Pigeon)
உடுப்பியில் ஒரு அடுக்குமாடி தங்குமிடத்தில் இருந்தேன். கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே ஒரு மாடப்புறா வந்த அமர்ந்தது. அடர் சாம்பல் நிற அலகு. இதன் அலகின் மேல் operculum/cere என்று அழைக்கப்படும் வெள்ளை நிற தோல் உள்ளது. இது தண்ணீர் ஒட்டாமல் தடுக்கும் பூச்சாக செயல்பட்டு, அதன் நாசியை பாதுகாக்கிறது. ஆரஞ்சு வண்ண கருவிழி. இறக்கைகளில் இரு கருமையான பட்டைகள். பெரும்பாலான பறவைகள் நீலம் அல்லது நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். வெள்ளை, கலவையான நிறம், செம்பழுப்பு போன்ற பல நிறங்களில் காணப்படும். கழுத்து மற்றும் மார்பு பகுதியில் ஒளிரும் பச்சை நிறம் இருக்கும். பெண் பறவைக்கு இந்த ஒளிர்வு சற்று மங்கலாக இருக்கும். வாலடி சாம்பல் அல்லது வெள்ளை நிறமாக இருக்கும். கால்கள் சிவப்பு முதல் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். ஒவ்வொரு நடைக்கும் தலையை ஆட்டியபடி சென்று மூலையிலிருந்து பூச்சியை தின்றது. நானும் அப்பறவையும் மானசீகமாக பேசி நண்பர்களாகி விட்டோம். சற்று நேரத்தில் அதன் இணை வந்து அழைத்ததும், என்னை விட்டுவிட்டு பறந்து சென்றது. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்தி விட்டு கிளம்பினேன்.

ஆகஸ்ட் மாதம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப காத்திருக்கும் போது, அதே நேரத்தில், தினமும் ஒரு மாடப்புறா வரும். சரியாக சுண்டு விரல் தடிமன் உள்ள வேப்பங்குச்சியை கவ்வி கொண்டு பறக்கும். ஒரு ஜன்னல் சாளரக் கவிகையில் (Sun Shade க்கு தமிழாம்) அமர்ந்து ஓய்வெடுத்தபின், இரண்டு கட்டடத்திற்கு நடுவில் பறந்து விட்டது. தொடர்ந்து மூன்று நாள் இவ்வாறு செய்தது. பின் அதனை காணவில்லை. Meme ல் வருவது போல் 3 குச்சியில் கூட்டை கட்டி முடித்து விட்டதோ என்னமோ தெரியவில்லை.
புறாக்கள் தங்கள் தங்கும் இடத்திலிருந்து உணவு தேடும் இடத்திற்கு, தினமும் சுமார் 20 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். தங்குமிடத்தை எளிதாக கண்டுபிடிக்கும் இப்ப பறவையின் திறமையினால், இவை தூது அனுப்ப பயன்பட்டிருக்கிறது. சூரியன், பூமியின் காந்தப்புலம், காற்றில் உள்ள மணங்கள் அல்லது இவை அனைத்தையுமே உபயோகப்படுத்தி, இவை திசையை கண்டறியலாம். அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட பறவையாக இது இருந்தாலும், இதன் செயல்படும் விதம், இன்னும் விஞ்ஞானிகளால் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படவில்லை.
படித்தறிந்தது
- உலகின் பெரும்பாலான இடங்களில் காணப்படும் பறவை. வங்காளத்தில் புறா வீட்டுக்குள் வந்தால் நல்ல சகுனமாக, லக்ஷ்மி வருவதாக பார்க்கப்படுகிறது. எனக்கு மிகவும் பிடித்த ஜெ சிறுகதைகளில் ஒன்றான, கண்ணாடிக்கு அப்பால் கதையில் ஒரு புறா பேயாக வரும்.

- தன் வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழ்கிறது.தொடர்ந்து ஒரே இடத்தில் கூடு அமைகின்றன. பெரும்பாலும் மிருதுவான உள்ளடுக்கு அமைப்பதில்லை. பழைய கூட்டின் மேலேயே புதுக்கூட்டை கட்டுவதால், வருடமாக ஆக, கூட்டின் அளவு பெரிதாகிக் கொண்டே செல்கிறது. மூன்று நான்கு ஆண்டுகளில் கூடு 2 கிலோ எடை யும், 20 cm உயரமும், 50 cm அகலமும், 8 cm ஆழமும் கொண்டதாகிறது. பெரும்பாலும் இரண்டு முட்டைகள் இடுகிறது. 16-19 நாட்கள் வரை ஆண் பெண் பறவைகள் சேர்ந்து அடைகாக்கின்றன. ஏழு நாட்கள் வரை ஆண், பெண் இரு பறவைகளும், குஞ்சுகளுக்கு உணவாக, இதன் உணவுக்குழாயில் உள்ள சுரப்பி(Crop Gland) ஒன்றிலிருந்து கொழுப்பும், புரதமும் நிறைந்த பால் போன்ற திரவத்தை ஊட்டும். அதன் பின்னர் விதைகளை கொடுக்க துவங்கும்.

- வரிசை(Order): Columbiformes குடும்பம் (Family): Columbidae – Pigeons and Doves Columba – கிரேக்க சொல்லான kolumbos என்பது நீரில் மூழ்குபவன் என்பதை குறிக்கும். புறாக்கள் நீந்துவது போல் பறப்பதை குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் கஷ்டப்பட்டு காற்றை தள்ளியபடி பறப்பதை கவனித்திருக்கிறீர்களா? livia- சிற்றினப்பெயர். லத்தீன் சொல்லான livor என்பது சாம்பல் கலந்த நீலம் அல்லது ஈய நிறத்தை குறிக்கும். Columba livia – நீரில் நீந்துவது போல் பறக்கும் நீலச்சாம்பல் நிறப் பறவை.
Source: BOW