தூவித்தோழர்கள்- 51

தெற்கத்திப் புதர்பாடி (Jerdon’s Bushlark)

தில்லைவன தோட்டத்தில் பறவை பார்த்துக் கொண்டிருக்கும்போது, மெர்லின் தெற்கத்திப் புதர்பாடி என்று காட்டியது. இதற்கு முன் ஒரே ஒரு முறை வெள்ளி மலையில், இப்பறவையை புல்லின் நடுவே பார்த்திருக்கிறேன். ஆகவே புதருக்குள் துலாவிக் கொண்டிருந்தேன். திடீரென்று மேலிருந்து மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டது. நன்றாக தெரியும் படி மின்சார கம்பியில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தது. சற்றே பெரிய பெண் சிட்டுக்குருவியைப் போன்ற தோற்றம். அகலமான பழுப்பு அலகு. கண்ணருகில் மிக மெல்லிய கோடு உள்ளது. தொண்டை வெள்ளை. சிறகுகள் கரும்பழுப்பு நிறம். மார்பிலும் வயிற்றிலும் அம்புகள் போன்ற கரும்பழுப்பு நிற முக்கோண வடிவ புள்ளிகள் இருக்கும். கால்கள் இளஞ்சிவப்பு நிறம். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் வேறுபாடு இல்லை. உருவத்தில் பெண் பறவை சற்றே சிறிதாக இருக்கும். அது பறந்து செல்லும் வரை பார்த்தேன். அது சென்றவுடன், புதரில் இருந்த, அதன் இணையும் பின்னாலே பறந்து சென்றது. சரியாக பார்த்திராத பறவையை ஜோடியாக பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

© Arun Prabhu

இனப்பெருக்க காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரை. இது மென் குரலில் கத்தியபடி மேலே 30 அடி வரை பறந்து பின் இறக்கையை V வடிவில் மேல் நோக்கி விரித்தபடி கீழே இறங்கும். மீண்டும் பறந்து பின் இறங்கி வரும். இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை, நாள் முழுவதும் இவ்வாறு பாடி பறந்து இறங்கியபடி இருக்கும். பறந்து சென்ற பின், சீழ்க்கை குரல் எழுப்பும். (Source: தென்னிந்தியப் பறவைகள்- க.ரத்னம். பக்கம்:336)

மார்பில் கரும்பழுப்பு நிற முக்கோண வடிவ புள்ளிகள்
©Charles J. Sharp Wiki

படித்தறிந்தது

  • தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும், ஸ்ரீலங்காவிலும் மட்டுமே காணப்படுகிறது. வலசை செல்லாத பறவை. ஸ்ரீலங்காவில் காணப்படுவது தனி துணையினமாக கருதப்பட்டாலும், இங்கு இது ஒரே சிற்றினமாக கருதப்படுகிறது. முன்பு வங்காள புதர்பாடியின் துணையினமாக கருதப்பட்டிருந்தது. அதன் குரலொலி, வாழிடம் மற்றும் மரபணுவில் உள்ள வேறுபாடு காரணமாக, தற்போது தனி சிற்றினமாக மாற்றப்பட்டுள்ளது.
© BOW
  • புதரடியில் ஒரு குழியில், புல் வைத்து கூடு அமைக்கும். 3-4 முட்டைகள் வரை இடும். அடைகாக்கும் காலம், குஞ்சுகளை வளர்க்கும் காலம் பற்றிய தகவல்கள் இல்லை.
  •  வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family): Alaudidae – Larks வானம்பாடி   Plocealauda – பேரினப்பெயர் Ploceus ( தூக்கணாங்குருவி – weaver birds) மற்றும் Alauda (வானம்பாடி இனம்) என்ற இரு சொற்களை இணைத்து வைக்கப்பட்டுள்ளது. affinis என்ற இனப்பெயருக்கு தொடர்புடைய அர்த்தம். வங்காள வானம்பாடிக்கு தொடர்புடைய பறவை. Plocealauda affinis– தூக்கணாங்குருவி போல இருக்கும் வானம்பாடி இனத்தை சேர்ந்த, வங்காள வானம்பாடிக்கு தொடர்புடைய பறவை.
  • Thomas C. Jerdon (1811–1872) ஒரு மருத்துவர் ஆவார். அவர் இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் இந்தியாவின் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனங்கள் குறித்து விரிவான எழுதினார். இந்தியப் பறவைகள் குறித்த முக்கிய நூலான The Birds of India என்ற புத்தகத்தில் 1008 பறவையினங்களை அடையாளப்படுத்தியிருக்கிறார். அவர் நினைவாக பல பறவைகளுக்கும்(Jerdon’s baza, Jerdon’s leafbird, Jerdon’s bushlark, Jerdon’s nightjar, Jerdon’s courser, Jerdon’s babbler and Jerdon’s bush chat), தாவரங்களுக்கும் , அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply