கருந்தலை மாங்குயில் (Black-hooded Oriole)
வெள்ளிமலையின் நித்யவனத்தினுள்ளே, வகுப்பு நடக்கும் ஆலடியில், ஒரு ஜோடி கருந்தலை மாங்குயில்களை பார்த்தேன். மிகவும் அருகில் அமர்ந்து, மெல்லிய புல்லாங்குழல் இசையைப்போன்ற சிட்டியொலியை எழுப்பியது. ஜூன் மாதம், மதிய நேரத்தில் சாப்பிடும் இடத்திற்கு பின்னால் இருக்கும் மரத்தில் அமர்ந்து, இறகுகளை நீவி விட்டுக் கொண்டிருந்தது. அருகில் வந்த தவிட்டுக் குருவிகளை சட்டையே செய்யாமல், இறகுகளை நீவுவதிலேயே கவனமாக இருந்தது. கழுத்தை முழுவதுமாக திருப்பி , வால் அருகில் இருக்கும் எண்ணெய் சுரப்பியில், தன் அலகை தொட்டு, ஒரு பக்கத்து இறகை விரித்து, ஒவ்வொரு சிறகாக எண்ணெயை தேய்த்தது. கால் மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே அமர்ந்து, காட்சி கொடுத்தது. அரச மரத்தின் பழம், மலரமுது, எறும்பு, அந்து பூச்சி, கம்பளிப் பூச்சி, பறக்கும் கரையான்கள் ஆகியவற்றை உண்ணும். பெரும்பாலும் மரங்களில் உள்ள உணவினை உண்ணும். அரிதாகவே தரையில் வந்து பூச்சி பிடிக்கும்.
தோற்றம்
இளஞ்சிவப்பு வண்ண நீண்ட அலகு. கால்கள் சாம்பல் நிறம். சிவப்பு நிற கருவிழி. தலை, கழுத்து மற்றும் மார்பு பளபளப்பான கருப்பு நிறம். உடலின் மற்ற பகுதிகள் பளீர் மஞ்சள். சிறகுகளில் மஞ்சளும் கருப்பும் கலந்திருக்கின்றன. நிறம் சற்று மங்கலாக இருப்பதைத் தவிர, ஆண் பெண் பறவைகளுக்கு இடையே வேறுபாடு இல்லை. இளம் பறவையின் நெற்றியில் மஞ்சள் நிற கோடுகள் உள்ளன. தொண்டையிலும் வெள்ளை நிற கோடுகள் உள்ளன. கருப்பும் இளஞ்சிவப்பும் கலந்த அலகு.

©Sandip Das
படித்தறிந்தது
- இந்தியா, தெற்கு சீனா, தாய்லாந்து, மலேசியா, வடக்கு சுமத்ரா, இலங்கை, அந்தமான் தீவுகள், வடகிழக்கு போர்னியோ ஆகிய இடங்களில் காணப்படும் பறவை.
ஐந்து துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது வலசை செல்லாத பறவை .

- பெரிய கிண்ண வடிவ கூட்டை, இலைகள், புற்கள், சிறுபட்டைகள் ஆகியவற்றை வைத்து, ஆண் பெண் பறவைகள் இணைந்து கட்டுகின்றன. மிகவும் மெல்லிய குச்சிகளை வைத்து உள்ளடுக்கு அமைக்கிறது. வெளிப்புறத்தில் இலை மற்றும் கற்பாசி (லைக்கன்ஸ்) ஆகியவற்றை வைத்து அலங்கரிக்கிறது. கரிச்சான் வசிப்பிடம் அருகில் கூடு கட்டுகிறது. இரண்டு முதல் நான்கு முட்டைகளை இடுகிறது. ஆண் பெண் பறவைகள் சேர்ந்து அடைகாத்து, பின் குஞ்சுகளை பேணுகிறது. அடைகாக்கும் மற்றும் குஞ்சுகளை கவனித்துக் கொள்ளும் காலம் குறித்த தகவல்கள் இல்லை.

- வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family): Oriolidae Old World Orioles. மாங்குயில்கள். இந்த குடும்பத்தில் 41 இனங்கள் உள்ளன. Oriolus என்ற பேரினப் பெயர் தங்க நிறம் என்பதை குறிக்கும் லத்தின் சொல்லான aureolus என்பதிலிருந்து வைக்கப்பட்டுள்ளது. (பள்ளியில் Aurum(Au)-Gold என்று படித்தது ஞாபகம் வருகிறதா?) xanthornus- கிரேக்க சொல்லான xanthos(மஞ்சள்) மற்றும் ornis (கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்) ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். Oriolus xanthornus– தங்க நிற மஞ்சள் பறவை.
வங்காள நாட்டு தொன்மக் கதை
ஒரு மாமியாருக்கு பல மருமகள்கள் இருந்தாலும், அவருக்கு இளைய மருமகளை சுத்தமாக பிடிக்காது. அவளை கஷ்டப்படுத்திக் கொண்டே இருந்தார். இறுதியில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல், அந்த மருமகள் உடல் முழுவதும் மஞ்சள் பூசிக்கொண்டு, கரிப்பிடித்த மண்பானையை தலையில் கவிழ்த்திக் கொண்டு, ‘விருந்தினர்களே! நீங்கள் இனிமேல் வீட்டுக்கு வரலாம். ஆனால் என் சாவுக்கு நீங்கள் தான் காரணம்’ என்று கத்தியவாறு வீட்டை விட்டு ஓடி விட்டார். கடவுளர்கள் அவர் மேல் கருணை கொண்டு மஞ்சள் வண்ண உடலும், கருப்பு நிறத்தலையும் கொண்ட கருந்தலை மாங்குயிலாக, அந்த மருமகளை மாற்றி விட்டார்களாம்.
இன்னொரு கதையில், மாமியார் பறவையாக மாறுகிறார். வீட்டுக்கு வந்த மருமகனுக்கு பருப்பு குழம்பு செய்கிறார். மஞ்சள் பொடி எவ்வளவு போட்டும் , குழம்பு மஞ்சளாகவே ஆகாததால், கோபம் வந்து மண் பானையை தன் தலையில் போட்டுடைத்து, இந்த பறவையாக மாறி பறந்து விடுகிறார். எந்த கதையாக இருந்தாலும், இப்பறவையின் மஞ்சள் நிறத்திற்கு மஞ்சள் பொடியும், தலையின் கருப்பு நிறத்திற்கு கரிப் பிடித்த மண் பானையும் தான் காரணம்.
(இக்கட்டுரையை எழுதியவர் சரத்சந்திர மித்ரா(1863 – 1938). தொன்மங்களையும், நாட்டுப்புற பாரம்பரியம் பற்றியும் விரிவாக பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். Link Studies in Bird-Myths, No. XXII.-on a Second Aetiological Myth About the Indian Black-Headed Oriole”. Quarterly Journal of the Mythic Society. Page 76-77 )

