தூவித்தோழர்கள்-54

நீளவால் கீச்சான் (Long-tailed Shrike )

வெள்ளிமலையில் நித்தியவன நுழைவாயில் அருகே, வலது புறம் மின்சார கம்பிலோ, மரத்தின் உச்சிலோ, இது அமர்ந்திருப்பதை பார்க்கலாம். கரகரப்பான உரத்த குரலில் கத்தும். வேட்டையாடத் தயாராக சுற்றிலும் கவனித்தபடி அமர்ந்திருக்கும். இரையை முடிவு செய்தவுடன், அங்கிருந்து பறந்து சென்று, வேட்டையாடிவிட்டு, மீண்டும் தன் இடத்திற்கு வரும். Passeriformes வரிசையை சேர்ந்ததாக இருந்தாலும், இது இரைக் கொல்லி பறவைகளுக்குரிய தோற்றத்தையும், நடத்தையும் கொண்டிருக்கிறது. ஒருமுறை, பாதையின் அருகில் உள்ள எல்லைக்கல்லில் அமர்ந்திருந்தது. மிக அருகில் சென்ற போதும் பயமே இன்றி, வாலை மேலும் கீழும் ஆட்டியபடியே அமர்ந்திருந்தது.

©Vasanthan Panchavarnam
தோற்றம்

நீண்ட வால் கொண்ட மைனா அளவுள்ள பறவை. அலகிலிருந்து கண்ணைத் தாண்டி செல்லும் அகலமான கருப்பு நிறக் கண் பட்டையை வைத்து இதை எளிதாக அடையாளம் காணலாம். இரைக்கொல்லி பறவைகளைப் போன்ற வளைந்த கூர்மையான கருப்பு நிற அலகு. தலையும், முதுகும் சாம்பல் நிறம். தொண்டை வெள்ளை. உடலின் கீழ்பகுதி கருஞ்சிவப்பு தோய்ந்த வெண்மை நிறம்.சிறகுகளின் ஓரம் கருப்பு, நடுவில் சற்று வெள்ளை, உடல் அருகில் செம்பழுப்பு நிறம். நீண்ட வால் கருப்பு. நுனி மட்டும் வெள்ளை.ஆண் பெண் பறவைகளுக்கிடையே பெரிய வேறுபாடு இல்லை. பெண் பறவையின் கால்கள் சற்று அடர்பழுப்பாக இருக்கும். இளம் வயது பறவை, அலகு மற்றும் உடலின் மேற்புறம் பழுப்பு நிறமாகும், அடிப்புறம் வெள்ளையாகவும் இருக்கும். இறகின் ஓரங்கள் அடர் பழுப்பாக இருக்கும். சாம்பல் மற்றும் செம்பழுப்பு நிறம் இருக்காது. கண் பட்டையும் மங்கலாகவே தெரியும்.

படித்தறிந்தது

  • ஒன்பது துணையினங்கள் உள்ளன. வட இலங்கை, வட மத்திய மற்றும் தென்னிந்தியாவில் காணப்படும் துணையினம் Lanius schach caniceps (வெள்ளிமலையில் நாம் பார்ப்பது இது தான்). இது வலசை செல்லாது. பருவ நிலை மற்றும் உணவு தேவைகளுக்காக அண்டை இடங்களுக்கு மட்டும் செல்லும்.(Source)
©BOW
  • ஒரே இணையுடன் வாழும் பறவை. இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே வரை. முள் மரங்களில் புல், இறகு, கிழிந்த துணி ஆகியவற்றை வைத்து ஆண், பெண் பறவைகள் சேர்ந்து, கோப்பை வடிவமான கூட்டை அமைக்கிறது. மென்மையான புற்களை வைத்து உள்ளமைக்கிறது. பெண் பறவை முட்டைகளை 13–16 நாட்கள் வரை அடைகாக்கிறது. 14–17 நாட்கள் வரை குஞ்சுகளை கவனித்து கொள்கிறது. அக்கா குயில், சுடலைக்குயில் மற்றும் சாதாக் குயில் (Common cuckoo) ஆகியவை இதன் கூட்டில் முட்டைகள் இடும்.
  •  Lanius என்ற பேரினப்பெயர் இலத்தீன் சொல்லான lanius(கசாப்புக்காரன்) என்பதிலிருந்து வந்தது; laniare என்றால் துண்டு துண்டாகக் கிழித்தல் என்று அர்த்தம். இரையைப் பிடித்து முட்களில் குத்தி வைத்து, அதைத் துண்டு துண்டாகக் கிழித்து உண்ணும் வேட்டையாடும் முறையை குறிக்கிறது. schach -இப் பறவையின் தனித்துவமான உரத்த ஒலியிலிருந்து இதன் சிற்றின பெயர் மற்றும் ஆங்கில பெயர் வைக்க‌ப்பட்டிருக்கின்றன‌(இயல்பொலிச் சொற்கள்). Shrike பழைய ஆங்கிலச் சொல்லான scríc என்பதிலிருந்து உருவானது; அதற்கு கீச்சிடுதல் என்று அர்த்தம். (shriek ஞாபகம் வருகிறதா?) தமிழிலும் அதனால் தான் இதன் பெயர் கீச்சான். caniceps-துணையினப்பெயருக்கு சாம்பல் வண்ண தலை என்று அர்த்தம். Lanius schach caniceps– இரையை துண்டு துண்டாகக் கிழித்து உண்ணும், சத்தமாக கீச்சிடும், சாம்பல் நிறத் தலை கொண்ட பறவை.
Green Humour – These Villains Are No Match for the Shrike
© Rohan Chakravarty

Leave a Reply