தூவித்தோழர்கள்-59

நீலத்தாழைக் கோழி (Gray-headed Swamphen)

முதன்முதலில் நீலத்தாழைக் கோழியை வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்தேன். காலை வெயிலில், அதன் ஊதாவும் நீலமும் கலந்த நிறமும், முகத்தில் இருக்கும் சிவந்த பெரிய அலகும், நெற்றிக் கவசமும் மிக அழகாக காட்சியளித்தது. சத்தமே எழுப்பாமல் அமைதியாக நாமக் கோழிகளுடன் சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தன. சிவப்பு நிற மெல்லிய நீண்ட கால்களை தூக்கி வைத்து பொறுமையாக நடந்தன.

© Raghavendra Pai

ஆழம் குறைந்த நீர்நிலை ஓரங்களில், நீர்த்தாவரங்கள் மற்றும் காட்டுப்புதர்கள் அடர்ந்து காணப்படும் பகுதிகளில் வாழ்கிறது. சதுப்பு நிலங்களிலும், அவற்றுக்கு அருகிலுள்ள புல்வெளி மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் சென்று உணவு தேடும். பெரும்பாலும் தாவர உணவுகளான இலைகளின் அடிப்பகுதி, தண்டின் உட்பகுதி, இளம் குருத்துக்கள், புல் விதைகள், அல்லியின் பச்சைப் பகுதிகள் மற்றும் கிழங்குகளை உண்ணும். ஆனால் தாவர உணவு மட்டுமல்லாமல், தேவைக்கேற்ப இறந்த உயிரினங்கள்,சிறிய பறவைகள், பூச்சிகள், நத்தைகள்,ஊர்வன, மீன்கள், தவளைகள் மற்றும் அவற்றின் முட்டைகள் போன்றவற்றையும் உண்கின்றன.

தோற்றம்

ஆண் பறவை, பெண் பறவையை விட பெரிதாக இருக்கும். சிவந்த பெரிய முக்கோண அலகு மற்றும் நெற்றியில் காணப்படும் சிவப்பு கவசம்  இதன் தனித்துவம். கவசத்தின் நிறத்தை வைத்து அதன் ஆரோக்கியத்தையும், அது இனப்பெருக்கத்திற்கு தயாராக உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். உடல் முழுவதும் ஊதா, நீலம் மற்றும் சிறிது பச்சை நிறமும் கலந்திருக்கிறது. வாலடி வெள்ளை.

வளரிளம் பறவை
©Suzanne Zuckerman

படித்தறிந்தது

  • முன்பு இது Purple Swamphen (Porphyrio porphyrio) இனத்தின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. 2015-க்குப் பின்னர் Porphyrio poliocephalus தனி சிற்றினமாக மாற்றப்பட்டது. இதில் தற்போது இரு துணையினங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து இந்தியா மற்றும் தெற்காசியா வழியாக வடக்கு தாய்லாந்து வரை காணப்படுகின்றன. வட அமெரிக்க மாகாணமான ஃப்ளோரிடாவில் இவை வெகு வேகமாக பரவுவதால், அதை கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வலசை செல்லாது. வாழிடத்தின் நீர் அளவைப் பொருத்து இடத்தை மாற்றலாம்.
©BOW
  • முட்டையிடுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கூடு அமைக்கிறது. தன் எல்லைக்குள் பல கூடுகளை கட்டி, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து  முட்டையிடுகின்றன. ஆண் பெண் பறவைகள் நாணல் புல்லை  வேரோடு பிடுங்கி பயன்படுத்துகின்றன. காய்ந்த பொருட்களை பயன்படுத்துவதில்லை. பெண் பறவை கூடமைக்கிறது. நான்கிலிருந்து ஐந்து முட்டைகள் வரை இட்டு 19 லிருந்து 22 நாட்கள் அடைகாக்கின்றன. பெண் பறவைகள் பெரும்பாலும் பகல் நேரத்திலும், ஆண் பறவைகள் இரவிலும் அடைகாக்கின்றன. முட்டையில் இருந்து வெளி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னே, குஞ்சு கத்துகிறது. வெளிவரும் போது கண் திறந்து, கருநிற தூவிகளுடன், வெள்ளை நிற அலகுடன் இருக்கின்றது. இரண்டு நாட்களில் இரை தேட ஆரம்பித்தாலும், இரண்டு மாதங்கள் வரை பெற்றோர்களால் கவனிக்கப்படுகின்றன.
  •  வரிசை (Order): Gruiformes குடும்பம் (Family): Rallidae – நீர்க்கோழிகள் Porphyrio – பேரினப் பெயர் கிரேக்கச் சொல்லான porphurion (purple- ஊதா நிறம்) என்பதிலிருந்து வந்தது poliocephalus – கிரேக்கச் சொற்களான polios (சாம்பல்) மற்றும் kephalē (தலை) ஆகியவற்றிலிருந்து உருவானது. Porphyrio poliocephalus – ஊதா நிறப்பறவை; சாம்பல் நிறத் தலை கொண்டது.

Leave a Reply