ஆசிரியரின் அன்புப் பரிசு

கோளரம்பதி ஏரி பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் விஜய் சார் எங்கு செல்லலாம் என்று கேட்டவுடன் அந்த ஏரியை பற்றி கூறினேன். விஜி சார் ஏற்கனவே அங்கு சென்றிருந்ததால், கோளரம்பதி ஏரிக்கு செல்வது என்று முடிவாயிற்று.

4.15 மணியளவில் நான், என் கணவர், தேவ் மூவரும் சென்றோம். முதலில் பார்த்தது தரையில் உலாவிக் கொண்டிருந்த மேற்கத்திய வலசை வாலாட்டிகள். அருணா, விஜி, பவித்ரா, அருள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஏற்கனவே பறவை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெயில் குறைவது வரை நாட்டு கருவேல மரத்தடியில் அனைவரும் நின்றோம். Tennis பந்து போன்ற உருண்டையான அடர் மஞ்சள் நிற மஞ்சரி, சிறு சிறு கடுகுகளை கோள வடிவில் ஒட்டி வைத்தது போல் இருந்த பச்சை நிற மொட்டு,சரம் சரமாக பாசி மணியை கோர்த்தது போல தொங்கும் காய்களைக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்து இந்த மரத்தை பார்த்திருக்கிறேன். அதன் மிருதுவான காய்களை தொட்டு பார்த்துக் கொண்டே இருக்க தோன்றியது.  பொன்னாங்கண்ணி போன்ற செடி, காய்ந்த ஏரி படுக்கையை மொத்தமாக மூடி இருந்தது. 

கருவேல மரத்தடியில் ஒரு குடும்பம்

மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், நண்பர்கள் கூட்டம் ஒன்று  மற்றும் மணமக்கள்  குழுவினர் ஆகியோர் ஏரிக்கரையில் இருந்தோம்.  மிக நீண்ட வெள்ளை துணியை மரத்தில் கட்டிய பின்னணியில், காய்ந்த மரத்தில் மணமகளை படுக்க வைத்து  என்று பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். 

மரத்தின் மேல் வளரிளம் பருவத்து செம்பருந்து ஒன்று, காலில் ஒரு சிறு குச்சியை வைத்து, அதன் மேல் ஏறி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தது. மற்றொரு செம்பருந்து பறந்து வந்து காய்ந்த மரத்தின் மேல் அமர்ந்தது. பின் ஏரியின் மேல் பறந்தது. ஏரிக்கரை அருகில் அமர்ந்தது. தொலைநோக்கி இல்லாமலேயே அதன் கூரிய உகிர்கள் கொண்ட மஞ்சள் நிற கால்கள் தெரிந்தது.

 பனங்காடையொன்று மரத்தில் அமர்வதும், கீழிறங்கி இரை தேடுவதுமாக இருந்தது. ஒவ்வொரு முறை அது பறக்கும் போதும் மனம் மயக்கும் அதன் நீல நிற இறக்கைகளை பார்க்க முடிந்தது. 

 சாம்பல் தகைவிலான் ஒன்றைப் பார்த்தோம். மாலை  வெயிலில் அதன் பெரிய  அலகு வெள்ளி போல மின்னியது. அந்தப் பறவையை தான் முதன் முதலில் கௌசல்யா காட்டி தான் பார்த்ததாக பவித்ரா கூறினார். தொலைநோக்கியில் முதன்முதலில் பார்த்தது, முதலில் கவனித்த பறவை, கூட்டில் அமர்ந்திருந்தது, அதன் தனித்த நடத்தையை அறிந்தது, மிக அருகில் பார்த்தது, பிடித்த பறவை, பார்க்க நினைக்கும் பறவை என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்படிப்ப்ட்ட காரணங்களால், சில பறவைகள் நமக்கு நெருக்கமாகி விடுகின்றன. பறவை ஆர்வலர்களால்  மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய உணர்வு  இது. 

 மழைக்காலம் என்பதால் நிறைய தட்டான்கள் வானில் பறந்து கொண்டு இருந்தன. நமக்கு அவை எல்லாமே தும்பிகள் தான். பூச்சியியலாளர் பார்த்தால் அதிலும் பல இனங்கள் இருப்பதை கூறுவார். கூட்டமாக பனை உழவாரங்கள் வானில் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. அடர் பழுப்பு நிறத்தில்  பெரிய உழவாரன்கள் இருந்ததன. அவை வேகமாக பறந்த போதிலும், அதன் வாலடியில் இருந்த வெள்ளை பட்டியை விஜய் சார் கவனித்தார். அது Blyth’s Swift என்றார்.  

 கூட்டமாக மேற்கத்திய வலசை வாலாட்டிகள் தரையில் வாலாட்டியபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தன. ஒரு கல்லின் மேல் அமர்ந்து தூவிகளை நீவிக்கொண்டிருந்த வாலாட்டியை பார்த்தோம். வெளிச்சம் குறைந்து வரும் நேரத்தில், தரையில் இருந்து அவை மரத்தின் மேல் சென்று அமர்ந்தன.

 புள்ளி ஆந்தையின் குரல் முதலில் கேட்டது. நண்பர் அதை தொலைநோக்கில் கண்டுபிடித்த பின், Scope ல் பார்த்தோம். மரமோடு மரமாக சிறிது நேரம் தலையை  திருப்பியபடி அமர்ந்திருந்தது. அதன் மஞ்சள் நிற பெரிய கருவிழிகளையும், இறக்கையில் இருக்கும் புள்ளிகளையும் பார்த்தோம். 

குயில், செம்மூக்கு ஆள்காட்டி ஆகியவற்றின் குரல் கேட்டது. கூட்டமாக கிளிகள் கூவிக்கொண்டே பறந்தன. 

 சிவாத்மிகா கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். தூக்கி வைக்கக் கூடாது என்று எங்களுக்கு தெளிவு படுத்தினார். அவ்வப்போது நீருக்குள் பாய தயாராவார். கவனித்து  இந்தப்புறம் கொண்டு வந்து விட்டு விட வேண்டும். அவர் முக பாவனைகளுக்கு நான் தீவிர ரசிகை. பிரதிக்ஷாவின் எருக்கன் செடி ஆராய்ச்சி குறித்து கேட்டேன். பட்டாம்பூச்சிகள், வெட்டுக்கிளி மற்றும் Milkweed Bug ஆகியவை அந்த செடிக்கு வருவதாக கூறினார். 

மலர் மெத்தையில் இரு பூக்கள்

 செம்மார்பு குக்குருவானின் கொல்லன் உலைக்களத்தில் தொடர்ந்து சுத்தியலால் அடிப்பது போல ஒலிக்கும் குரலை கேட்டோம்.  பிரதிக்ஷா அதை கண்டுபிடித்துக் கூறினார். பொந்துக்குள் அமர்திருந்த மற்றொரு குக்குருவானை அருள் Sir பார்த்தார். தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, கழுத்தை திருப்பி சுற்றிலும் பார்த்தபடி அமர்ந்திருந்தது. அதிகபட்ச Zoom ல் வைத்துப் பார்த்தோம். அதன் தனித்துவமான மீசை, கண்ணைச் சுற்றிலும் உள்ள மஞ்சள் நிற வளையம், செம்மார்பு, அகலமான அலகு ஆகியவற்றை நன்றாக பார்க்க முடிந்தது.

பொந்திலும் நினைவிலும் நுழைந்த செம்மார்பு குக்குருவான்

கம்பி வேலி (Barbed fence) போல அதன் மீசை இருப்பதால், அதன் பெயர் Barbet என்று விஜய் சார் கூறினார். தேவ் அவருக்கு நத்தை ஓடு ஒன்றைக் கொடுத்த போது, பறவைகள் நத்தையை மட்டுமல்ல, இனப்பெருக்க காலத்தில் நத்தை ஓட்டையும் கால்சியம் தேவைக்காக உணவாக உண்ணும் என்றார். வானில் பறந்து சென்ற நான்கு நீர் காகங்களை  பார்த்தபோது, அவை சின்ன நீர்காகம் என்றும், அவை சிறகடிக்கும் விதத்திலிருந்தும், பறக்கும் போது  தலையை நேராக வைத்திருக்கும் தோரணையில் இருந்தும் அவற்றை அடையாளம் காணலாம் என்றார். ஆசிரியர் அருகில் இருக்கும்போது, நம்மை அறியாமலேயே கற்றல் நிகழ்கிறது. 

Scope ல் பறவை பார்ப்பது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கிறது. அதை வாங்கியதோடு மட்டுமல்லாமல், அனைத்து இடத்திற்கும் சிரமம் பார்க்காமல் எடுத்துக் கொண்டு வரும் ஆசிரியருக்கு நன்றி. மறக்க முடியாத  நினைவுகளோடு,  பழுப்பு கீச்சானிடம் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினோம். 

 பறவை பட்டியல்: https://ebird.org/checklist/S401597477

இடம்:கோளரம்பதி ஏரி

தேதி: 11.10.2026

One response to “ஆசிரியரின் அன்புப் பரிசு”

  1. தூவித்தோழர்கள்-அட்டவணை – Vishnupuram Birding Blog Avatar

    […] ஆசிரியரின் அன்புப் பரிசு […]

One thought on “ஆசிரியரின் அன்புப் பரிசு”

Comments are closed.