சாம்பல் சிலம்பன்(Large Gray Babbler)
பொள்ளாச்சி தோட்டத்தில் ‘தவிட்டுக் குருவி போல கத்திக்கொண்டிருக்கும் ஒரு பறவை கூட்டம், தோட்டத்தின் பின்புறம் உள்ளது. ஆனால் பார்க்க தவிட்டுக் குருவி போல இல்லை’ என்று என் அம்மா கூறினார்கள். புதுப் பறவை பார்க்க போகும் ஆர்வத்துடன் சென்றேன். தோட்டத்தில் நுழைந்த உடன் ‘க்காய் க்காய்’ என்று சத்தம் கேட்டது பின்புறம் சென்று பார்த்த போது, சுமார் பத்து சாம்பல் சிலம்பன்கள் கத்திக் கொண்டு, தரையில் மேய்ந்து கொண்டிருந்தன. சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்தன. சரி வேறு பறவைகள் பார்ப்போம் என்று நடந்து செல்ல செல்ல, மற்ற பறவைகளை எச்சரிப்பது போல, இவை என்னுடனே பறந்து பறந்து வந்து கூவிக்கொண்டே இருந்தன. ‘உங்களை மட்டுமே பார்க்க வேண்டுமா?’ என்று அவர்களை பார்க்க ஆரம்பித்தேன். தரையில் இருக்கும் பூச்சிகளை கொத்தித் தின்றன. தவிட்டுக்குருவியைப் போலவே குதித்து குதித்து அங்குமிங்கும் சென்றன. மரத்தின் மேல் ஏறி அமர்வதும், பின்பு மறுபடியும் தரையில் இறங்குவதுமாக இருந்தன. இதுவரை மூன்று முறை இவற்றைப் பார்த்திருக்கிறேன். ஒருபோதும் இவை அங்கிருக்கும் தவிட்டுக் குருவிக் கூட்டத்துடன் இணையவில்லை.

தோற்றம்
தவிட்டுக் குருவிகளில் பெரியது சாம்பல் சிலம்பன் ஆகும். எலுமிச்சை மஞ்சள் நிறக் கரு விழிகள். அலகு கொம்பின் பழுப்பு நிறம். நெற்றி வெளிர் சாம்பல் நிறமாக இருக்கிறது. கருப்பு நிறக் கண் பட்டை உள்ளது. தொண்டையும், மார்புப் பகுதியும் செம்பழுப்பு நிறம். உடலின் மேல் பகுதி கருஞ்சாம்பல் பழுப்பாக, ஆங்காங்கே திட்டு திட்டாக ஆழ்ந்த பழுப்பு நிறம் உள்ளது. வாலில் மிக மெல்லிய பட்டைகளையும், சில வெள்ளை நிற இறகுகளையும் காணலாம். உடலின் கீழ்ப்பகுதி வெளிர் மஞ்சளாக இருக்கிறது. கால்கள் பழுப்பு கலந்த சாம்பல் நிறம். ஆண் பெண் பறவைகளுக்கிடையில் வேறுபாடு இல்லை. வளரிளம் பறவையின் நிறம் சற்று மங்கலாக இருக்கும்.
படித்தறிந்தது
- இந்தியாவிலும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலும், தென்மேற்கு நேபாலிலும் மட்டுமே காணப்படும் வலசை செல்லாத பறவை. வேறு துணை இனங்கள் இல்லை.

- சிறு குச்சிகள், புல், வேர் முதலியவற்றைக் கொண்டு, கோப்பை வடிவ கூட்டினை கட்டும். பெரும்பாலும் உள் மென்மையான அடுக்கு இருக்காது. மிக மெல்லிய வேர்கள் அல்லது மெல்லிய பொருட்கள் வைத்து உள்ளடக்கு அமைக்கலாம். மரகதநீல நிறமுள்ள, நான்கு முட்டைகளை இடும். ஒரே கூட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் பறவைகள் முட்டையிடலாம். முந்தைய அடையிலிருந்த வளரிளம் பறவை அடைகாக்கவும், குஞ்சுகளுக்கு உணவு ஊட்டவும் உதவி செய்யலாம். ஆண் பெண் பறவைகள் சேர்ந்து குஞ்சுகளை வளர்க்கும். சுடலைக்குயில் இதன் கூட்டில் முட்டையிடும்.
- வரிசை(Order): Passeriformes குடும்பம் (Family): Leiothrichidae
– Laughingthrushes and Allies. Argya என்ற பேரினப் பெயர் வாக்குவாதம், சத்தம் போடுதல் என்பதை குறிக்கும் லத்தின் சொல்லான arguere என்பதிலிருந்து ( Argument ஞாபகம் வருகிறதா?) வைக்கப்பட்டுள்ளது. malcolmi என்ற இனப்பெயர்1832-இல் வில்லியம் ஹென்றி சைக்ஸ் என்ற பிரிட்டிஷ் இயற்கையியலாளர், இந்தியாவின் தக்காணப் பகுதியில் பறவை மாதிரிகளை சேகரிக்க உதவிய சர் ஜான் மால்கமின் நினைவாக இப்பெயரைச் சூட்டினார். Argya malcolmi– சத்தமாக வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும், Malcolm என்ற பிரிட்டிஷ் நிர்வாகியின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ள பறவை. - இதன் ஆங்கிலப்பெயரில் Grey என்பதற்கு பதில் Gray என்ற Spelling ஏன் என்று தெரியுமா? (எத்தனை முறை Grey Francolin என்று e-Bird ல் தேடி இருப்போம்?) Colour/ Color என்பது போல, இதுவும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க Spelling வேறுபாடு. e-Bird பயன்படுத்துவது James F. Clements என்ற அமெரிக்க பறவையிலாளரின் புத்தகமான ‘Birds of the World: A Checklist‘ ல் காணப்படும் வகைப்பட்டியல். அப்புத்தகத்தின் எதிர்காலப் பதிப்புக்களை Cornell Lab பார்த்துக் கொள்ளும்.
உதவிய நூல்/வலைத்தளம்
- தென்னிந்தியப் பறவைகள்- க.ரத்னம். பக்கம்:415
- BOW
- தகவல்கள் வரைபடமாக ஆங்கிலத்தில் . நன்றி : roundglass sustain
